நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டவருடன் வியாபாரம் செய்யலாமா?

بسم الله الرحمن الرحيم

ஒரு ஹதீஸில் நபியவர்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டவருடன் வியாபாரம் செய்வதைத் தடுத்துள்ளார்கள். அச்செய்தி அஹ்மத், அபூதாவுத், பைஹகி போன்ற கிரந்தங்களில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், அதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸாலிஹ் இப்னு ருஸ்தும் அல்ஹஸ்ஸாஸ் என்ற ஒருவர் இடம்பெறுகிறார். இவர் யார் என்று அறியப்படாதவராக உள்ளார்.

மேலும், இச்செய்திக்கு பைஹகி என்ற கிரந்தத்தில் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பிரிதொரு செய்தி சான்று பகருகின்றது. என்றாலும், பலப்படுத்தல் என்ற அடிப்படையில் இச்செய்தியும் உகந்ததாகக் காணப்படவில்லை. ஏனெனில், இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஸ்லிம் இப்னு பஷீர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யார் என்று அறிமுகமற்றவராகக் காணப்படுவதுடன் இச்செய்தி மவ்கூப் எனும் தரத்தைப் பெறுவதாகவும் விமர்சனம் கூறப்படுகிறது.

எனவே, நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டவருடன் வியாபாரம் செய்வதைப் பொருத்தளவில் அதனை இருவகைகளாகப் பிரிக்கலாம். இத்தகவலை இமாம் அல்கத்தாபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது மஆலிமுஸ் ஸுனன் எனும் நூலில் விபரித்துள்ளார்கள்.

1.   நிர்ப்பந்திக்கப்பட்டார் என்ற அடிப்படையில் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்ட ஒருவரின் வியாபார ஒப்பந்தம்: இவ்வொப்பந்தமானது செல்லுபடியற்றதாகக் கருதப்படும்.

2.   எல்லைமீறிய கடன் மற்றும் கூடிய அளவான செலவீனங்கள் காரணமாக நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்ட ஒருவருடன் அவரின் நிர்ப்பந்த நிலையைக் கருத்தில் கொண்டு விலை குறைத்து பொருட்களை வாங்க முற்படுதல். இப்படியான நிலைக்குத் தள்ளப்பட்டவருடன் வியாபாரம் செய்யாது மார்க்கம், மனிதாபிமானம் என்ற அடிப்படைகளைப் பேணி நடந்து கொள்வதே பொருத்தமானதாக இருக்கும். மேலும், இப்படியான நபரிடத்தில் குறித்த வியாபாரம் தொடர்பான அவரது அபிப்பிராயத்தைக் கேட்காது நடந்து கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும். என்றாலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நபருக்கு உதவி வழங்குதல், கடனாகப் பணம் கொடுத்தல் போன்ற நல்லறங்களை மேற்கொள்ளலாம். மேலும், ஓர் அடைவை எத்தும் வரை கால அவகாசம் வழங்கவும் முடியும். என்றாலும், வியாபார ஒப்பந்தமானது நிர்ப்பந்த நிலையுடன் இவ்வமைப்பில் மேற்கொள்ளப்படுவதற்கு சட்டத்தின் அடிப்படையில் அனுமதியுள்ளது. அவ்வாறு வியாபாரம் நடந்தால் அது ரத்து செய்யப்படவும் மாட்டாது.... அறிஞர்களில் பொதுவாக அனைவரும் இவ்வமைப்பிலான வியாபாரத்தை வெறுத்துள்ளார்கள்.

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய ஒர் அறிவிப்பில் இதனை ஹராம் என்று கூறியுள்ளார்கள். இக்கருத்தை இமாம் ஷவ்கானி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ஆதரித்துள்ளார்கள். என்றாலும், இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டவர் தனது பொருளை உரிய விலைக்கு விற்பார் என்றால் அதற்கு அனுமதியுள்ளதாகவும் தமது செவ்வையில் கூறியுள்ளார்கள். அல்இன்ஸாப் என்ற நூலில் கூறப்பட்டுள்ள பிரகாரம் இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வகையான வியாபாரம் எவ்வித வெறுப்புமின்றி சரியானது என்ற கருத்தை சரி காண்கிறார்கள். மொத்தத்தில் இக்கருத்து தான் பொருத்தமான கருத்தாகவும் உள்ளது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

-    தொகுப்பு: அபூஹுனைப்