நோன்பின் சட்டதிட்டங்கள் தொடர்பான விளக்கக் குறிப்புக்கள் – 01

بسم الله الرحمن الرحيم

நோன்பின் வரைவிலக்கணமும் அதன் சட்டதிட்டங்களும்

1.   நோன்பிற்கு அரபு மொழியில் الصوم என்று வழங்கப்படும். الصوم என்ற வார்த்தையை அரபுமொழி அடிப்படையில் நோக்குகையில் அதன் கருத்தானது, "பற்றிப் பிடித்தல்” என்று அமையும். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.

"நான் அர்ரஹ்மானுக்காகப் பேசாமல் இருப்பதை நேர்ச்சை செய்திருக்கின்றேன்”. (மர்யம்: 26)

மேலும், மார்க்க அடிப்படையில் இவ்வார்த்தையை அணுகுவோமென்றால், "குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர்கள் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சிலவற்றை குறிப்பிட்ட அமைப்பில் தவிர்ந்து கொள்வதாகும்” என்று அமையும்.

2.   மேலும், நோன்பானது ஸப்ர், ஸியாஹா போன்ற பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றது. (அத்தம்ஹீத்: 7/307)

3.   நோன்பின் வகைகள்:

1.  பர்ழான நோன்பு: உதாரணம்: ரமழான் நோன்பு (அது உடன் நோற்கக்கூடியதாகவோ அல்லது, கழாவாக நோற்கப்படக் கூடியதாகவோ இருக்கலாம்.)

2.   வாஜிபான நோன்பு: உதாரணம்: குற்றப்பரிகாரம் என்ற அடிப்படையில் நோற்கும் நோன்பு, நேர்ச்சை மூலம் வாஜிபாக்கிக் கொண்ட நோன்பு.

3.   சுன்னத்தான நோன்பு (பார்க்க: ஷர்ஹுல் உம்தா: 1/26)

4.   ரமழான் நோன்பு முஸ்லிமான, பருவ வயதை அடைந்த, புத்தி சுயாதீனமுள்ள, ஊரில் தங்கியிருக்கக்கூடிய ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அதே நேரத்தில் அவ்வாறு நோன்பு நோற்க நாடுபவர் அதற்குச் சக்தியுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில், நபியவர்கள் ரமழான் நோன்பு பற்றிக் கூறிய போது, "அதுவல்லாத வேறு வகை நோன்பு எம்மீது கடமையாக உள்ளதா?” என்று வினவப்பட்ட சந்தர்ப்பத்தில், "இல்லை. உபரியானவைகளைத் தவிர” என்று பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

5.   ரமழான் நோன்பானது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. நபியவர்கள் ஹிஜ்ரி 11ஆம் அண்டு ரபீஉல் அவ்வல் மாதம் மரணித்ததை கணக்கிற் கொண்டு பார்க்கையில் அவர்கள் சுமார் 9 ரமழான்கள் நோன்பு நோற்றிருக்கிறார்கள் என்று கருத முடியும்.

6.   முஸ்லிம்கள் ஆரம்பத்தில் ஆஷூரா நோன்பைக் கொண்டு ஏவப்பட்டார்கள். பிறகு ரமழான் நோன்பு தெரிவுச் சுதந்திரம் என்ற அடிப்படையில் கடமையாக்கப்பட்டது. இதனைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

"மேலும் அதற்குச் சக்தி பெற்றவர்கள் மீது ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்”. (பகரா: 184)

பின்பு இச்சட்டம், "ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தைப் பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்றுவிடவும்”. (பகரா: 185)

என்ற வசனத்தைக் கொண்டு மாற்றப்பட்டது. இதன் பேறாக ரமழான் நோன்பு பர்ழாகவும் அஷூரா நோன்பு சுன்னத்தாகவும் மாற்றியமைக்கப்பட்டது.

7.   நோன்பாளிக்கு உண்ணுதல், பருகுதல், உறவு கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் ஹராமாக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் ரமழான் காலங்களில் இரவுத் தூக்கத்தின் பின்னர் அல்லது, இஷாத் தொழுகையின் பின்னர் உறவு கொள்வது தடை செய்யப்பட்டுடிருந்தது. பிறகு இச்சட்டம் மாற்றப்பட்டு பஜ்ர் வரை உறவு கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதனை அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இருந்து புரிந்து கொள்ளலாம். (பார்க்க: அத்துர்ருல் மன்ஸூர், தப்ஸீர் இப்னி கஸீர்)

மேலும், இதுவிடயம் குறித்த ஒரு செய்தி பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

நபியவர்களின் தோழர்கள் நோன்பாளிகளாக இருக்கும் போது நோன்பு திறக்கும் வேளை நெருங்கும் சந்தர்ப்பத்தில் அவர்களில் சிலர் தூங்கிவிடுவர். அவ்வாறு தூங்கினால் அடுத்த நாள் மாலைப் பொழுதை அடையும் வரை உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டும் என்ற சட்டம் காணப்பட்டது. இதனால் பலரும் பாதிப்புக்குள்ளானார்கள். கைஸ் இப்னு ஸிர்மா அல்அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டதால் பகலின் நடுப்பகுதியை அடையும் போது மயக்கம் ஏற்பட்டு விழுந்து விட்டார்கள். அப்போது பின்வரும் அல்பகரா அத்தியாத்தின் 187 ஆவது வசனம் இறங்கியது.

"(விசுவாசங் கொண்டோரே!) நோன்பின் இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது”. (அல்பகரா: 187)

8.   ரமழானுக்கு ஏன் ரமழான் என்ற பெயர் வந்தது என்று நாம் ஆராய்ந்து பார்த்தால், அது குறித்த சில காரணங்கள் உலமாக்களால் கூறப்பட்டுள்ளன. சிலர், ரமழானானது பாவங்களை சுட்டெரித்து விடுவதால் தான் இப்பெயர் அதற்கு வந்ததாகக் கூறுகின்றனர். மேலும் சிலர், ரமழான் காலத்தில் பசியின் வெப்பத்தின் காரணமாக மனிதர்கள் கடும் கலக்கமான நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள், அதனால் தான் இப்பெயர் அதற்கு வந்தது என்கிறார்கள். மற்றும் சிலர் கூறுகையில்: மாதங்களுடைய பெயர்கள் அரபு மொழியல் சூட்டப்படும் போது அந்தந்த மாதத்தின் தன்மையைக் கருத்திற் கொண்டு சூட்டப்பட்டது. அந்த அடிப்படையில் ரமழானுடைய காலத்தில் உஷ்ணத்தின் தன்மை வெகுவாகக் காணப்படுகின்றமையால் ரமழானுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது என்கிறார்கள்.

குறிப்பு: மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு காரணத்துடனும் ரமழான் என்ற வார்த்தையில் இடம்பெறும் ر م ض என்ற  அடிப்படை எழுத்துக்கள் சம்பந்தப்படுகின்றன.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

- அபூஹுனைப்