பெண்கள் அலங்காரம் – 08

بسم الله الرحمن الرحيم

பெண்கள் தங்கள் தலைமுடிகளைத் தலையில் கூட்டிக்கட்டிய நிலையில் வீட்டைவிட்டும் வெளியேறிச் செல்ல முடியுமா?

கேள்வி: ஒரு பெண் தன்னுடைய முடியைத் தனது தலைக்கு மேல் கூட்டிக் கட்டுவதின் சட்டம் யாது?

பதில்: இக்கேள்விக்கு அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு பதிலளித்துள்ளார்கள்: "தலைமுடியானது தலைக்கு மேலால் கூட்டிக் கட்டப்பட்டால் அதனை உலமாக்கள் நபியவர்களைத் தொட்டும் பதிவான, புக்த் எனும் வகையைச் சேர்ந்த சாய்ந்த இரு திமிலிகளையுடைய ஒட்டகத்தைப் போன்று முடிகளையுடைய பெண்கள் தொடர்பான ஹதீஸில் இடம்பெறும் தடை அல்லது, எச்சரிக்கைக்குள் அவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று கூறுகின்றார்கள்.

எனவே, தலைமுடியானது தலைக்கு மேல் கூட்டிக் கட்டப்பட்டால் அது தடை செய்யப்பட்டது என்றும், பிடறியில் இருக்கக் காணப்பட்டால் அதில் எவ்விதக் குற்றமும் கிடையாது என்றும் விளங்கிக் கொள்ளலாம். ஆயினும், அவ்வாறு பிடறியில் கூட்டிக் கட்டியிருக்கும் நிலையில் சந்தை போன்ற இடங்களுக்கு வெளியாகாமல் இருக்க வேண்டும். இப்படியான நிலையில் வெளிக்கிளம்பிச் செல்வது தடை செய்யப்பட்ட அலங்காரத்தினுள் உள்ளடங்குகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அது அவர் அணிந்திருக்கும் ஹிஜாபுக்கு மேலால் அலங்காரத்தை வெளிப்படுத்தும் அடையாளம் போன்று காட்சியளிக்கின்றது. மேலும், அது பித்னா உண்டாவதற்கும் வழிகோலும்”. (பதாவா ஸீனா வதஜ்மீலில் மர்ஆ / 31)

கேள்வி: ஒரு பெண் தன்னுடைய முடியைத் தனது பிடறியில் ஒன்று கூட்டிக் கட்டுவதன் சட்டம் யாது? அவ்வாறு கட்டுவதன் மூலம் சுருட்டப்பட்ட ஒரு குவியலின் தோற்றம் தலையின் பிற்பகுதியில் கட்சியளிக்கின்றது. அத்தோடு, இப்படியான பெண்கள் ஹிஜாப் அணியும் போது அவர்களின் முடியின் அமைப்பு ஹிஜாபுக்கு வெளியால் தோன்றுகின்றதே!

பதில்: இக்கேள்விக்கு அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிலளிக்கையில்: "இது ஒரு தவறான காரியமாகும். ஹிஜாப் அணிந்த பலரிடம் இத்தவறைக் காண முடிகின்றது. அவர்கள் தங்களில் முடிகளைப் பிடறியில் கூட்டிக் கட்டுகின்றார்கள். அது அவர்களுக்குப் பின்னால் தள்ளிய நிலையில் காணப்படுகின்றது. அவர்கள் அதற்கு மேலால் ஹிஜாப் அணிந்திருந்தாலும் அது தவறானது தான்! அதேநேரத்தில், ஹிஜாபின் போது பேண வேண்டிய நிபந்தனைகளில் ஒன்றுக்கு அது முரணாகவும் அமைகின்றது. அவற்றை நான் என்னுடைய ‘ஹிஜாபுல் மர்ஆ முஸ்லிமா பில் கிதாபி வஸ்ஸுன்னா’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளேன். அந்நிபந்தனைகளில் உள்வாங்கப்பட்டவைகளில் ஒன்றுதான், அணியப்படும் ஆடை உடம்பின் ஓர் உருப்பை அல்லது, அதன் ஒரு பகுதியை அடையாளப்படுத்திக் காட்டக் கூடாது என்பதுவாகும்.

எனவே, இந்நிபந்தனையின் அடிப்படையில் ஒரு பெண்மணிக்குத் தனது தலைமுடியைத் தலைக்கு மேலால் அல்லது, தலையின் ஒரு புறத்தில் கூட்டிக்கட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்லாம். மேலும், தான் வேண்டுமென்று இவ்வாறு காட்டவில்லை அல்லது, என்னுடைய முடி மென்மையாக இருப்பதால் தான் நான் இவ்வாறு கட்டினேன் என்று சாக்கு போக்கு கூறாமல் அதனை அவிழ்த்து தொங்கவிடச் செய்ய வேண்டும்” என்கிறார்கள்.

(மஸாயில் நிஸாஇய்யா முஹ்தாரா மின் பிக்ஹில் அல்லாமா அல்பானி / 117)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

-    தொகுப்பு: அபூஹுனைப்