பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதின் சிறப்புகள் – 01

بسم الله الرحمن الرحيم

பெண் குழந்தைகள் அல்லாஹுத்தஆலாவின் அருட்கொடைகளில் ஒன்றாகும். எப்போது நாம் அக்குழந்தைகளை வளர்க்கும் போது எம் மீது அல்லாஹ் விதியாக்கிய அடிப்படையில் செயலாற்றுகின்றோமோ அப்போது அவை அல்லாஹ்வின் நன்மதிப்பைப் பெற்ற அருளாக ஆகிவிடுகின்றன.

அறியாமைக் காலத்தில் இவ்வருட்கொடை கணக்கில் கொள்ளப்படாத ஒன்றாக இருந்தது. பெண் குழந்தைகளின் பிறப்பை சகுனமாகக் கருதி செயற்படக்கூடியவர்களாக அக்கால மக்கள் இருந்தனர்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "இன்னும் அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாராயங் கூறப்பட்டால், கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க, அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்ததாக ஆகிவிடுகிறது. எதனைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, அதன் தீமையினால் இழிவுடன் அதை வைத்துக் கொள்வதா? அல்லது அதை மண்ணில் புதைத்து விடுவதா? என்று (கவளைப்பட்டு, மக்கள் முன் வராமல்) சமூகத்தாரை விட்டும் மறைந்து கொள்கிறான்". (அந்நஹ்ல்: 58, 59)

இஸ்லாம் மார்க்கம் வந்த போது இத்தகைய மோசமான நிலையை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிந்தது. அதன் படி நபியவர்கள் கூறினார்கள்: "நிச்சமாக அல்லாஹ் உங்கள் மீது தாய்மார்களை நோவினை செய்வதையும், அல்லாஹ் கொடுக்கச் சொன்னதை தடுப்பதையும், தவிர்ந்து கொள்ளச் சொன்னதை கொடுப்பதையும், பெண் பிள்ளைகளை உயிருடன் புதைப்பதையும் ஹராமாக்கியுள்ளான்". (புகாரி)

இத்தகைய தடையுத்தரவைப் பிறப்பித்த இஸ்லாம், அதற்கு மாற்றமாக பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்குமாறும், அவற்றுக்கு நல்லுபகாரம் செய்யுமாறும் பணித்தது. மேலும், நாம் அவற்றைப் பேணி நடக்கும் காலமெல்லாம் பல சிறப்புகளை அடைந்து கொள்ளப் பாத்திரமானவர்களாக ஆகிவிடுவோம் என்றும் கூறத் தவறவில்லை. அந்தவிதத்தில்...

1. நபியவர்களுடன் சுவனத்தில் இணைந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தரும்.

அந்தவிதத்தில் நபியவர்கள் கூறினார்கள்: "யார் இரு பெண் குழந்தைகளுக்கு அவைகள் பருவ வயதை அடையும் வரை செலவு செய்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு இருப்போம் என நபியவர்கள் தனது இருவிரல்களை இணைத்துக் காட்டினார்கள்". (முஸ்லிம்)

மேலும், இமாம் இப்னு மாஜாவின் அறிவிப்பில், நபியவர்கள் தனது நடுவிரலையும் அதற்கு அடுத்துள்ள விரலையும் சேர்த்துக் காட்டியதாக இடம்பெற்றுள்ளது.

இச்செய்தி தொடர்பாக இப்னு பத்தால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: "இச்செய்தியைச் செவிமடுத்த அனைவர் மீதுமுள்ள கடமை, நபியவர்களுடன் சுவனத்தில் இருப்பதற்காக வேண்டி இதில் கூறப்பட்டுள்ள பிரகாரம் அமல் செய்வதாகும். மேலும், இதனைவிட மிகச் சிறந்ததோர் அந்தஸ்து மறுமை நாளில் இருக்க மாட்டாது" என்றார்கள்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அபூ ஹுனைப் (மதனி)