நாம் ஏன் காரூணின் வரலாற்றில் இருந்து படிப்பினை பெறக்கூடாது…?! – 01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா இக்குர்ஆனை நுபுவ்வத்தின் அத்தாட்சியாக ஆக்கியுள்ளான். இதில் பல்வேறுபட்ட உபதேசங்கள் காணப்படுகின்றன. எனவே,அல்குர்ஆனாகிறது அடியார்கள் மீதுள்ள அல்லாஹ்வின் ஓர் ஆதாரம் என்று கூறலாம்.

நாம் இக்குர்ஆனில் பொதிந்துள்ளவற்றை நன்கு சிந்தனை செய்வோமென்றால் இதில் பற்பல உதாரணங்களையும் எமக்கு முன்வாழ்ந்த சமுதாயத்தாரின் வரலாற்றுச் சம்பவங்களையும் கண்டு கொள்ளலாம். இதனைப் பின்வருமாறு அல்லாஹ் பிரஸ்தாபிக்கின்றான்:

"நிச்சயமாக அறிவுடையோருக்கு அவர்களுடைய வரலாற்றுச் சம்பவங்களில் படிப்பினை இருக்கின்றது". (யூஸுப்: 111)

அப்படியான வரலாற்றுச் சம்பவங்களில் ஒன்றுதான் காரூணுடைய வரலாறாகும். காரூணைப் பொறுத்தளவில் அவன், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுகமான பனூ இஸ்ரவேலர்களைச் சேர்ந்தவனாவான். இதனை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:

"நிச்சயமான காரூண் மூஸாவுடைய சமுகத்தாரைச் சேர்ந்தவானாக இருந்தான்". (அல்கஸஸ்: 76)

என்றாலும், அவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீதும் அவர்களுடைய சமுகத்தார் மீதும் அட்டூழியங்களைப் புரியக்கூடியவனாக இருந்தான். மேலும், பிர்அவ்னுக்கு பக்கபலமாகவும் காணப்பட்டான். இதற்குக் காரணம் அவனிடத்தில் காணப்பட்ட பணமாகும். இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

"அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம். நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன". (அல்கஸஸ்: 76)

இப்படி தனக்கு வழங்கப்பட்டிருந்த சொத்து செல்வங்களைக் கொண்டு பெறுமையடித்த காரூணை நோக்கி அவனுடைய சமுகத்தினர்: "நீ அகம்பாவம் கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹுத்தஆலா அகம்பாவம் கொள்பவர்களை விரும்பமாட்டான்" என்றும் "மறுமை வீட்டுக்குத் தேவையானவற்றை அல்லாஹ் உனக்களித்தவற்றில் இருந்து தேடிக் கொள்!" என்றும் "உலகில் உனக்குள்ள பங்கை மறந்துவிடாதே!" என்றும் உபதேசித்தனர்.

படிப்பினை:

1.   இங்கு காரூணை நோக்கி உபதேசிக்கப்பட்ட அகம்பாவமானது,அல்லாஹ் அருளிய அருட்கொடைகளை கருத்திற்கொள்ளாது அதனை தன் முயற்சியின் காரணமாக அடைந்ததாகக் கூறிப் பெருமை பாராட்டுவதும் அவற்றைப் பயன்படுத்தி பூமியல் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுதலுமாகும். மாறாக,அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திக் கொண்டு அதனையிட்டு சந்தோசமடைவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அல்லாஹ்வின் அருட்கொடையினாலும் அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது. எனவே) இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்!" (யூனுஸ்: 58)

2.   "உலகில் உனக்குள்ள பங்கை மறந்துவிடாதே!"என்பது இவ்வுலக இன்பங்களில் உன்னை முழுமையாக ஆழ்த்திக் கொள்! என்ற கருத்தைக் கொடுக்காது. மாறாக,அல்லாஹ் எங்களுக்கு அருளியவற்றிலிருந்து இவ்வுலக வாழ்க்கைக்கு அவசியமானது போக மறுவுலக வாழ்க்கைக்குத் தேவையானதைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே கொடுக்கின்றது.

