பெண்கள் உரிமைகளைப் பேணும் இஸ்லாம்

بسم الله الرحمن الرحيم

எங்களைப் படைத்த அல்லாஹ் - எமக்குச் செய்த அருட்கொடைகள் ஏராளம் உள்ளன . அவைகளில் விலை கொடுத்தும் வாங்க முடியாத ஓர் அருட்கொடையே இஸ்லாம் எனும் அருட்கொடையாகும் . ஒரு மனிதன் பிறந்தது முதல் மரணிக்கும் வரை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான அழகான வழிமுறைகளை இஸ்லாம் கற்றுத்தருகின்றது .

இந்த இஸ்லாம் உரிமைகள் விடயத்தில் அதிகூடிய கவனம் செலுத்தியுள்ளது . அதனடிப்படையில் ஓர் அடியான் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய உரிமைகளைப் பற்றியும் அடியார்கள் பிற அடியார்களுக்கு நிறைவேற்ற வேண்டிய உரிமைகள் பற்றியும் சொல்லித்தருகிறது . அதிலும் குறிப்பாக பெண்களுக்குரிய உரிமைகளையும் இஸ்லாம் அழகான முறையில் கூறியிருக்கின்றது . ஒரு பெண் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவளுடைய உரிமைகள் பற்றிப் பேசிய ஒரு மார்க்கம் இருக்குமாயின் அது இஸ்லாம் என்ற மார்க்கமேயாகும் . பெண்களுக்குரிய உரிமைகளை மீறுவதை பெரும்பாவங்களாக இஸ்லாம் இனங்காட்டியுள்ளது . பெண் குழந்தை பிறந்து விட்டது என்று கூறப்பட்டால் முகங்கள் கோபத்தால் சிவந்த காலம் ஜாஹிலிய்யாக் காலமாகும் . அப்பெண்பிள்ளைகளை உயிருடன் புதைத்த காலம் ஜாஹிலிய்யாக் காலமாகும் . இஸ்லாம் தோன்றி இச்செயல்கள் பெரும்பாவங்கள், தடுக்கப்பட்டவைகள் என்று பெண்கள் உரிமையைப் பற்றி பேசியது .

.அல்லாஹுதஆலா கூறுகின்றான் : " அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறினால் , அவனுடைய முகம் ( துக்கத்தால் ) கறுத்து கோபத்தை விழுங்குகிறான் . (பெண் குழந்தை பிறந்தது என ) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட நன்மாராயத்தைப் பற்றி ( வெறுப்படைந்து ) இழிவுடன் அதை வைத்திருப்பதா ? அல்லது , ( உயிருடன் ) அதை மண்ணில் புதைத்து விடுவதா ? என்று கவலைப்பட்டு மக்கள் முன் வராதும் மறைந்து கொண்டு அலைகிறான் " . ( அந்நஹ்ல் 58 , 69 )

அதேபோன்று , உலகத்தின் அலங்காரமான ஆண் மக்களை விட பெண் மக்களை பராமரித்து நல்ல முறையில் அவர்களை வளர்த்து திருமணம் செய்து கொடுப்பவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சுவனத்தில் மிக நெருக்கமாக இருப்பார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : " யார் இரு பெண் பிள்ளைகளை அவர்கள் பருவ வயதை அடையும் வரை சிறந்த முறையில் வளர்த்தெடுக்கின்றார்களோ அவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறிருப்போம் . பிறகு அவர்கள் தனது விரல்களை ஒன்றிணைத்துக் காட்டினார் " . ( முஸ்லிம் )

உறவினர்கள் விட்டுச் சென்ற சொத்தில் பெண்ணுக்கு எந்தப் பங்கும் இல்லையெனக் கூறியது அன்றைய ஜாஹிலிய்யாக் காலம் . ஆனால் , இஸ்லாம் பெண்களுக்கு அனந்தரத்தில் பங்குண்டு எனக்கூறி அவர்களுக்குரிய உரிமையைப் பாதுகாத்திருக்கின்றது . அல்லாஹுதஆலா கூறுகின்றான் : " உங்கள் சந்ததியில் ( ஆணும் , பெண்ணும் இருந்தால் ) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது , போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான் ” . ( அந்நிஸா : 11 )

மார்க்க அறிவைத் தேடிப் படிப்பது ஆண்களுக்குரிய உரிமை மட்டுமன்றி பெண்களுக்குமுரிய உரிமையாகும் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "அறிவைத்தேடிச் செல்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும் " . . ( இப்னு மாஜா ) . பெண்களுக்கு அறிவைக் கற்றுக்கொள்ளுமாறும் , அவர்களுக்குக் கற்பிக்குமாறும் இஸ்லாம் வலியுறுத்தியிருக்கின்றது . நற்செயல்களுக்கு கூலி வழங்கப்படுகின்ற போதும் ஆண் , பெண் என்ற வேறுபாடு இஸ்லாத்தில் பார்க்கப்படுவதில்லை . ஆண்களுக்குரிய கூலியே பெண்களுக்கும் எனக் கூறுகிறது அல்குர்ஆன் . அல்லாஹுதஆலா கூறுகின்றான் : " ஆணாயினும் , பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை ( இம்மையில் ) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம் . அன்றி ( மறுமையிலோ ) அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம் ” . ( அந்நஹ்ல் : 97 )

