மீலாத் விழாவை சரிகாண்பவர்களின் வாதங்களும் அதற்கான அறிவுபூர்வமான பதில்களும் – 02

بسم الله الرحمن الرحيم

மூன்றாவது வாதம்:

பின்வரும் ஹதீஸை அவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடம் அதுபற்றி வினவியபோது அவர்கள் அத்தினம் தான் பிறந்த தினம் என்றும் தனக்கு வேதம் இறக்கப்பட்ட தினம் என்றும் கூறினார்கள்.

- முஸ்லிம், அஹ்மத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது பிறந்த தினத்தை இந்த ஹதீஸில் சிறப்பித்திருக்கின்றார்கள். எனவே, இத்தினத்தில் நாம் அவர்களது பிறப்பை நோன்பு அல்லது திக்ர் அல்லது ஸலவாத் அல்லது ஸதகா ஆகியவைகளை மேற்கொள்வதைக்கொண்டு கொண்டாடுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

இதற்கான மறுப்பு:

உண்மையில் நபியின் பிறப்பைக் கொண்டாடுபவர்கள் அவர்களை பின்பற்றுகின்றவர்களாக இருந்தால் அவர்கள் பிறப்பித்த கட்டளைகள் தடைவிதித்த விடயங்கள் ஆகியவற்றில் அவர்களை பின்பற்றியிருப்பதே அவர்களுக்கு மிக ஏற்றமானதாகும். அவர்கள் இத்தினத்தில் நோன்பு நோற்றார்கள். எனவே, இத்தினத்தில் நோன்பு நோற்பதுதான் மிக ஏற்றமானதாகும். ஆனால், இத்தினத்தில் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொள்ளாத ஒரு பித்அத்தையே உருவாக்கியிருக்கின்றார்கள். எனவே, அவர்களுடைய வாதம் பிழையான ஒரு வாதமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் எனது வழிமுறையினையும் நேர்வழிபெற்ற கலீபாக்களின் வழிமுறையினையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். எனவே, நான்கு கலீபாக்களில் யாராவது திங்கட்கிழமை குறித்து வரக்கூடிய அந்த ஹதீஸை நபியின் பிறப்பைக் கொண்டாடுவதற்கான ஆதாரமாக விளங்கினார்களா?

அஷ்ஷெய்க் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: சில மனிதர்கள் கருதுவதைப்போல் இந்த ஹதீஸ் நபியின் பிறப்பைக் கொண்டாடுவதை அறிவிக்கவில்லை. மாறாக, அது திங்கட்கிழமையின் சிறப்பையும் அது கண்ணியமான நாள் என்பதையுமே அறிவிக்கின்றது. ஏனென்றால், இத்தினத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது. இத்தினத்தில் தான் அவர்கள் பிறந்தார்கள். இத்தினத்தில் அல்லாஹ்விடம் அமல்கள் எடுத்துக்காண்பிக்கப்படுகின்றன. இத்தினத்தில் இருக்கின்ற சிறப்பம்சங்களை ஒரு மனிதன் அடைந்து கொண்டால் அது மிகவும் சிறப்பானதாகும். மாறாக, இதைவிட ஒன்றை அதிகரிப்பது அல்லாஹ் மார்க்கமாக்காத ஒன்றாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அது நான் பிறந்த தினமாகும் என்று கூறியது அத்தினத்தின் நோன்பின் சிறப்பை அறிவிக்கவேயாகும்.

நான்காவது வாதம்:

பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக்கொண்டு அவர்கள் நபியின் பிறப்பைக் கொண்டாடுவதை சரிகாண்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷூரா தினத்தில் யஹூதிகள் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் இது என்ன? என்று வினவினார்கள். அதற்கு யஹூதிகள் இத்தினம் ஒரு சிறந்த தினமாகும். இத்தினத்தில் அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து காப்பாற்றினான். எனவே, இத்தினத்தில் மூஸா நோன்பு நோற்றார் என்று கூறினார்கள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களைவிட மூஸாவுக்கு நான் மிகத்தகுதியானவன் என்று கூறிவிட்டு அத்தினத்தில் அவர்களும் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.

-     புஹாரீ, முஸ்லிம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் நடைபெற்ற மார்க்க ரீதியான நிகழ்வுகளுக்கு காலத்தை நோட்டமிடக்கூடியவர்களாக இருந்தார்கள். அந்நிகழ்வுகள் நடைபெற்ற காலம் வந்தால் அதனை அவர்கள் ஞாபகப்படுத்தி கண்ணியமளிப்பார்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

இதற்கான மறுப்பு:

அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதை நாம் உண்மையெனக் கூறுகின்றோம். ஆனால், எமக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மிகப்பெரிய அருட்கொடை நபி பிறப்பல்ல. மாறாக, அவர்கள் தூதராக உலகிற்கு அனுப்பப்பட்டமையே அல்லாஹ்வின் பெரிய அருட்கொடையாகும். அவர்கள் தூதராக அனுப்பப்பட்டது அவனது அருள் என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பிய போது அல்லாஹ் அவர்கள் மீது நிச்சயமாகப் பேருபகாரம் புரிந்து விட்டான். அவர் அவர்களுக்கு அவனது வசனங்களை ஓதிக்காட்டி அவர்களைப் பரிசுத்தப்படுத்தி அவர்களுக்க வேதத்தையும்  ஞானத்தையும் கற்றுக்கொடுப்போர். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.

