பெண்கள் அலங்காரம் – 09

بسم الله الرحمن الرحيم

முடிக்கு சாயம் பூசுதல்

முடிக்கு சாயம் பூசி நிறம் மாற்றுவது தொடர்பாக சில செய்திகள் நபியவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளன. அவற்றுள் பின்வரும் நபிமொழிகளை இனங்காட்டலாம்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தியில் நபியவர்களிடத்தில் அபூகுஹாபா மக்கா வெற்றியின்போது கொண்டுவரப்பட்டார். அவருடைய தலை ஸகாமா என்ற இனத்தைச் சேர்ந்த ஒருவகை பூவின் நிறமாக வெள்ளை நிறத்தால் காணப்பட்டது. அதற்கு நபியவர்கள்: "இதனை ஏதாவது ஒன்றைக் கொண்டு மாற்றிவிடுங்கள்! கறுப்பைத் தவிர்ந்து கொள்ளுங்கள்!” என்றார்கள். (முஸ்லிம்)

மேலும் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தியில் நபியவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக யூதர்களும் கிறிஸ்தவர்களும் சாயம் பூசுவதில்லை. எனவே, நீங்கள் அவர்களுக்கு மாற்றம் செய்யுங்கள்.” (புகாரி, முஸ்லிம்)

இன்னும் நபியவர்கள் பகர்ந்ததாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு கூட்டம் இறுதிக்கால கட்டத்தில் வரும். அவர்கள் (கறுப்பில் காட்சியளிக்கும்) புறாவின் நெஞ்சுப் பகுதியைப் போன்று கறுப்பு நிறத்தால் நிறம் பூசுவார்கள். அத்தகையவர்கள் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.” (அபூதாவுத்)

குறிப்பு: நாம் இங்கு புறாவின் நெஞ்சுப் பகுதி என்று மொழிபெயர்த்த இடத்தில் حواصل الطير என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இவ்வார்த்தையின் மூலம் புறாவினுடைய இறைப்பை நாடப்படுகின்றது. ஆயினும், இங்கு புறாவின் கறுப்பு நிறமான நெஞ்சுப் பகுதி நாடப்படுகின்றது. (அவ்னுல் மஃபூத்)

முஹம்மத் இப்னு இப்றாஹீம் ஆலிஷெய்க் அவர்கள் கூறினார்கள்: "முடி சாயம் பூசப்படுகின்ற விடயத்தில் பின்வரக்கூடிய அமைப்பில் விரிவான ஒரு விளக்கம் உள்ளது. நரைத்த முடியை கறுப்பல்லாத நிறத்தைக் கொண்டு மருதாணி மற்றும் அறபியில் அழைக்கப்படும் வஸ்மா, கத்ம், சுப்றா போன்ற மூலிகைகளைப் பயன்படுத்தி சாயம் பூசுவது விரும்பத்தக்கதாகும். மாறாக, கறுப்பைப் பயன்படுத்தி சாயம் பூசுவது கூடாது. ஏனெனில் நபியவர்கள் கூறினார்கள்: "நீங்கள் இந்த நரையை மாற்றுங்கள்! மேலும், அதனில் கறுப்பைத் தவிர்ந்து கொள்ளுங்கள்!” இக்கட்டளை ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதாகும்.

நரைத்த முடியல்லாதவர் அல்லாஹ் அதனை எந்த அமைப்பில் படைத்துள்ளானோ அந்த அமைப்பிலேயே தரித்திருக்கச் செய்ய வேண்டும். அதனுடைய நிறம் அலங்கோலமாகக் காணப்படுமிடத்து அன்றி அவர் அதனுடைய நிறத்தை மாற்றமாட்டார். எனவே, அதன் போது அவர் அலங்கோலத்தை நீக்கக்கூடிய ஒன்றைக் கொண்டு பொருத்தமான நிறத்திற்கு சாயம் பூசுவார். மாறாக, இயற்கையான முடியை உடையவர் அவரில் அலங்கோலம் காணப்படாதவிடத்து அவர் அதனை அதனுடைய இயற்கையான அமைப்பில் விட்டுவிடுவார். ஏனெனில், அவருக்கு அதில் மாற்றம் செய்வதில் எவ்விதத் தேவையும் இருக்காது.

