முகத்தில் அடிக்கப்படும் குத்துச்சண்டை ஹராம்!

بسم الله الرحمن الرحيم

ஒலிம்பிக் உட்பட பல விளையாட்டு நிகழ்வுகளில் இடம்பெறக்கூடியதே குத்துச்சண்டை விளையாட்டாகும். இச்சண்டையில் போட்டியிடும் இரு வீரர்களும் ஒருவர் மற்றவரின் முகத்தைக் காயப்படுத்துவதை நாம் பார்க்கலாம்.

அந்த அடிப்படையில் இவ்விளையாட்டு மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதாக அமைகின்றது. ஏனெனில், இன்னொரு சகோதரரின் முகத்தைக் காயப்படுத்துவது மார்க்கத்தில் ஹராமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும். (புஹாரீ: 2559, முஸ்லிம்: 6817)

மேலும், கூறினார்கள்: உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்தில் அறைய வேண்டாம். (முஸ்லிம்: 6820)

அல்ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: மார்க்க ரீதியான தண்டனைகளாக இருந்தாலும், அல்லது ஒருவரை திருத்துவதற்காக, ஒழுக்கமூட்டுவதற்காக முகத்தில் அடிப்பதும் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட தடைக்குள் உள்ளடங்கும். (பத்ஹுல் பாரீ: 5/183)

எனவே, இன்னொரு சகோதரனின் முகத்தைக் காயப்படுத்தும் இத்தகைய விளையாட்டுக்கள் ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல.