பயனுள்ள துணுக்குகள் – 03

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"ரமழானுக்குப் பிறகு மிகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரமுடைய நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைகளுக்குப் பிறகு மிகச் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்".

- முஸ்லிம்: 1163

உள்ளத்தை தூய்மைப்படுத்துவதின் முக்கியத்துவம்!

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"ஒவ்வொரு நாளும் உள்ளம் தூய்மைப்படுத்தப்படுவது, ஆடை தூய்மைப்படுத்தப்படுவதை விட மிக முக்கியமானது".

- லிகாஉஷ் ஷஹ்ரி: 2/75

கணவனின் சம்பாத்தியம் விடயத்தில் பேணுதல் உள்ள குடும்பப் பெண்!

எம் முன்னோர்களைச் சேர்ந்த பெண்களில் ஒருவர், ரிஸ்க்கை தேடி அல்லது, வியாபார நோக்கில் வெளியாகிச் செல்லும் தன் கணவனை நோக்கி: "நீங்கள் எங்களுடைய விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! ஹராமான சம்பாத்தியத்தை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன். நிச்சயமாக நாங்கள் பசியைத் தாங்கிக் கொள்வோம். நரக நெருப்பை தாங்கிக் கொள்ள மாட்டோம்" என்பார்.

- முஹ்தஸர் மின்ஹாஜில் காஸிதீன்

தான் அறிந்த மார்க்க அறிவு மறந்து போவதற்குக் காரணம் என்ன?!

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக பாவங்களில் சில உள்ளன. அவை பிரயோசனம் தரக்கூடிய அறிவு அல்லது, அவ்வறிவில் சில பகுதிகள் மறைந்து போவதற்குக் காரணமாக அமைகின்றன. மாறாக, அறிந்தது மறந்து போவதற்குக் காரணமாக அமைகின்றன".

- மஜ்மூஉல் பதாவா: 14/157

மனிதர்களின் எண்ணங்களுக்கு தீர்ப்பு வழங்குவதை விட்டும் எச்சரிக்கையாக இருந்துகொள்!

நபியவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக நான் மனிதர்களின் உள்ளங்களை துளையிட்டுப் பார்ப்பதற்கும்,  அவர்களின் வயிறுகளை கிழித்துப் பார்ப்பதற்கும் ஏவப்படவில்லை".

- புகாரி, முஸ்லிம்

அல்குர்ஆனை ஓதுதல் உளரீதியான நோய்களுக்கு அருமருந்தாகும்!

இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"தேனானது உடல் ரீதியான நோய்கள் விடையத்தில் பணியாற்றுவதை போன்று, அல்குர்ஆன் ஓதுதலானது உள ரீதியான நோய்கள் விடையத்தில் பணியாற்றும்".

- அத்தப்ஸிரா: 79

மரணத்திற்குப் பிறகு அமல் துண்டிக்கப்படாமல் இருப்பதை விரும்புவர்களுக்கு...!

இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"யார் தனது மரணத்திற்குப் பிறகு அமல் துண்டிக்கப்படாமல் இருப்பதை விரும்புகிறாரோ, அவர் அறிவை பரப்பட்டும்".

- அத்தத்கிரா: 55

ஒளிமயமான கப்ரு!

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"கப்ரானது இருள்மயமானது. அங்கு மனிதன் சூரியனையோ, சந்திரனையோ காணமாட்டான். அம்மனிதன் தொழுகையாளிகளில் உள்ளவராக இருந்தால், அவருடைய கப்ரு ஒளிமயமானதாக இருக்கும்".

- மஜ்மூஉல் பதாவா: 12/479

குறுகிய நேர இன்பத்தின் விபரீதம்!

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

"எத்தனையோ குறுகிய நேர இன்பம் நீண்டகாலக் கவலையை தோற்றுவிக்கிறது".

- அஸ்ஸுஹ்த் (இப்னுல் முபாரக்)

பெண்களே! நீங்கள் யாருடன் உட்கார விரும்புகிறீர்கள்?

இமாம் அல்வாதிஇ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"ஸாலிஹான பெண்களுடன் உட்காருவதில் ஆர்வம் கொள்ளுமாறு ஸாலிஹான பெண்ணுக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், நிச்சயமாக அவ்வாறு செய்வது, ஈமானையும், அறிவையும், தெளிவையும் அதிகரிக்கும்".

- காயதுல் அஷ்ரிதா: 3/474

தவறு செய்யும் உங்கள் சகோதரனுடன் எவ்வாறு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்?

அபூத்தர்தா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

"உங்களுடைய சகோதரர்களில் ஒருவர் மாற்றமடைந்து பாவத்தில் ஈடுபட்டால், அவரை விட்டுவிடவோ, ஒதுக்கிவிடவோ வேண்டாம்! அவருக்கு அழகிய உபதேசத்தை செய்யுங்கள்! அத்துடன், அவர் விடயத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சகோதரரானவர், ஒரு சமயத்தில் வளைய கூடியவராகவும், மற்றொரு சமயத்தில் நேர்த்தியாக இருக்கக் கூடியவராகவும் இருப்பார்".

- ஹில்யதுல் அவ்லியா: 4/232

பள்ளிவாசலில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் சிறப்பு!

நபியவர்கள் கூறினார்கள்:

"யார் நல்லதை கற்கும் அல்லது, கற்பிக்கும் நோக்கில் பள்ளிவாசலை நோக்கிப் புறப்படுகிறாரோ, அவருக்கு பூர்த்தியான அமைப்பில் ஹஜ் செய்தவரின் கூலியை போன்ற ஒன்று உள்ளது".

- இப்னு ஹிப்பான், தபராணி

தவறு செய்யும் எமது சகோதரனுக்காக துஆச் செய்வோம்!

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

"ஒரு பாவத்தை உங்களது சகோதரன் செய்வதை நீங்கள் பார்த்தால், அல்லாஹ் உன்னை இழிவுபடுத்துவானாக! என்று கூறி, அவனுக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவியாளர்களாக நீங்கள் இருக்க வேண்டாம்! மாறாக, அல்லாஹ் அவனை மன்னிப்பானாக! என்று கூறுங்கள்"

மற்றோர் அறிவிப்பில்: மேலும், அல்லாஹ்விடத்தில் அவனுக்காக ஆரோக்கியத்தை கேளுங்கள்! என்று இடம் பெற்றுள்ளது.

- மகாரிமுல் அஹ்லாக்

உங்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்ய வேண்டாம்!

நபியவர்கள் கூறினார்கள்:

"நலவை கொண்டேயன்றி உங்களுக்கு எதிராக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டாம்! நிச்சயமாக மலக்குகள் நீங்கள் சொல்வதற்கு ஆமீன் கூறுவார்கள்".

- முஸ்லிம்

பிரயோசனமளிக்கும் உபதேசம்!

எம் முன்னோர்களில் ஒருவர் கூறியதாக இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"உள்ளத்திலிருந்து வெளியேறினாலேயன்றி உபதேசம் பயனளிக்காது. (அப்போதுதான்) நிச்சயமாக அது உள்ளத்தை சென்றடையும். மாறாக, அது நாவிலிருந்து வெளியேறினால், நிச்சயமாக அது ஒரு காதால் நுழைந்து பிறகு மறு காதால் வெளியேறிவிடும்".

- லதாஇபுல் மஆரிப்: 22

பயன்தரும் உபதேசம்!

சில உலமாக்கள் கூறுவதாக இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக ஆலிம், தனது உபதேசத்தின் மூலம் அல்லாஹ்வின் முகத்தை நாடவில்லை என்றால், பாராங்கற்களை விட்டும் மழைத்துளிகள் சருகிச் செல்வதைப் போன்று உள்ளங்களை விட்டும் அவரது உபதேசம் சருகிச் சென்றுவிடும்".

- லதாஇபுல் மஆரிப்: 22

மனிதர்களில் மிகக் கெட்டவர்!

நபியவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக மறுமை நாளில் அந்தஸ்தால் மனிதர்களில் மிகக் கெட்டவர், தனது தீங்கிலிருந்து பாதுகாப்பு பெறும் முகமாக மனிதர்கள் விட்டொதுங்கும் நபராவார்".

