பெண்கள் அலங்காரம் – 05

بسم الله الرحمن الرحيم

தலைமுடியை பின்னல்களாகப் பின்னுதல்

இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹ் எனும் நூலில் உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் அறிவிப்பதாவது: (உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:) "நான் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சென்று,) அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நான் தலையில் கனத்த பின்னல்களைக் கொண்ட பெண்மணியாக இருக்கின்றேன். எனவே, நான் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது அவற்றை அவிழ்த்துவிட வேண்டுமா? எனக் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: வேண்டாம்! (அதன்போது) உன் தலையில் மூன்று கையளவு நீரை ஊற்றிவிடு! பின்னர், உன் மீது நீரை ஓட விட்டால் மாத்திரம் உனக்குப் போதுமானதாகும், அதன் பிற்பாடு நீ தூய்மையடைந்துவிடுவாய்! எனக் கூறினார்கள்.”

தலையில் பின்னல்கள் காணப்படுவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்களிடத்தில் வழமையான ஒன்றாக இருந்தது என்பதை இந்த ஹதீஸ் எமக்கு உணர்த்துகின்றது. மேலும், அச்செயல் முறை குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்விதத் தடையையும் பிறப்பிக்கவுமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

பொதுவாகப் பின்னல் என்பது, தலையில் காணப்படக்கூடிய முடியை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அவற்றை ஒன்றுடன் ஒன்று இணையக்கூடிய விதத்தில் பின்னப்படுவதைக் குறிக்கிறது. (லிஸானுல் மீஸான்)

இவ்வாறு தலைமுடியைப் பின்னும் போது ஒரு பின்னலாக மாத்திரம் பின்னுவது அனுமதிக்கப்பட்டதா? என்பது குறித்து ஒரு வினா அல்லஜ்னதுல் தாஇமா என்ற சங்கத்திடம் வினவப்பட்டது. அதன்போது அது: "அவ்வாறு ஒரு பின்னலாக அல்லது பல பின்னல்களாகப் பின்னுவதும் அவை பி;ன்னப்பட்ட அல்லது பி;ன்னப்படாத நிலையில் முதுகின் மேல் தொங்கவிடப்படுவதும் (திரையால் அவை) மறைக்கப்பட்ட நிலையில் குற்றமற்ற செயலாகக் கருதப்படும்” என்கிறது. (பதாவா அல்லஜ்னதித் தாஇமா: 17/127)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அபூஹுனைப்