பகிரங்கமாகச் செய்யப்படும் பாவங்களின் விபரீதங்கள்! – 01

بسم الله الرحمن الرحيم

நிச்சயமாக அல்லாஹுத்தஆலா தன்னுடைய அடியார்களை நோக்கி தனக்குக் கட்டுப்படுமாறு கட்டளை பிறப்பித்துள்ளான். மேலும், அவனுடைய மார்க்கத்தைப் பேணி நடக்குமாறும் பணித்துள்ளான். அந்த அடிப்படையில், எவர்களெல்லாம் அவனை வழிப்படக்கூடியவர்களாகவும், அவனுக்கு மாத்திரம் உரித்தான அடிமைத்துவத்தை நிலைநாட்டக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்களோ அத்தகையவர்களை வெற்றிபெற்றவர்கள் என்று அடையாளப்படுத்திக் காட்டியுள்ளான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிகின்றாரோ, அவர் மகத்தான வெற்றியாக வெற்றி அடைந்து விட்டார்". (அல்அஹ்ஸாப்: 71)

மேலும், அல்லாஹ் அவர்களை அவனுக்கு மாறு செய்வதைவிட்டும் தடுத்துள்ளான். அத்துடன் வரம்பு மீறுவதைவிட்டும் எச்சரித்துள்ளான். அதுமாத்திரமின்றி, நிச்சயமாக பாவிகள் நஷ்டவாளிகள் என்றும் அத்துமீறக்கூடியவர்களுக்கு இழிவுதரும் வேதனை இருப்பதாகவும் கூறியுள்ளான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்து, அவனுடைய வரம்புகளை மீறுகின்றாரோ, அவரை நரகில் நிரந்தரமாக நுழைவிப்பான். மேலும், அவருக்கு இழிவுபடுத்தும் வேதனையும் உண்டு!" (அந்நிஸா: 14)

எனவே, பாவமானது அதனை செய்பவருக்கு பெரும் சாபக்கேடாகும். அவ்வாறு பாவங்களை செய்யக்கூடியவர்களுக்கு அது மேசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

பாவமானது எவ்வித வெட்கமுமின்றி பகிரங்கமாகச் செய்யப்படும் போதுதான் அதனுடைய விபரீதம் மிகப் பெரியளவாகக் காணப்படும்.

நபியவர்கள் கூறினார்கள்: "பகிரங்கப்படுத்துபவர்களைத் தவிர என்னுடைய உம்மத்திலுள்ள அனைவரும் அல்லாஹ்வுடைய மன்னிப்பையும், நரக விடுதலையையும் எதிர்பார்க்க முடியுமானவர்களாக இருப்பர். நிச்சயமாக பகிரங்கப்படுத்துதலில் நின்றும் உள்ளதுவே, ஒருவர் இரவு வேளையில் ஒரு தீய செயலைச் செய்துவிட்டு காலைப் பொழுதை அடைகிறார். அப்போது அல்லாஹ் அவரின் குறையை மறைத்திருப்பான். அந்நிலையில் அவன் ஒருவரை விழித்து, நேற்றிரவு நான் இவ்வாறு இவ்வாறெல்லாம் செய்தேன் என்று கூறுவான். ஆனால், அவனுடைய இரட்சகன் அதனை மறைத்திருக்கும் நிலையில் அவன் காலைப் பொழுதை அடைந்து, அல்லாஹ்வின் திரையை அகற்றிவிடுகிறான்". (புகாரி, முஸ்லிம்)

இங்கு நபியவர்கள் அல்லாஹ்வின் மன்னிப்பு, கருணை ஆகியவற்றைவிட்டும் பகிரங்கமாகப் பாவச் செயல்களில் ஈடுபடுவோரை விதிவிலக்காக்கியுள்ளார்கள். காரணம், பகிரங்கமாகப் பாவச்செயல்களைப் புரிவது பல்வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதினாலாகும். அந்தவிதத்தில்:

  1. ஒருவர் செய்யும் பாவங்களை மற்றவர்கள் அறிந்திராமல் இருப்பதற்காக அல்லாஹ் இடக்கூடிய திரை இழிவுக்குள்ளாக்கப்படுகிறது.
  2. அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் இலகுவாக எடை போடப்படுகிறது.
  3. ஒருவகையான பிடிவாதம் மற்றும், அல்லாஹ்வுடனான எதிர்ப்புத் தன்மை வெளிப்படுத்தப்படுகிறது.
  4. மக்களை பாவத்தின் பால் தூண்டுவதாக அமைகிறது.

விசுவாசிகளுக்கு மத்தியில் மானக்கேடான காரியங்கள் பரவவேண்டும் என்று விரும்புவோருக்கு அல்லாஹ் நோவினை தரக்கூடிய வேதனையைக் கொண்டு எச்சரித்துள்ளான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நிச்சயமாக விசுவாசிக்களுக்கு மத்தியில் மானக்கேடான அம்சங்கள் பரவவேண்டும் என்று எவர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நோவினை தரும் வேதனை உண்டு!" (அந்நூர்: 19)

பிலால் இப்னு ஸஃத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக பாவமானது மறைமுகமாக இருந்தால் அதனைச் செய்பவரையன்றி வேறு எவருக்கும் அது தீங்கிழைக்காது. மேலும், அது பகிரங்கப்படுத்தப்பட்டு தடுக்கப்படவில்லையென்றால், அனைவருக்கும் பொதுவான தீங்காக அது அமைந்துவிடும்!" (ஷுஅபுல் ஈமான்)

-        இன்ஷா அல்லாஹ் தொடரும்.