நாமும் பரிகாசமும்

இது மனிதர்களுக்கிடையில் தொடர்பாடல் பரவிக்காணப்படும் ஒரு காலப்பகுதியாகும். சமுகத்திலுள்ள பலதரப்பட்டவர்களுக்கிடையில் தொடர்பாடல் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.மற்றும், இத்தொடர்பாடலானது நேரடியாகவும், தொலைத்தொடர்பு சாதனங்களின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மனிதர்கள் ஒன்று கூடக்கூடிய இடங்களின் பெருக்கமும், நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் அபார வளர்ச்சியுமே இதற்குக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

இத்தகைய தொடர்பாடலினால் மனிதனிடத்தில் காணப்படும் நாவன்மை பன்மடங்கு விரிவடைந்துள்ளது. நல்ல பேச்சுக்கள், தீய பேச்சுக்கள் என்ற பேதம் இல்லாமல் நாவுகள் உலாவருகின்றன. அதன் ஒரு பிரதிபலிப்பே முறையற்ற பரிகாசமாகும். இம்முறையற்ற பரிகாசமானது, சமுகத்தில் பல தீய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில், இஸ்லாம் பரிகாசத்தை அங்கீகரிக்காத மார்க்கமல்ல. நபியவர்கள் கூட பல சந்தர்ப்பங்களில் பரிகாசம் செய்துள்ளார்கள். அவர்களின் பரிகாசமானது மார்க்க வரையறைக்குள் இருந்ததினால் எவ்வித தீய விளைவுகளையும் அவை ஏற்படுத்தவில்லை. அத்தகைய பரிகாசங்களில் சிலவற்றை நோக்குவோம்.

  • அபூ உமைர் என்ற சிறுவன் நுகைர் என்ற பெயரையுடைய ஒரு பறவையை வளர்த்து வந்தான். அப்பறவை திடீர்ரென இறந்துவிட்டது. அதனால் அச்சிறுவன் கடுமையாக கவளைப்பட்டான். அவனைக் கண்ணுற்ற நபியவர்கள் பரிகாசமாக, அறபு இலக்கிய நடையில் 'அபூ உமைரே நுகைருக்கு என்ன நடந்தது?' என வினவினார்கள். (புகாரி)
  • ஒரு நபித்தோழர் பயணம் செய்வதற்கு ஓர் ஒட்டகத்தை தனக்கு கொடுக்குமாறு நபியவர்களிடத்தில் வினவிய போது, நபியவர்கள்: 'உன்னை ஓர் ஒட்டகக்குட்டியின் மீது ஏற்றி அனுப்புகின்றோம்' என்றார்கள். அதற்கு அத்தோழர், 'ஒட்டகக்குட்டியில் எவ்வாறு பயணிக்க முடியும்?' எனக்கேற்க, நபியவர்கள்: 'அவ்வொட்டகமும் இன்னொரு தாய் ஒட்டகத்தின் குட்டியல்லவா? எனப் பரிகாசமாக வினவினார்கள். (அபூதாவுத்)
  • நபியவர்கள் ஒரு முறை அனஸ் (ரழி) அவர்களை அழைக்கும் போது, 'இரு காதுகளை உடையவனே!' என அழைத்தார்கள். (திர்மிதி)
  • ஒரு மூதாட்டி நபியவர்களிடத்தில் வந்து நான் சுவனம் பிரவேசிக்க அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்? எனக்கேட்க, நிச்சயமாக மூதாட்டிகள் சுவனம் நூழையமாட்டீர்கள்! என பதிலளித்தார்கள். அப்போது அம்மூதாட்டி அழுத நிலையில் அவ்விடத்தைவிட்டும் வெளியேறும் போது, நபியவர்கள் சபையோரை நோக்கி 'அவர் மூதாட்டியாக இருக்கும் நிலையில் சுவனம் நுழையமாட்டார், குமரியாக மாற்றம் செய்யப்பட்ட பின்பே அதனுள் நுழைவார்' என அவருக்குக் கூறுங்கள் எனப் பணித்தார்கள். (திர்மிதி)

 

இவ்வரலாற்றுத் துணுக்குகள் அனுமதிக்கப்பட்ட பரிகாசத்தை வரவேற்கக்கூடியனவாக அமைந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். வரவேற்கத்தக்க பரிகாசம் தொடர்பாக இப்னு தைமியா (ரஹ்) கூறும்போது: 'எவர் சத்தியத்திற்காக அழகான மற்றும் ஆகுமாக்கப்பட்டதை உதவியாக எடுத்துக் கொள்கின்றாரோ அவர் அவ்வாறு எடுப்பதாகிறது, நல்லமல்களில் ஒன்றாகக் கருதப்படும்' என்கிறார். மேலும், சில சட்டவல்லுனர்கள் ஆகுமாக்கப்பட்ட பரிகாசத்தை மனிதாபிமான நடவடிக்கைகளில் ஒன்றாகவும் நட்புக்கு இலக்கணமாகவும் கருதியுள்ளனர்.

எனவே, நாம் புரியக்கூடிய பரிகாசம் அனுமதிக்கத்தக்க பரிகாசமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு சில நெறிமுறைகளை அல்குர்ஆன் அஸ்ஸூன்னாஹ் அடிப்படையில் அறிஞர்கள் வகுத்துத் தந்துள்ளனர். அந்நெறிமுறைகள் சரிவரப்பேணப்படுமிடத்து நிச்சயமாக எவருக்கும் பாதிப்பற்ற இன்பகரமான ஒரு சூழல் ஏற்படும். அவையாவன:

மார்க்கத்தை பரிகாசிக்கக்கூடிய அம்சங்கள் கலந்திருக்கக்கூடாது

நாம் புரியக்கூடிய பரிகாசமானது, மார்க்கத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய அம்சங்களை நையாண்டி செய்யக்கூடிய விதத்தில் அமையும் போது, அது கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது. அவ்வாறு ஒருவர் மார்க்கத்தை பரிகாசிப்பது அவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் ஆபத்தாகவும் அமைந்துள்ளது.

அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ' (இது பற்றி) அவர்களிடம் நீர் கேட்டால், 'நாங்கள் (வீண்) பேச்சில் மூழ்கியும், விளையாடிக் கொண்டுமிருந்தோம்' என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகாசித்துக் கொண்டிருந்தீர்;கள்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! போலிக்காரணம் கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்னர் நிச்சயாமக நிராகரித்து விட்டீர்கள். (அத்தவ்பா: 65,66)

இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையும் பரிகாசிப்பது இறை நிராகரிப்பாகும்.

'அதேபோன்று மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட அம்சங்களையும் பரிகாசிப்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் வைத்திருக்கக்கூடிய தாடியையோ, பெண்கள் அணியக்கூடிய ஹிஜாபையோ, கரண்டைக்குக் மேலால் அணியப்படக்கூடிய ஆடையையோ பரிகாசிப்பதும் இவ்வாகையைச் சாரும்.

By : ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK