பித்அத் பற்றிய ஆய்வு – பகுதி 5

நான்காம் பாடம்:

முஸ்லிம்களின் வாழ்க்கையில் பித்அத்தின் தோற்றமும் அதன் பால் இட்டுச் சென்ற காரணங்களும்:

முஸ்லிம்களின் வாழ்வில் பித்அத்தின் தோற்றம், இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன.

முதல் அம்சம் : பித்அத்கள் தோன்றிய காலம்

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹூல்லாஹ் கூறும் போது: வணக்கங்களுடனும், அறிவுகளுடனும் தொடர்புபட்ட பித்அத்கள் நேர்வழி பெற்ற கலீபாக்களின் காலத்தின் இறுதிப்பகுதியிலேயே இந்த உம்மத்தில் ஏற்படுத்தப்பட்டன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று, எனக்குப் பின் யார் உங்களில் வாழ்கின்றீர்களோ அவர் அநேக கருத்து முரண்பாடுகளைக் காண்பார், எனவே எனது வழிமுறைகளையும், எனக்குப் பின்னால் நேர்வழிப் பெற்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆரம்ப பித்அத் சார் பிரிவினர்களாக கத்ரியா, முர்ஜியா, ஷீஆ, கவாரிஜ் போன்றவைகளே தோற்றம் பெற்றனர், இவ்வாறான பித்அத்கள் ஸஹாபாக்கள் இருக்கும் போதே இரண்டாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றுவிட்டன, இதனை நபித்தோழர்கள் மறுத்தார்கள். பின்னர் முஃதஸிலாவும் இன்னும் பல பித்னாக்களும் பித்அத்துக்கள் மற்றும் மனோ இச்சைகளின் பக்கம் சாய்ந்து செல்லும் முரண்பாடான அபிப்ராயங்களும் முஸ்லிம்களுக்கு மத்தியில் தோற்றம் பெற்றன. இன்னும் சிறப்பான நூற்றாண்டிற்குப் பின்னர் சூபித்துவம் மற்றும் கப்றுகளின் மீது கட்டிடம் கட்டுதல் போன்ற பித்அத்துக்கள் தோற்றம் பெற்றதோடு காலப்போக்கில் பலதரப்பட்ட பித்அத்களும் அதிகரித்தன.

இரண்டாவது அம்சம் : பித்அத்கள் தோன்றிய இடம்

பித்அத்கள் தோன்றிய விடயத்தில் பல இஸ்லாமிய நாடுகள் காணப்படுகின்றன. ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹூல்லாஹ் கூறும் போது : ஸஹாபாக்கள் வசித்த பெரும் நகரங்களான மக்கா, மதீனா, கூபா, பஸரா, ஷாம் போன்ற நகரங்களில் அறிவும், ஈமானும் வெளிப்பட்டன. அங்கிருந்து தான் அல்குர்ஆன் பற்றிய அறிவு, அல்ஹதீஸ், அல்பிக்ஹ், வணக்கம் போன்ற ஏனைய இஸ்லாமிய காரியங்களில் பின்பற்றப்படக் கூடியவைகளும் தோன்றினர்.

மேலும் இந்நகரங்களிலிருந்து தான் அடிப்படை பித்அத்களும் தோற்றம் பெற்றன. மதீனாவைத் தவிர, ஷாம் நகரிலிருந்து தான் ஷீஆ மற்றும் முர்ஜியா தோற்றம் பெற்று அவைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவியன, பஸராவிலிருந்து கத்ரியா மற்றும் முஃதஸிலா சந்நியாசம் போன்றவைகள் தோற்றம் பெற்றதோடு அவைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவின, ஷாமிலிருந்து ஞாபகச் சின்னம் (சிலைகள் கௌரவிக்கப்படல;) மற்றும் கத்ரியா போன்றவைகளும் தோற்றம் பெற்றன, ஜஹ்மியா நிச்சயமாக குராஸானின் பகுதியில் தோன்றிய மிக மோசமான பித்அத் பிரிவினராகும், இவைகள் நபியவர்கள் வாழ்ந்த ஊரை விட்டு தொலைவிலுள்ள இப்பகுதிகளிலிருந்து, இவ்வாறான வழிகெட்ட பித்அத்துகள் உருவானது குறிப்பிடத்தக்கது. உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கொலைக்குப் பின்னர் தான் புதிய பிரிவுகள் தோன்றின.

