மரணித்தவரை சுமந்து செல்லும் சந்தாக் பெட்டியின் மீது கூடாரம் போன்ற ஒன்றை வைத்து மூடுவதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

விடை: மரணித்தவர் ஒரு பெண்ணாக இருந்தால் வைக்கலாம். அதிகமான மார்க்க அறிஞர்கள் அதனை விரும்பத்தக்கதாகக் கருதியுள்ளார்கள். ஏனென்றால், அது அப்பெண்னை மறைக்கக்கூடியதாக அமையும். பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பாதிமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு தன்னைப் போர்த்துமாறு வஸிய்யத் செய்தார்கள் என்ற செய்தியை குறிப்பிட்டிருக்கின்றார்கள். இவரல்லாத ஏனையவர்களும் இவ்வாறு வஸிய்யத் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஹிஜாஸ் பிரதேசத்தில் பயன்படுத்தப்படுகின்றது. நஜ்த் பிரதேசத்தில் இது அறியப்படவில்லை. யாராவது இதைச் செய்தால் அவர் நன்மை செய்துவிட்டார். அவர் கண்டிக்கப்படமாட்டார். சிலவேளை சில பெண்களுடைய ஜனாஸாக்கள் கொண்டுவரப்படும். அப்போது ஒரு மனிதன் பார்க்க விரும்பாத சில காட்சிகளைப் பார்க்க நேரிடலாம். அப்பெண்ணுக்கு மேலால் கூடாரம் போன்ற ஒரு மூடி வைக்கப்பட்டால் அது அவளை மறைத்துவிடும்.

ஆனால், ஆண்களாக இருந்தால் அதனை மறைப்பது சுன்னாவாக இல்லை. மாறாக, அவர் எவ்வாறு இருக்கின்றாரோ அதுபோன்றே இருக்க வேண்டும். ஏனென்றால், அதில் ஒரு படிப்பினை உள்ளது. அதாவது, இந்த சந்தாக்கில் இருக்கும் சடலத்தை அவரோடு நேற்று இருந்தவர்கள் பார்த்தால் பலமான படிப்பினையைப் பெறுவார்கள். எங்களிடம் அமுல்படுத்தப்படுவது போல் ஒரு போர்வையால் அவரை மறைத்தால் குற்றமாகாது.

-    பார்க்க: அஷ்ஷர்ஹுல் மும்திஃ லிப்னி உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் 5/356

-    தமிழாக்கம்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்