முஸாபஹா செய்வது எப்படி? ஆண்கள் பெண்களுக்கு முஸாபஹா செய்யலாமா?

வினா:

முஸாபஹா செய்வது எப்படி? ஆண்கள் பெண்களுக்கு முஸாபஹா செய்யலாமா?

விடை:

நாம் அன்றாடம் செய்யும் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் அவைகளில் இரண்டு நிபந்தனைகள் கட்டாயம் இருக்க வேண்டும். முதலாவதாக அல்லாஹ்வுக்காக செய்தல் என்ற நிய்யத் இருக்க வேண்டும். அடுத்ததாக நாம் செய்யும் அந்த இபாதத் நபிவழிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் ஒன்று இல்லாவிட்டாலும் எமது இபாதத் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இன்னும், அல்லாஹ்வை அவனுக்காகவே வணக்கத்தை கலப்பற்றதாக ஆக்கியவர்களாக (அனைத்து தீயவழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால்) சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவே அன்றி ஏவப்படவில்லை. (அல்பய்யினா: 5)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும். (புஹாரீ, முஸ்லிம்)

இந்த இரண்டு ஆதாரங்களும் மேற்குறிப்பிடப்பட்ட இரு நிபந்தனைகளுக்குமான ஆதாரங்களாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களுக்கு காட்டித்தந்த ஒரு வணக்கமே முஸாபஹா செய்வதாகும். முஸாபஹா செய்யும் நாம் அதை அல்லாஹ்வுக்காக கூலியை எதிர்பார்த்தே செய்ய வேண்டும். அதேபோல் நபிவழிக்கு உட்பட்ட விதத்திலேயே செய்ய வேண்டும்.

இன்று அதிகமான முஸ்லிம்கள் இரு கைகளாலும் முஸாபஹா செய்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால், இது சுன்னாவுக்கு மாற்றமான ஒரு செயலாகும். இரு கைகளால் முஸாபஹா செய்பவர்களிடம் ஏன் நீங்கள் இரு கைகளாலும் முஸாபஹா செய்கிறீர்கள்? எனக்கேட்டால் ஒரு கையால் முஸாபஹா செய்வது காபிர்களின் செயலாகும் என அவர்கள் கூறுவார்கள்.

ஒரு விடயம் சுன்னாவில் இருக்கும்போது அந்த விடயம் காபிர்களால் பின்பற்றப்பட்டாலும் சுன்னா என்பதற்காக வேண்டி அதை நாம் கடைபிடிக்க வேண்டும். காபிர்களிடம் உள்ளதா, இல்லையா எனப்பார்ப்பது அவசியமற்றது. இன்று உலகில் காபிர்களின் அனைத்து மதங்களும் பெற்றோருக்கு உபகாரம் செய்வதை வரவேற்கிறது. அதற்காக வேண்டி நாம் பெற்றோர்களை தூற்றலாமா? நிச்சயமாக முடியாது. ஏனென்றால், எமது மார்க்கமும் அதை வலியுறுத்திக் கூறியுள்ளது.

இப்போது நீங்கள் ஒரு கையால்தான் முஸாபஹா செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம் உண்டா? எனக்கேட்பீர்கள். ஆம், ஆதாரம் உண்டு. அதற்கு முன்னால் முஸாபஹா என்ற சொல்லின் அர்த்தம் என்னவென்பதைப் பார்ப்போம். முஸாபஹா என்ற சொல் ஸாபஹ என்ற மூலச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். ஸாபஹ என்றால் ஒரு கையை மற்றொரு கை மீது வைப்பது என்பதே பொருளாகும். ஆகவே, இதன் மூலச்சொல்லின் பொருளையே முஸாபஹா என்பதற்கும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் இரு கைகளாலேதான் முஸாபஹா செய்ய வேண்டும் என்று கூறும் ஆலிம்களுக்கு குறித்த சொல்லில் சரியான விளக்கம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஹுதைபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஃமின் இன்னொரு முஃமினை சந்தித்து ஸலாம் கூறி அவரின் கையைப் பிடித்து முஸாபஹா செய்தால் அவ்விருவரின் பாவங்கள் மரங்களின் இலை உதிர்வதைப்போல் விழுந்துவிடும்.

இமாம் முன்திரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறும் போது: இதை இமாம் தபராணீ அல்அவ்ஸத் என்ற நூலில் அறிவித்துள்ளார். இதன் அறிவிப்பாளர்களில் எந்தக் குறையையும் நான் அறியமாட்டேன் என்கிறார்கள்.

இதே கருத்தில் வரக்கூடிய ஒரு ஹதீஸை அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளதாக அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

முன்சென்ற ஹதீஸில் கை என்ற சொல்லுக்கு உபயோகிக்கப்பட்ட அறபுச்சொல் யத் என்பதாகும். அறபியில் யத் என்றால் ஒரு கையாகும். யதானி என்றாலே இரு கைகளாகும். ஆகவே, ஒரு கையால் முஸாபஹா செய்வதே நபிவழியாகும்.

பெண்களுக்கு முஸாபஹா செய்யலாமா? முஸாபஹா செய்வது நபிவழியாகும். மேலும், ஒரு கையால் முஸாபஹா செய்வதே சுன்னாவாகும் போன்ற விடயங்களை நாம் பார்த்தோம். யாருக்கெல்லாம் நாம் முஸாபஹா செய்யலாம் என்பதையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதனடிப்படையில், அந்நியப் பெண்களுக்கு முஸாபஹா செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. ஆனால், இன்று உலகில் பெரிய மார்க்க அறிஞர் எனக்கருதப்படக்கூடிய யூஸுப் அல்கர்ளாவீ என்பவர் பெண்களுக்கு கை கொடுக்கலாம் என்று பத்வா வழங்கியுள்ளார். அல்குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவுக்கும் முரணாக அவர் வழங்கிய அநேகமான பத்வாக்களில் இதுவும் ஒன்றாகும்.

இன்று அதிகமான முஸ்லிம் ஆண்கள் அந்நியப் பெண்களுக்கு முஸாபஹா செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். திருமண வைபவங்களில் கூட முஸ்லிம் ஆண்கள் காபிரான அந்நியப் பெண்களுக்கு கை கொடுப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்த செயல் கடும் தண்டனைக்குரிய செயலாகும் என்பதை அவர்கள் அறியவில்லை. அல்லது அறிந்தும் அதிலே கவனமற்று அவர்கள் இருக்கின்றார்கள் போலும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: (இரும்பாலான) ஓர் ஊசியின் மூலம் ஒரு மனிதனின் தலையில் குத்தப்படுவது அவனுக்கு ஹலாலாகாத ஒரு பெண்ணைத் தொடுவதை விட மிகச்சிறந்ததாகும். (முஸ்னதுர்ருவ்யானீ)

ஹலாலாகாத ஒரு பெண்ணைத் தொடுவதே கடும் தண்டனைக்குரிய ஒரு செயலாகும் என்பதை இந்த ஹதீஸ் அழகாகக் குறிப்பிடுகின்றது. ஆகவே, பெண்களுக்கு முஸாபஹா செய்வதும் கூடாது.

நான் பெண்களுக்கு முஸாபஹா செய்யமாட்டேன் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் பெண்களுக்கு முஸாபஹா செய்பவராக இருக்கவில்லை என ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களும் கூறியிருக்கின்றார்கள்.

அல்லாஹ் மிக அறிந்தவன்

by: ASKI IBNU SHAMSIL ABDEEN