இன்னும் மதீனாவாகிறது இவ்வாறான பித்அத்களின் தோற்றங்களிலிருந்து ஈடேற்றம் பெற்றிருந்தது, அவர்களிடத்தில் இவைகள் இழிவானதாகவும், கேவலமானதாகவும் இருந்தது, கத்ரியா மற்றும் ஏனையோர் சிலர் இருந்தாலும் அவர்கள் கூபாவில் உள்ள ஷீஆ மற்றும் முர்ஜியாக்களுக்கு மாற்றமாக குறைவானவர்களாக இருந்தார்கள், மற்றும் பஸராவில் உள்ள முஃதஸிலா மற்றும் சந்நியாச வணக்க வழிமுறைகள், ஷாமிலுள்ள ஞாபகச்சின்ன (சிலைகள் கௌரவிக்கப்படல;) போன்றவைகள் அனைத்தும் பகிரங்கமாகக் காணப்பட்டன.

ஆதாரபூர்வமான நபி மொழி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியான மதீனாவாகிறது நிச்சயமாக தஜ்ஜால் அதிலே நுழைய மாட்டான் என்பதாகும். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் மாலிக் ரஹிமஹூல்லாஹ் அவர்களின் மாணவர்களால் அங்கே அறிவும், ஈமானும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. வழி கேட்டின் பக்கம் இட்டுச்செல்லப்பட்ட பெரும் நகரங்களில் நபியவர்களின் மதீனாவில் எப்போதும் பித்அத் இருந்ததுமில்லை, ஏனைய பகுதிகளிலிருந்து வெளியானது போன்று தீனின் அடிப்படைகளில் பித்அத்கள் வெளிப்படவுமில்லை.

பித்அத்கள் தோற்றம் பெறுவதற்கு இட்டுச் சென்ற காரணிகள்

நிச்சயமாக சந்தேகமின்றி அல்குர்ஆன் அஸ்ஸூன்னாவைப் பற்றிப்பிடிப்பதால் பித்அத்களில் வழிகேட்டில் வீழ்வதிலிருந்து காப்பாற்றும். அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் நிச்சயமாக இது என்னுடைய நேரான பாதையாகும் எனவே நீங்கள் அதனைப் பின்பற்றுங்கள் இன்னும் ஏனைய பல வழிகளைப் பின்பற்றாதீர்கள் உங்களை அவன் வழியிலிருந்து பிரித்து விடும். (6:153) இதனைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்திய செய்தியை இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஒரு நேர் கோட்டைக் கீறி இது அல்லாஹ்வின் பாதையாகும் என்றார்கள். பின்னர் அதன் வலப்புறமாகவும், இடப்புறமாகவும் இன்னும் பல கோடுகளையும் கீறி, இப்பல பாதைகளில் ஒவ்வொரு பாதையிலும் ஷைதான் நின்று அழைத்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறினார்கள். பின்னர் நபியவர்கள் பின்வருமாறு ஓதினார்கள் : இன்னும் நிச்சயமாக இது என்னுடைய நேரான பாதையாகும் எனவே இதனை நீங்கள் பின்பற்றுங்கள் இன்னும் ஏனைய பல வழிகளைப் பின்பற்றாதீர்கள், ஏனெனில் அவைகள் உங்களை அவனது வழியிலிருந்து பிரித்துவிடும். நீங்கள் உள்ளச்சம் கொள்வதற்காக இதனைக் கொண்டு அவன் உங்களுக்கு உபதேசம் செய்கின்றான். (அஹ்மத் - 1- 435, தாரமீ -208 )

யார் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸூன்னாவைப் புறக்கணிக்கின்றாரோ வழி கெடுக்கும் பாதைகளும், நூதன பித்அத்களும் அவரை முரண்பாட்டின் பக்கம் இட்டுச் சென்று விடும்.

