பெருநாள் தொழுகை எங்கு தொழப்பட வேண்டும்?

بسم الله الرحمن الرحيم

பெருநாள் என்பது மிகவும் சந்தோஷத்திற்குரிய ஒரு நாளாகும். முஸ்லிம்கள் அந்நாளில் புத்தாடை அணிந்து தொழுமிடத்திற்குச் சென்று பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு தங்கள் உறவுகளைப் புதிப்பித்துக்கொள்வது வழமையானது. இன்று இந்தப் பெருநாள் தொழுகை விடயத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் மிக முக்கியமான ஒரு விடயம் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது. அது சம்பந்தமான போதிய அறிவில்லாமல் அவர்கள் இருப்பதை நாம் காண்கின்றோம். அது என்னவென்றால், பெருநாள் தொழுகை எங்கு தொழப்பட வேண்டும்? பள்ளியிலா? அல்லது வெட்டவெளியிலா? என்பதாகும். அதைப்பற்றி சுன்னாவின் அடிப்படையிலும் இமாம்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் இது சம்பந்தமாக இடம்பெற்றுள்ள நபிமொழிகளைப் பார்ப்போம்.

1.    அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் முஸல்லா எனப்படும் தொழுமிடத்துக்கு வெளியாகக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்த ஹதீஸின் பிற்பகுதியில் அவர்கள் கூறுகின்றார்கள்: 'இந்த விடயத்தில் மனிதர்கள் தொடர்ந்திருந்தார்கள்.” (புஹாரீ, முஸ்லிம், நஸாஈ) இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முஸல்லா எனப்படும் தொழுமிடம் எங்கே இருந்தது என்பது பற்றிக் கூறும் போது: அது மதீனாவில் யாவருக்கும் அறிமுகமான ஓர் இடமாகும். அந்தத் தொழுமிடம் மஸ்ஜிதுந் நபவியிற்கு ஆயிரம் முழங்கள் தூரத்தில் காணப்பட்டது என்கிறார்கள். (பத்ஹுல்பாரீ: 2/259, 260)

இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் தங்களுடைய சுமைகளை அத்தொழுமிடத்தில்தான் வைப்பார்கள்.”

2. அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தடியை தன்னுடைய கையில் சுமந்தவர்களாக தொழுமிடத்துக்குச் செல்வார்கள். தொழுமிடத்தை அவர் அடைந்ததும் தன்னுடைய இரண்டு கைகளுக்கு மத்தியில் அந்தத் தடியை நட்டுவார்கள். அதன்பின் அந்தத் தடியை முன்நோக்கியவராக தொழுகையை நடாத்துவார்கள். ஏனெனில், தொழுமிடம் வெட்டவெளியாக இருந்தது. அங்கே சுத்ரா – மறைவு – ஆக வைத்துக் கொள்வதற்கு ஏதும் இல்லாமல் இருந்தது. (இப்னுமாஜா)

3. பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று பகீஃ எனப்படும் இடத்திற்குச் சென்றோம்.” இன்னோர் அறிவிப்பில் 'தொழுமிடத்திற்குச் சென்றோம்.” (புஹாரீ, அஹ்மத்)

4. அப்துர்ரஹ்மான் இப்னு ஆபிஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் 'நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுண்டா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்: 'ஆம். (கலந்து கொண்டிருக்கின்றேன்.) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (சொந்தம் காரணமாக) எனக்கு நெருக்கம் இல்லாதிருப்பின் சிறுவனாக இருந்த நான் நபியவர்களுடன் (பெருநாள் தொழுகையில்) கலந்து கொண்டிருக்க முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பெருநாளில் வீட்டிலிருந்து புறப்பட்டு) கசீர் இப்னு ஸல்த் என்பவரின் வீட்டருகே உள்ள அடையாளமிடப்பட்ட இடத்திற்கு வந்து தொழுகை நடாத்தினார்கள்” என்றார்கள். (புஹாரீ, முஸ்லிம்)

இது சம்பந்தமாக இமாம்களின் கருத்துக்கள் பின்வருமாறு:

1.    இமாம் பகவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'பெருநாள் தொழுகைக்காக முஸல்லா எனப்படும் தொழுமிடத்துக்கு வெளிக்கிளம்பிச் செல்வதே நபிவழியாகும். ஆனால், ஏதாவது தங்கடம் ஏற்பட்டால் பள்ளிக்குச் செல்ல முடியும்.” (ஷர்ஹுஸ் ஸுன்னா)

2. இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்கூறிய முதலாவது ஹதீஸுக்கு பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்: 'பெருநாள் தொழுகைக்காக வேண்டி பாலைவனத்திற்கு வெளிக்கிளம்பிச் செல்வது நல்லதொரு கருமமாகும். அத்தோடு, அத்தொழுகையை பள்ளியில் தொழுவதைவிட பாலைவனத்தில் தொழுவது மிகச்சிறந்ததாகும். ஏனெனில், மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது சிறப்பாக இருந்தும்கூட முஸல்லா எனப்படும் தொழுமிடத்தில் தொழுவதை நபியவர்கள் வழமையாக்கிக் கொண்டார்கள்.” (பத்ஹுல் பாரீ: 2/450)

3. அல்லாமா அல்ஐனீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்கூறிய முதலாவது ஹதீஸ் சம்பந்தமாகப் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: இந்த ஹதீஸின் மூலமாக நபியவர்கள் தொழுமிடத்திற்கு வெளியாகியுள்ளார்கள் என்பதும் பள்ளியில் தங்கடம் இன்றி தொழவில்லை என்பதும் தெளிவாகின்றது.” (பத்ஹுல் பாரீ: 6/280)

4. இப்னு ஷிஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுமிடத்திற்கு வெளியாகக்கூடியவர்களாக இருந்தார்கள். பின்பு இந்த வழிமுறையை ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ளவர்களும் எடுத்துக்கொண்டார்கள்.” (முவத்தா: 1/171)

5. இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'பெருநாள் தொழுகை முஸல்லா எனப்படும் தொழுமிடத்தில் தொழப்படுவதே நபிவழியாகும். இதனையே அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏவினார்கள். இக்கருத்தையே இமாம் அவ்ஸாஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நல்லதாகக் கருதுகின்றார்கள்.” (அல்முங்னீ: 2/229)

6. அல்லாமா இப்னுல் ஹாஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது வேறு பள்ளிகளில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு சிறப்புள்ளதாக இருக்கும்போது நபியவர்கள் இரண்டு பெருநாள் தினத்தன்றும் தொழுமிடத்திற்கே வெளியானார்கள். எனவே, இந்த விடயத்திலிருந்து பெருநாள் தொழுகை வெட்டவெளியில் தொழப்படுவதே நபிவழியாகும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.” (அல்மத்ஹல்: 283)

எனவே, அன்பார்ந்த சகோதரர்களே! நபியவர்கள் காட்டித்தந்த சுன்னாவைச் சார்ந்த இவ்விடயத்தைப் புறக்கணிக்கும் முகமாக நடந்து கொள்ளாமல் நபியவர்களை உயிரிலும் மேலாக மதிக்கக் கடமைப்பட்ட நாம் அதன் பாங்கில் செயற்பட முயற்சி எடுப்போமாக!

-     தொகுப்பு: அபூஅப்திர் ரஹ்மான் அஸ்ஹர் இப்னு அபீஹனீபா