-     ஆல இம்ரான்: 164

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறப்பைக் கொண்டாட முடியும் என்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருந்தால் அவர்கள் பூமிக்கு தூதராக அனுப்பப்பட்ட தினத்தைக் கொண்டாடுவது மிக ஏற்றமானதாக இருக்கும். அத்தினத்தைக்கூட கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியின்படி கிடைத்த ஒன்றாகும். மீலாத் விழா கொண்டாடுதவற்கு அல்லாஹ்வின் அனுமதி உண்டா?

ஐந்தாவது வாதம்:

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: முஸ்லிம்கள் எதனை நலவாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடத்திலும் நலவாகும். முஸ்லிம்கள் எதனை அசிங்கமாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடத்திலும் அசிங்கமானதாகும்.

இச்செய்தியை இவர்கள் மீலாத் விழாக் கொண்டாட்டம் சரியென்பதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றார்கள். முஸ்லிம்கள் அதனை நல்ல ஒன்றாகக் கருதியிருக்கின்றார்கள். எனவே, அது அல்லாஹ்விடமும் நல்லதாக இருக்கின்றது என்று அவர்கள் வாதிக்கின்றார்கள்.

இதற்கான மறுப்பு:

இந்த செய்தியில் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம்கள் என்பதன் மூலம் நாடியது அனைத்து முஸ்லிம்களையும் அல்ல. மாறாக, இதன் மூலம் அவர்கள் நாடியது ஸஹாபாக்களையே. ஏனென்றால், அச்செய்தியை நாம் முழுமையாகப் பார்த்தால் அதனை நாம் விளங்கிக்கொள்ளலாம். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ் அடியார்களின் உள்ளங்களைப் பார்த்தான். அடியார்களின் உள்ளங்களில் சிறந்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தை அவன் கண்டுகொண்டான். அவனே அவர்களைத் தெரிவுசெய்தான். அவனுடைய தூதைக்கொண்டு நபியாக அனுப்பினான். பின்பு அவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்திற்குப் பின்பு அடியார்களின் உள்ளங்களைப் பார்த்தான். அவருடைய தோழர்களின் உள்ளங்களை அவன் அடியார்களின் உள்ளங்களில் சிறந்ததாகக் கண்டுகொண்டான். அவர்களை அவன் அவனுடைய மார்க்கத்திற்காகப் போராடக்கூடிய அவனுடைய நபியின் அமைச்சர்களாக ஆக்கினான். முஸ்லிம்கள் எதனை நலவென்று கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் நல்ல ஒன்றாகும். அவர்கள் எதனை தீமையாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் தீமையானதாகும்.

-     அஹ்மத்

எனவே, இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹாபாக்கள் குறித்து இங்கு பேசியிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் என்பதன் மூலம் நாடப்பட்டது ஸஹாபாக்களையே ஆகும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

அதனடிப்படையில் ஸஹாபாக்கள் நலவாகக் கருதிய பல விடயங்கள் காணப்பட்டன. ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து நாற்காட்டி உருவாக்கியமை, அல்குர்ஆன் ஒன்று சேர்க்கப்பட்டமை, உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக நியமிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் அவர்கள் நலவாகக் கருதிய விடயங்களாகும்.

முஸ்லிம்களில் அதிகமானவர்கள் மீலாத் விழாவை நிராகரிக்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகவே, மீலாத் விழாவை முஸ்லிம்கள் நலவாகக் கருதிய விடயம் என்று நாம் கூறமுடியாது.

இங்கு முஸ்லிம்கள் நலவாகக் கருதியது என்பதன் மூலம் நாடப்பட்டது அவர்கள் ஏகோபித்த விடயங்களையே ஆகும் என்று இப்னுல் கைய்யிம், ஷாதிபீ, இப்னு குதாமா, இப்னு ஹஸ்ம் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே, எந்தவகையிலும் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய செய்தியில் மீலாத் விழாவுக்கு எந்த ஆதாரத்தையும் நாம் காணமுடியாது.

பள்ளிவாசல்களில் வட்டமாக அமர்ந்துகொண்டு தஸ்பீஹ், தக்பீர் கூறுவது, அதனை மக்களுக்கு ஒருவர் கூற அம்மனிதர்கள் திருப்பிக்கூறுவது ஆகியன ஒரு சில முஸ்லிம்கள் கண்ட நலவாக இருந்தன. ஆனால், இவ்வாறு திக்ர் செய்வதைவிட்டும் அவர்களை இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அபூமூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் எச்சரித்தார்கள். ஏனென்றால், இவ்வாறு திக்ர் செய்வது மார்க்கத்தில் இல்லாத ஒன்றாகும். எனவே, முஸ்லிம்கள் நல்லதாகக் கருதினார்கள் என்பதற்காக வேண்டி பித்அத்களை நாம் உருவாக்க முடியாது என்பதை இச்செய்தி எங்களுக்கு உணர்த்துகின்றது.

 -    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்