பித்அத்கள் தோன்றுவதற்கு இட்டுச் சென்ற அம்சங்களாக நாம் இவைகளைக் குறிப்பிடலாம்:

மார்க்க சட்டங்களில் மடமை

மனோ இச்சைக்கு வழிப்படல்

அபிப்பிராயங்களையும், தனிமனிதர்களையும் வெறித்தனமாக பின்பற்றல்

நிராகரிப்பாளர்களைப் பின்பற்றுவதும், அவர்களுக்கு ஒப்பாகுதலும் ஆகும்.

இக்காரணிகளை நாம் சற்று விரிவாக ஆராய்வோம்

மார்க்க சட்டங்களில் மடமைத் தன்மை கொண்டிருத்தல்

காலம் நீண்டு சென்ற வேளையில் மக்கள் தூதுத்துவத்தின் அடிச்சுவடுகளிலிருந்து தூரமாகிச் சென்றார்கள் இதனால் அறிவு குறைந்து மடமை பரவியது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியது போன்று : எனக்குப் பின் உங்களில் யார் வாழ்கின்றாரோ அவர் அதிகமான கருத்து முரண்பாடுகளைக் காண்பார். இன்னும் நபியவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ் அறிவை தன் அடியார்களிடமிருந்து ஒரேயடியாக கைப்பற்றமாட்டான். என்றாலும், அறிஞர்களை மரணிக்கச் செய்வதன் மூலம் இவ்வறிவைக் கைப்பற்றிவிடுவான். எந்த ஒரு அறிஞரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். மக்கள் மடையர்களைத் தலைவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள், அவர்கள் கேள்வி கேட்கப்பட்டால் எந்தவித அறிவும் இன்றி மார்க்கத் தீர்ப்புளை வழங்குவார்கள், எனவே இவர்களும் வழிகெட்டு இன்னும் (ஏனையோரையும்) வழிகெடுப்பார்கள். (அஹ்மத்) எனவே அறிவையும் அறிஞர்களையும் தவிர பித்அத்களை எதிர்க்க முடியாது. எனவே அறிவையும் அறிஞர்களையும் இழந்துவிட்டால் பித்அத்கள் தோன்றுவதற்கும் பரவுவதற்கும் அதற்காக மக்களை ஊக்கப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது.

மனோ இச்சையைப் பின்பற்றல்

யார் அல்குர்ஆனையும் அஸ்ஸூன்னாவையும் புறக்கணிக்கின்றாரோ அவர் தனது மனோ இச்சையைப் பின்பற்றிவிட்டார், அல்லாஹுத்தஆலா கூறும் போது : அவர்கள் உமக்குப் பதில் அளிக்கவில்லையென்றால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து எவ்வித வழிகாட்டலுமின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றுபவனைவிட மிகப் பெரிய வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரர்களான கூட்டத்தினரை நேர்வழியில் செலுத்த மாட்டான். (28:50) இன்னும் அல்லாஹ் கூறும் போது : (நபியே!) தன் மனோ இச்சையைத் தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? நன்கறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டுவிட்டான். மேலும், அவனது செவிப்புலனிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டு, அவனது பார்வையில் திரையையும் ஏற்படுத்தினான். அல்லாஹ்வுக்குப் பின்னர் அவனை நேர்வழியில் செலுத்துபவன் யார்? நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா? (45:23). இன்னும் நிச்சயமாக பித்அத்கள் தான் மனோ இச்சையின் தோற்றமாக உள்ளது.

அபிப்பிராயங்களிலும் தனிமனிதர்களிலும் பிடிவாதமாக இருத்தல்

மனிதனுக்கும் ஆதாரங்களைப் பின்பற்றி சத்தியத்தை அறிவதற்கும் மத்தியில் தடையாக இது இருக்கும். அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களிடம் அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால், இல்லை, நாம் நமது மூதாதையர்கள் எதில் இருக்கக் கண்டோமோ அதையே பின்பற்றுவோம் எனக் கூறுகின்றனர். (2:170)

