பெண்கள் அலங்காரம் – 06

بسم الله الرحمن الرحيم

முடியைக் கூட்டிக் கட்டுவதும் அதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்குமான சட்டதிட்டங்கள்

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்களிடத்தில் முடியைக் கூட்டிக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் நூல் வகைகள் (hair bows) மற்றும் கிளிப் (hair clips) வகைகள் போன்றன தொடர்பான சட்டம் யாது? என்று வினவப்பட்ட போது அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு...

"பெண்கள் தங்கள் முடிகளைக் கூட்டிக்கட்ட நாடி நூல் அல்லது கிளிப் போன்றவற்றைப் பயன்படுத்தித் தமது தலைகளின் அளவை பெரிதுபடுத்திக் காட்டும் செயல் அனுமதிக்கத்தக்கதன்று. அவ்வாறு சேர்த்துக் கட்டப்பட்ட முடியானது தலையின் உச்சிப் பகுதியிலோ அல்லது, அதன் ஏதேனும் ஒரு பகுதியிலோ அமையப் பெற்று தோற்றத்தில் இரு தலைகளைப் போன்று காட்சியளிப்பதாக இருந்தாலும் சரியே! ‘புக்த்’ எனும் வகையைச் சேர்ந்த இரு திமில்களைக் கொண்ட ஒட்டகங்களைப் போன்று தங்களது முடிகைளை உயரக்கட்டி நடமாடுகின்றவர்கள் குறித்து மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறின்றி, தலையின் அளவைப் பெரிதுபடுத்திக் காட்டாத அமைப்பில் காணப்படும் நூல்களைப் பொறுத்தளவில் முடியைச் சீர்செய்வதற்கு அவற்றில் நாட்டம் காணப்படுமிடத்து சில அறிஞர்களின் கூற்றுக்கமைய அவற்றை உபயோகிக்க முடியும். ஆயினும், அவற்றைத் தவிர்ந்து கொள்வதே ஏற்றமாகும். இம்முடிவே குறித்த விடயத்தில் காணப்படும் கருத்துவேறுபாட்டில் இருந்து வெளியேறுவதற்கு உறுதுணையாக இருக்கும். சில அறிஞர்கள் மார்க்கத்தின் விலக்கல்களைக் கருத்திற் கொண்டு எந்த வகையான நூலாயினும் அவற்றைப் பயன்படுத்தி முடிகளை இணைத்துக் கட்டுவதற்குத் தடை விதித்துள்ளார்கள்.

அவ்வாறு பயன்படுத்தப்படும் கிளிப் மற்றும் முடிகளை அழுத்திப் பிடிக்கும் உபகரணங்களில் மிருகங்களின் உருவங்கள் அல்லது, இசைக் கருவிகளின் சிறிய வடிவங்கள் காணப்படுமிடத்து அவற்றையும் உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில், உருவங்களானது ஆடைகள் மற்றும் அதுவல்லாதவற்றில் பயன்படுத்தப்படுவது ஹராமாகும்.

மேலும், கேலிக்கைகளுடன் தொடர்புடைய கருவிகள் அவசியம் அழிக்கப்பட்டாக வேண்டும். அவ்வாறு கேலிக்கைகளுடன் தொடர்புடைய கருவிகளின் வடிவங்களைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவது அவற்றுடன் தொடர்புடைய பாவச் செயல்களை அலங்கரித்துக் காட்டக்கூடியதாகவும் அவற்றின் பால் தூண்டக்கூடியதாகவும் அவற்றை ஞாபகப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்”. (பதாவா ஸீனா வதஜ்மீலின் நிஸா : 32)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

-    அபூஹுனைப்