நாம் இவ்வுலகில் அல்லாஹ்வுக்காகச் செலவு செய்த ஒன்று மட்டுமே மறுமையில் எஞ்சியிருக்கும் என்பதை எப்பொழுதும் மனதில் கொள்க!

மேலும், காரூணை நோக்கி அவனுடைய சமுகத்தினர்: "உனக்கு அல்லாஹ் உபகாரம் செய்ததைப் போன்று நீயும் உபகாரம் செய்! பூமியில் குழப்பம் விளைவிப்பதை நாடாதே!" என்று உபதேசித்தனர்.

உண்மையில் அவர்கள் செய்த இவ்வுபதேசம் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் செய்யப்பட வேண்டிய உபதேசமாகும். ஏனெனில், அல்லாஹ் மனிதனுக்கு பலவாறான அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அவற்றைப் பெற்ற ஒவ்வொருவரும் அதற்குத் தக்க பணிகளை பிரதியுபகாரமாகச் செய்ய வேண்டும்.

அந்தவிதத்தில், அல்லாஹ் சிலருக்கு செல்வத்தைக் கொடுத்துள்ளான். அத்தகையவர்கள் அதனைக் கொண்டு தானதர்மங்களைச் செய்ய வேண்டும். மற்றும் சிலருக்கு கல்வி ஞானத்தைக் கொடுத்துள்ளான். அத்தகையவர்கள் அதனைக் கொண்டு நல்லவற்றை சமுகத்திற்குப் போதிக்க வேண்டும். மேலும் சிலருக்கு சமுக அந்தஸ்தைக் கொடுத்துள்ளான். அத்தகையவர்கள் அதனைப் பயன்படுத்தி மக்களுக்கு மத்தியில் நல்லதை நிலைநாட்ட வேண்டும். இன்னும் சிலருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளான். அவர்களும் அதனைப் பயன்படுத்தி மக்களுக்கு மத்தியில் நீதத்தை நிலைநாட்ட வேண்டும். மாறாக, ஒருபோதும் எமக்குக் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள் குழப்பம் உண்டாவதற்குக் காரணமாக அமைந்துவிடக்கூடாது.

அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்ற எத்தனையோ நபர்களை இன்று நாம் பார்க்கிறோம். அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட செல்வத்தைக் கொண்டு அராஜகம் செய்யக்கூடியவர்களாகவும், அறிவு வழங்கப்பட்டவர்கள் அதனைக் கொண்டு மக்களுக்கு மத்தியில் குழப்பங்களை விளைவிக்கக்கூடியவர்களாகவும் இருப்பதைக் காண்கின்றோம். இத்தகையவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அருட்கொடைகளுக்குச் செய்யும் பிரதியுபகாரத்தின் இலட்சணம்தான் இது!

"நிச்சயமாக சில மனிதர்கள் அல்லாஹ்வுடைய செல்வத்தில் எவ்வித உரிமையுமின்றி செயற்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகம் இருக்கின்றது" என்று நபியவர்கள் கூறியதாக ஹவ்ழா அல்அன்ஸாரிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

இப்படி பல உபதேசங்களை காரூணுடைய சமுகத்தார் அவனுக்குச் செய்த போதும் அவன் கர்வம் மேலிட்டவனாக தனக்கு உபதேசம் செய்தவர்களை நோக்கி: "அதனை நான் கொடுக்கப்பட்டதெல்லாம் என்னிடம் இருக்கும் சொந்த அறிவின் திறமையினால்தான்" என்று கூறினான்.

காரூணின் இத்தகைய வார்த்தை அல்லாஹ் அவனுக்கு வழங்கிய அருட்கொடையை நிராகரிக்கும் வார்த்தையாகும். ஆனால், ஓர் உண்மையான முஸ்லிமைப் பொறுத்தளவில் அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகள் குறித்துக் கூறும்போது: "இவை அல்லாஹ்வின் அருளின் காரணமாக எனக்குக் கிடைத்தவை" என்றே கூறுவான்.

காரூணின் மேற்கூறப்பட்ட பதிலைக் கண்டித்து அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.

"இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனை விட மிக்க பலசாலிகளாகவும் இவனைவிட அதிகப் பொருளுடையவர்களாகவும் இருந்த எத்தனையோ தலைமுறையினர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கின்றான்". (அல்கஸஸ்: 78)

இத்தகையவர்கள் நிச்சயமாக மறுமைநாளில் கைசேதப்படக்கூடியவர்களே! இவர்களின் கைசேதம் தொடர்பாக அல்லாஹ் கூறும்போது:

"என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே! என்னுடைய அதிகாரமும் என்னை விட்டு அழிந்துவிட்டதே! (என்று புலம்புவான்). பின்னர்,(வல்ல அல்லாஹ் தன் மலக்குகளுக்கு): அவனைப் பிடியுங்கள்! அப்பால் அவனுக்கு விலங்கிடுங்கள்! பின்னர் நரகத்தில் அவனைத் தள்ளுங்கள்! பின்னர்,அதன் நீளமானது எழுபது முழமுள்ள(தாக இருக்கும்) சங்கிலியால் அவனைக் கட்டுங்கள் (என்று கூறுவான்)". (அல் ஹாக்கா: 28-32)

ஒரு நாள், காரூண் தன்னுடைய அலங்கரிப்புடன் மக்கள் மன்னிலையில் தோன்றினான். அப்போது, இவ்வுலக வாழ்க்கையையே பெரிதென விரும்புகின்ற சிலர்: "காரூணுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் இருந்திருக்க வேண்டுமே! ஏனென்றால், நிச்சயமாக அவன் மகத்தான பாக்கியவான்" என்று கூறினர்.

இப்படித்தான் உலக இன்பத்தை நேசிக்கும் அதிகமான மக்களின் நிலை உள்ளது. அவர்கள் உலகில் செல்வம் கொடுக்கப்பட்டவர்களைக் காணும் போது அது போன்ற ஒரு செல்வம் தனக்கும் இருக்கக்கூடாதா? என்று ஆசைப்படக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள இத்தகைய மனோநிலையில் உள்ளவர்கள் பல பிரயத்தனங்களை மேற்கொள்கின்றார்கள். அதன் போது ஹலால் ஹராம் பேணாதவர்களாகவும், அளவுக்கதிகம் கடன் வாங்குபவர்களாகவும், பெருமைக்காக அலங்காரத்தை வெளிப்படுத்துபவர்களாகவும், பிறரை ஏமாற்றுபவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

அச்சந்தர்ப்பத்தில், காரூணினைப் பார்த்து பேராசை கொண்ட அம்மக்களைக் கண்டிக்கும் முகமாக அவனுடைய சமுகத்தில் அறிவு கொடுக்கப்பட்டவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

"உங்களுக்கு கேடுதான்! விசுவாசங்கொண்டு நற்கருமங்கள் செய்தவர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் வெகுமதி (இதனைவிட) எவ்வளவோ மேலானதாகும். மேலும், அதனைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்றெவரும்) கொடுக்கப்படமாட்டார்கள்". (அல் கஸஸ்: 80)

இப்படித்தான் மார்க்கத்தைக் கற்றறிந்த உலமாக்கள் இவ்வுலக இன்பத்தைக் கருதுவார்கள். அல்லாஹுத்தஆலா அறிவைக் கொண்டு அல்லது, நற்பண்புகளைக் கொண்டு அல்லது, நல்லமல்களைப் புரிதலைக் கொண்டு உங்களை கௌரவப்படுத்தியிருந்தால், அதுவே இந்த உலகம் மற்றும் இதில் உள்ளவற்றைவிடச் சிறந்ததாக இருக்கும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(ஆகவே) செல்வமும், ஆண்மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரமாகும். மேலும், என்றுமே நிலையான நற்கருமங்கள் தாம் உம் இரட்சகனிடத்தில் நற்கூலியால் மிகச் சிறந்ததாகும். (மறுமையை) ஆதரவு கொள்வதற்கும் மிகச் சிறந்ததாகும்". (அல் கஹ்ஃப்: 46)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அபூ ஹுனைப் (மதனி)