இது இன்றைய மத்ஹபுவாதிகள், சூபியாக்கள், மற்றும் கப்ர் வணங்கிகள் போன்றவர்களின் செய்தியாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. அல்குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்றுமாறு அவர்கள் அழைக்கப்பட்டால், அவை இரண்டிற்கும் முரண்பட்ட விடயங்களை விட்டு விடுமாறு அழைக்கப்பட்டால், தங்களின் மத்ஹபுகளைக் கொண்டும் இன்னும் தங்களின் ஷைய்க் மார்களைக் கொண்டும் இன்னும் தங்களின் முன்னோர்கள் மற்றும் மூதாதையர்களைக் கொண்டும் ஆதாரம் காட்டுவார்கள்.

காபிர்களுக்கு ஒப்பாகுதல்

பித்அத்களிலே நிகழும் மிகவும் கடுமையான ஒன்றாக இது இருந்து கொண்டிருக்கின்றது. அபூ வாகித் அல்லைஸீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெறுவது போல அவர்கள் கூறுகிறார்கள்: நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹூனைன் யுத்தத்திற்கு சென்றோம். நாம் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களாக இருந்தோம், இன்னும் முஷ்ரிக்களுக்கு பெறிய மரம் ஒன்றிருந்தது அதனருகில் தங்கியிருப்பார்கள், அதிலே தங்களின் ஆயுதங்களை தொங்கவிடுபவர்களாகவும் இருந்தார்கள். இதற்கு தொங்கவிடும் மரம் என்று சொல்லப்படும், நாம் அந்தப் பெறிய மரத்தைக் கடந்து செல்லும் போது, அவர்களுக்கு தொங்கவிடும் மரம் இருப்பது போல எங்களுக்கும் ஒரு மரத்தை ஏற்படுத்தித் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்று நாம் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மிகப் பெரியவன், நிச்சயமாக நீங்கள் கூறியது அவர்களின் வழி முறைகளாகும்; -என்னுடைய ஆத்மா எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக - பனூ இஸ்ராயீல்கள் மூஸாவிடம் (அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்) கேட்டது போன்றே இருக்கின்றது அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள் (என்று அவர்கள் கேட்டார்கள்). அப்போது (மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்) அவர்கள், நிச்சயமாக நீங்கள் அறிவற்ற சமுதாயத்தினர்; என்று கூறினார்கள்.(7:138) (பின்பு நபி (ஸல்) உங்களுக்கு முன் இருந்தவர்களின் வழிமுறைகளில் நீங்களும் செல்கிறீர்கள் என்று கூறினார்கள். (திர்மிதி – 2180, தபராணீ – 3291)

பனூ இஸ்ரவேலர்களையும், நபித் தோழர்களில் சிலரையும் இந்த அசிங்கமான வேண்டுகோளை விடுப்பதற்கு இட்டுச் சென்றது. நிச்சயமாக காபிர்களுக்கு ஒப்பாகுவதாகும் என்பது இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வேண்டுகோள் தான் அவர்கள் வணங்குவதற்கு ஒரு கடவுளும், அல்லாஹ் அல்லாத ஒன்றைக் கொண்டு பரகத் பெறுவதுமாகும். - இது தான் இன்று நடைபெறக் கூடியதாகவும் உள்ளது – நிச்சயமாக அநேகமான முஸ்லிம்கள் பித்அத்களைச் செய்வதிலும், ஷிர்க்கான காரியங்களைச் செய்வதிலும் காபிர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனர், மீலாத் விழாக்கள் கொண்டாடுவது, சில குறிப்பிட்ட அமல்களுக்கு நாட்களையும் வாரங்களையும் ஏற்படுத்துதல், மார்க்கம், ஞாபகார்த்தங்களோடு தொடர்பான விழாக்கள், உருவங்களையும், ஞாபகார்த்த சின்னங்களையும் நிறுவுதல், துக்க தினங்கள், ஜனாஸாவுடைய பித்அத்கள், கப்றுகள் மீது கட்டிடங்கள் எழுப்புதல் போன்ற இன்னும் பல (ஒப்புவமைகள் உள்ளன).

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU MUAAD JAMALUD DEEN (GHAFOORI)