இஸ்லாம் கண்ணியப்படுத்திய பெண்ணை கண்ணியப்படுத்துமாறும் , அவர்களுடன் கனிவாக நடந்துகொள்ளுமாறும் கணவன் மார்களுக்கு இஸ்லாம் கட்டளை பிறப்பித்துள்ளது . அல்லாஹுதஆலா கூறுகின்றான் : " நம்பிக்கையாளர்களே ! யாதொரு பெண்ணை ( அவள் உங்களை விரும்பாது வெறுக்க , பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல . மேலும் , பகிரங்க மாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி ( உங்கள் மனைவியாக வந்த ) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் , சிலவற்றை எடுத்துக்கொள்வதற்காக அவர்களை ( உங்கள் வீட்டில் ) நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள் ! மேலும் , நீங்கள் அவர்களுடன் கண்ணியமான முறையில் ( சகிப்புத் தன்மையுடனும் ) நடந்து கொள்ளுங்கள் ! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே ! ஏனென்றால் , நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் பல நன்மைகளை வைத்திருக்கலாம் ” . ( அந்நிஸா : 19 )

மேலும் , இவ்வசனத்தில் அவர்களின் மனப் பொருத்தமின்றி பலவந்தப்படுத்தி அவர்களை வைத்துக் கொள்வதையும் இஸ்லாம் கண்டித்துள்ளது . அதற்காக “ பஸ்கு ” எனும் கணவனைப் பிரியும் உரிமையையும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கின்றது .

ஒரு பெண்ணின் கணவர் மரணித்து விட்டால் அப்பெண்ணை ஒரு அற்பமான பொருளாக எண்ணிய ஜாஹிலிய்யா மக்களிடம் இஸ்லாம் தோன்றி அப்பெண்ணுக்கு ஒரு சிறந்த வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தது . அப்பெண்ணுடைய இத்தா காலம் முடிவடைந்த பின் மீண்டும் அப்பெண்ணுக்கு இஸ்லாம் மறுமணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது . அல்லாஹுதஆலா கூறுகின்றான் : " " உங்களில் எவரேனும் மனைவி களை விட்டு இறந்தால் , மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் எதிர்பார்த்திருக்கவும் . ( இதற்கு " மரண இத்தா ” என்று பெயர் . ) ஆதலால் அவர்கள் தங்களுடைய ( இத்தாவின் ) தவணையை முடித்துவிட்டால் ( அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள் ) தங்களை ஒழுங்கான முறையில் ( அலங்காரம் ) ஏதும் செய்து கொள்வதைப்பற்றி குற்றமில்லை . நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான் ” . ( அல்பகறா : 234 )

ஒரு பெண் தாயாக மாறுகின்றபோது பிள்ளைகள் சிறந்த முறையில் தோழமை கொள்வதற்கு அவளை மிகத் தகுதியுள்ளவளாக இஸ்லாம் மாற்றியிருக்கின்றது . ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து - " மக்களில் தோழமை கொள்வதற்கு மிகவும் தகுதியானவர் யார் ? ” என்று கேட்க , மூன்று முறை ' உனது தாய் ' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் ” . ( புஹாரி , முஸ்லிம் )

அந்தாய் வயோதிபத்தை அடைந்தவுடன் அவளை ஒதுக்காமல் அவளுக்கு பணிவிடை செய்யும் படியும் இஸ்லாம் ஏவுகின்றது . அவளுக்கு நோவினை செய்வது இணைவைப்புக்கு அடுத்த படியாக உள்ள பெரும்பாவம் என்றும் இஸ்லாம் எச்சரிக்கின்றது . அல்லாஹுதஆலா கூறுகின்றான் : " உங்களது இரட்சகன் தன்னைத் தவிர ( மற்றெவரையும் ) வணங்கக் கூடாதென்று ( கட்டளை இட்டிருப்பதுடன் ) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான் . உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை விரட்ட வேண்டாம் . அவர்களுக்கு ' சீ ' என்றும் சொல்ல வேண்டாம் . அவர்களிடம் ( எதைக் கூறிய போதிலும் ) மிக்க மரியாதையாக ( வும் அன்பாகவுமே ) பேசுங்கள் " . ( அல் இஸ்ரா : 23 ) .

அத்தாய் மரணித்த போதும் அத்துடன் அவளை மறந்து விடாது அவளின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யும்படி இஸ்லாம் ஏவுகின்றது . நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது பெற்றோருக்குச் செய்த பிரார்த்தனையை அல்குர்ஆன் குறிப்பிட்டிருக்கின்றது . " எனது இரட்சகனே ! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும் , நம்பிக்கை கொண்டவனாக என்னுடைய வீட்டில் நுழைந்தவனுக்கும் , ( வீட்டில் நுழையாத மற்ற ) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் , நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக ! ” என்று நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தித்தார்கள் . ( நூஹ் : 28 )

வேறு மதங்களில் சொல்லப்படாத இவ்வுரிமைகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கின்றது . ஒரு பெண் முஸ்லிமாக வாழ்ந்தால் அவளுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் இதைவிடவும் அதிகம் உள்ளன .  எனவே இஸ்லாம் கூறும் இவ்வாறான உறிமைகளுக்கு முன்னுரிமை வழங்குவோமாக!

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் !