பெண்கள் அலங்காரம் – 03

بسم الله الرحمن الرحيم

பெண்களுக்கு தங்கள் முடிகளை முழுமையாக வழித்துக் கொள்ள அனுமதியுள்ளதா?

தலையை முழுமையாக வழித்தல் பெண்களுக்கு உரியதன்று, நிச்சயமாக தலை முடியைக் குறைப்பதே அவர்களுக்குரியதாகும் என நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

-     அபூதாவுத், அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்

சவூதி அரேபியாவின் அல்லஜ்னதுத் தாஇமா என்ற சபையிடத்தில் பெண்கள் தலையை முழுமையாக வழிப்பதன் சட்டம் யாது? என்று வினவப்பட்ட போது, நிர்ப்பந்தமான சூழ்நிலையில் அன்றி பெண்களுக்கு தலை முடியை வழிக்க முடியாது என்று பதிலளித்தது.

-     பதாவா அல்லஜ்னதுத் தாஇமா: 5/196

பெண்களுக்கு முடியைக் கத்தரித்துக்கொள்ள அனுமதியுள்ளதா?

நபியவர்களின் மனைவிகள் தங்கள் தலைமுடிகள் அடர்த்தியான அமைப்பை அடைவதற்காக அவற்றில் இருந்து ஒரு பகுதியை எடுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என அபூஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

-     முஸ்லிம்

அல்காழி இயாழ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செயற்பாடு தொடர்பாகக் கூறும் போது: ஒரு வேளை நபியவர்களின் மனைவிகள் இத்தகைய செயலில் நபியவர்களின் மரணத்தின் பின் ஈடுபடக்கூடியவர்களாக இருந்திருப்பார்கள். அலங்காரத்தைத் தவிர்த்தல், நீண்ட முடியில் நாட்டமின்மை, அவற்றைப் பராமரிக்கப் போதிய வசதியின்மை போன்ற காரணங்கள் அவர்களின் இச்செயற்பாட்டிக்குக் வழிவகுத்திருக்கலாம் என்கிறார்கள்.

-     ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்

பெண்கள் முடியைக் குறைத்துக் கொள்ளல் தொடர்பான மார்க்கத்தீர்ப்புக்கள்

இவ்விடயம் குறித்து அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: அலங்கார நோக்கமின்றி நோய் அல்லது முடியைப் பராமரிக்கத் தேவையான வசதியின்மை போன்ற நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் அன்றி பெண்களுக்கு தங்கள் முடிகளைக் குறைத்துக் கொள்வது ஹராமாகும் என்றும் காபிரான மற்றும் மேசமான நடத்தையுள்ள பெண்களுக்கு ஒப்பாகும் விதத்தில் அச்செயல் அமைந்திருந்தால் எவ்வித ஐயமுமின்றி ஹராம் என்ற நிலைக்குத் தள்ளப்படும் என்றும் கூறுகின்றார்கள்.

-     அல்முன்தகா மின் பதாவா அஷ்ஷெய்க் அல்பவ்ஸான்

மேலும், இது குறித்து அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: அவ்வாறு பெண்கள் தங்கள் முடிகளைக் குறைப்பது ஆண்களுக்கு அல்லது இணைவைக்கும் பெண்களுக்கு ஒப்பாகும் அமைப்பில் இருக்குமென்றால் அது கூடாது என்றும் அப்படியல்லாத சந்தர்ப்பங்களில் கூடும் என்றும் தீர்ப்பு வழங்கிவிட்டு ஆயினும் இம்முடிவு தனக்கு ஆச்சரியத்தை உண்டுபன்னக்கூடியதல்ல என்று கூறி தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்கள்.

-     பதாவா ஸீனா வதஜ்மீலின் நிஸா

இன்னும், அஷ்ஷெய்க் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: அப்படி ஒரு பெண்ணுக்குத் தலையில் சொறி சிரங்கு மற்றும் அளவுக்கதிகமாக வளர்ந்த நீண்ட கூந்தல் போன்ற காரணங்களினால் தனது முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் முடியைக் குறைத்துக் கொள்வதில் குற்றமில்லை என்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்