- புகாரி, முஸ்லிம்

ஆண், பெண் கலப்பின் விபரீதங்கள்!

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"ஆண், பெண் கலப்பு ஏற்பட்டால், ஆண்களிடத்தில் பெண்கள் மீதுள்ள கண்ணியம் இல்லாமல் போய்விடும். பெண்களிடத்தில் ஆண்கள் மீதுள்ள வெட்கம் இல்லாமல் போய்விடும் ".

- பதாவா இஸ்லாமியா: 3/93

உள்ளம் அமைதிபெற அல்லாஹ்வை ஞாபகிப்போம்!

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:

"இன்னும், அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீர்களாக!"

- அர்ரஃது: 28

ஒரு முஃமின் அமைதி அடையும் விதம்!

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"முஃமினாகிறவன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டும், தஸ்பீஹ் செய்வது கொண்டும், லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை மொழிவது கொண்டும், தக்பீர் கூறுவது கொண்டும் அமைதி அடைகிறான்".

- உத்தியோக பூர்வ இணையதளம்

அமல்களில் மிகச் சிறந்தது!

நபியவர்கள் கூறினார்கள்:

"அமல்களில் மிகச் சிறந்தது, சந்தோசத்தை முஃமினான உனது சகோதரரிடத்தில் நீர் நுழைவிப்பது. அல்லது, ஒரு கடனை அவனை விட்டும் நிறைவேற்றுவது. அல்லது, ஒரு ரொட்டியை அவனுக்கு உணவளிப்பது".

- ஸஹீஹுல் ஜாமிஇ

நல்லதை செய்தால் நன்மை உண்டாகும்!

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"ஸாலிஹான அமலைச் செய்யும் ஒவ்வொருவருக்கும், தனது ஈமானுக்கும் அமலுக்கும் தக்க விதத்தில் நல்லதொரு வாழ்க்கையை அல்லாஹ் வாழ வைப்பது அவசியமாகும்".

- மிப்தாஹு தாரிஸ் ஸஆதா: 1/95

பாவத்தை கலைந்து வழிபடுவதின் பால் விரைவோம்!

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"அடியான் வழிப்படுதலை கொண்டு மாறு செய்தலை மாற்றிக்கொண்டால், அல்லாஹ் ஆரோக்கியத்தை கொண்டு தண்டனையையும், கண்ணியத்தை கொண்டு இழிவையும் மாற்றிவிடுவான்".

- அத்தா வத்தவா: 73

ஏன் கவலைகள் உண்டாகிறன?!

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக இரு வழிகளில் கவலைகள் உண்டாகின்றன.

1. உலகின் மீதுள்ள பேராசையும் அது விடயத்தில் காணப்படும் ஆர்வமும்.
2.  நற்காரியங்கள், வழிப்படக்கூடிய அம்சங்கள் ஆகியவற்றில் விடக்கூடிய குறைகள்.

- உத்ததுஸ் ஸாபிரீன்: 256

வெளிரங்கமும் அந்தரங்கமும் ஒன்றாக இருக்கட்டும்!

நபியவர்கள் கூறினார்கள்:

"மனிதர்கள் எதை காண்பதை நீ வெறுத்தாயோ, அதனை நீ தனிமையில் இருக்கும் போது செய்யாதே!"

- அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா: 1055

வெள்ளிக்கிழமையில் சுபஹ் தொழுகையின் சிறப்பு!

நபியவர்கள் கூறினார்கள்:

"ஜமாஅத்துடன் வெள்ளிக்கிழமையில் சுபஹ் தொழுகையை நிறைவேற்றுவது, அல்லாஹ்விடத்தில் தொழுகைகளில் மிகச் சிறந்ததாகும்".

- அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா: 1566

பணிவு உயர்வைத் தரும்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவாக நடந்து கொண்டால், அல்லாஹ் அவரை உயர்த்திவிடுவான்!"

- முஸ்லிம்

வெட்கத்தின் பிரயோசனம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"வெட்கமானது, நலவைத் தவிர வேறு எதனையும் கொண்டுவரமாட்டாது".

- புகாரி, முஸ்லிம்