மேலும், அவருடைய சாயம் பூசுதலானது காபிரான பெண்களுக்கு ஒப்பாவதாகவோ, இறக்குமதி செய்யப்பட்ட பழக்க வழக்கமாகவோ காணப்பட்டால் அது ஹராம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அவ்வாறு சாயம் பூசியதானது ஒரே அமைப்பில் அல்லது பல்வேறுபட்ட அமைப்புக்களில் (அறபியில் தம்யீஷ் என்று அழைக்கப்படுவதைப் போன்றதாகவும்) இருக்கலாம்.” (பதாவா ஸீனா வதஜ்மீலின் நிஸா)

மேலும், சவூதி அரேபியாவின் அல்லஜ்னதுத் தாயிமா என்ற சங்கம் முடிக்கு சாயம் பூசுவதின் சட்டம் குறித்து வினவப்பட்டது. அப்போது அதன் பதில் பின்வருமாறு காணப்பட்டது: "ஒரு பெண் தனது முடியைக் கழுவுவதும் அதனை வாருவதும் மற்றும் அதனைச் சீர் செய்யக்கூடிய பொருட்களை அதில் இடுவதும் குற்றமற்ற செயல்களாகும். அவ்வாறு அதனில் நரைத்த தன்மை அல்லது அலங்கோலமான நிறம் போன்றன தென்பட்டால் அவர் கறுப்பல்லாத நிறத்தைப் பயன்படுத்தி சாயம் பூசுவார். மாறாக, அதனுடைய நிறம் வழமையான நிறமாக இருந்து அதனில் நரைத்த தன்மையோ அலங்கோலமோ காணப்படாத போது அவர் அதனுடைய அடிப்படை நிறத்தை மாற்றக்கூடிய ஒன்றைக் கொண்டு சாயம் பூசாது இருப்பார். ஏனெனில், நிச்சயமாக இது இருட்டடிப்பும் அல்லாஹ்வின் படைப்பமைப்பை மாற்றக்கூடியதுமாகும்.” (பதாவா அல்லஜ்னதித் தாயிமா 17/130)

தற்காலத்தில் உபயோகிக்கப்படும் நவீன சாயங்களில் தீய பெண்களுக்கு ஒப்பாகும் நடவடிக்கை காணப்படுவது ஒரு புறமிருக்க அவற்றில் முடிக்கும் தலையின் தோலுக்கும் பாதிப்புக்கள் உள்ளன என்று அய்மன் முஹம்மத் உஸ்மான், முனா அப்துல் கப்பார் போன்ற தோல் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் கூறுகின்றார்கள். (ஸீனதுல் மர்ஆ பைனத் திப்பி வஷ்ஷரஇ)

மேலும், பத்வா வழங்குவதற்குப் பொறுப்பான அல்லஜ்னதுத் தாஇமா என்ற சங்கத்திடத்தில் தலைக்கு ஷம்பு மற்றம் எண்ணை வகைகளை உபயோகிப்பதின் சட்டம் யாது? என்று கேட்கப்பட்ட போது அது வழங்கிய தீர்ப்பாவது: "அடிப்படையில் ஷம்பு மற்றும் தலைக்கு உபயோகிக்கும் எண்ணை வகைகளைப் பயன்படுத்துவது ஹலாலாகும். அவ்வாறு பயன்படுத்துவதைவிட்டும் தடுக்கக்கூடிய ஒரு தடை உறுதியாக வந்தாலே அன்றி. உதாரணமாக: ஹராமான ஒரு பதார்த்தம் அதில் உள்ளடங்கியிருப்பது அல்லது அதில் நலவைவிடக் கெடுதிகள் அதிகரித்துக் காணப்படுதல் அல்லது நலவும் கெடுதியும் சம அளவாகக் காணப்படுதல் போன்ற நிலைகளைக் குறிப்பிடலாம். ஏனெனில் நலவுகளைக் கொண்டு வருவதைவிட கெடுதிகளைத் தவிர்த்தலே முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலாகும்.” (பதாவா அல்லஜ்னதித் தாஇமா 17/135)

-   இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-   தொகுப்பு: அபூஹுனைப்