மூன்றைத் தவிர்த்து மூன்றைப் பேணி நடப்போம் – 02

بسم الله الرحمن الرحيم

மேலும் நபியவர்கள் இனங்காட்டிய அல்லாஹுத்தஆலா எம்மத்தியில் வெறுக்கக்கூடிய முதல் விடயம் சொல்லப்படக்கூடிய தகவல்களை விசாரணை செய்யாமல் கதைப்பதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: "விசுவாசிகளே! (ஃபாஸிக் எனும்) தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால், (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமுகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்துவிடாதிருப்பீராக! (அதன் உண்மையை அறிவதற்காக அதனைத் தீர விசாரணை செய்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்!". (அல்ஹுஜ்ராத்: 6)

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: "தான் செவிமடுக்கும் விடயங்களையெல்லாம் கதைப்பது ஒரு மனிதனுக்குப் பாவம் கிடைப்பதற்குப் போதுமானதாகும்". (அபூதாவுத்)

இப்படியான பாவம் சமுக வலையமைப்புக்களில் பரவலாக இடம்பெறுவதை அவதானிக்கலாம். தமக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை ஊர்ஜீதம் செய்யாது உடனே பரப்பக்கூடிய நிலையிலேயே எம்மில் பலர் உள்ளனர்.

எனவே, நாம் எந்தவொரு விடயத்தப் பற்றிப் பேசுவதாக இருந்தலும் பேசுவற்கு முன் சற்று சிந்தனை செய்ய வேண்டும். அதில் நலவைக் காண்பீர்களென்றால் அதனை கதைக்கக் கூடியவர்களாகவும், நலவைக் காணாத போது அதனைத் தவிர்கக் கூடியவர்களாகவும், நலவுள்ளதா? அல்லது கெடுதியுள்ளதா? என்று அறியாத போது அதனைப் பேசாமல் இருப்பதுவுமே சாலச் சிறந்ததாகும். சில நேரம் இப்படியான விடயத்தைப் பேசுவதால் கெடுதி உண்டாவதற்கு வாய்ப்புள்ளது என்பதினாலாகும். இவ்வறிவுறுத்தலை இமாம் ஷாபி அவர்கள் எமக்கு வழங்கியுள்ளார்கள்.

நபியவர்கள் கூறினார்கள்: "யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்டுள்ளாரோ, அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும் அல்லது, மௌனமாக இருந்து கொள்ளட்டும்". (புகாரி)

அல்லாஹ் எமக்கு மத்தியில் வெறுக்கக்கூடிய அடுத்த விடயம் அவசியமின்றி அதிகமாகக் கேள்வி கேட்பதாகும். இப்படி அதிகமாகக் கேள்வி கேட்டதின் காரணமாகவே எமக்கு முன்வாழ்ந்தவர்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோன்று, அல்லாஹ் எம்மத்தியில் வெறுக்கக்கூடிய அடுத்த விடயம் பணத்தை வீண்விரயம் செய்வதாகும். அல்லாஹ் எமக்கு செல்வத்தை நிர்வகிப்பதற்காகத் தந்துள்ளான். அதனை வீண்விரயம் செய்வது குற்றமாகும். அந்த அடிப்படையில் பணத்தை ஹராமான வழியில் சம்பாதிப்பது மார்க்கம் இது விடயத்தில் தடுத்த ஒன்றாகும். அவ்வாறு சம்பாதிக்கப்பட்ட பணம் வீணாய் போகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

நபியவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக வட்டியானது அது எவ்வளவு தான் செல்வத்தை அதிகரித்தாலும் அதனுடைய இறுதி குறைவை ஏற்படுத்தக் கூடியதாகும்". (உம்ததுத் தப்ஸீர்)

மேலும் எமக்கு வழங்கப்பட்ட செல்வத்தை ஹராமான வழிகளில் செலவு செய்தலும் இவ்விடயத்தில் உள்ளடங்கும். அதேபோன்று, மார்க்கம் அனுமதித்தவற்றில் அளவுக்கதிகமாக செலவு செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் இந்த ஹதீஸின் மூலம் பெற்ற படிப்பினைகளைப் பிரயோசனம் அளிக்கப் போதுமானவனாக உள்ளான்.

والحمد لله رب العالمين

-    அபூ ஹுனைப்