நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 8

بسم الله الرحمن الرحيم

மேலும் அவர் உண்ணும் போது அல்லது பருகும் போது:

بِسْمِ الله

என்று கூறுவார். இந்நடைமுறையை ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் முஸ்லிம் (2017) எனும் கிரந்தத்தில் பதிவான செய்தியில் காணலாம்.

நபியவர்கள் கூறினார்கள்: '(ஒருவர் உணவு பரிமாறலின் போது) அல்லாஹ்வின் பெயரை ஞாபகப்படுத்தாத சந்தர்ப்பத்தில் நிச்சயமாக ஷைத்தான் அவ்வுணவைத் தனக்கு ஹலாலாக்கிக் கொள்கின்றான்.'

'அதாவது, மனிதன் அல்லாஹ்வின் பெயரை ஞாபகப்படுத்தாமல் தனது உணவை உண்ண ஆரம்பித்தால் நிச்சயமாக ஷைத்தானாகிய அவன் அதில் இருந்து தானும் உண்ண இலகுவாக்கிக் கொள்கின்றான். மாறாக, ஒருவர் அவ்வாறு ஆரம்பிக்காத போது அவனால் அதனைப் பரிமாற முடியாமல் போய்விடும்.' (இமாம் நவவி)

மேலும் அவர் சூரதுல் பகராவை அதிகமாக ஓதிக் கொள்வார்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'சூரதுல் பகரா ஓதப்படக்கூடிய வீட்டைவிட்டும் ஷைத்தான் விரண்டோடுகிறான்.' (முஸ்லிம்: 780)

இன்னும், அபூஉமாமா அல்பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'சூரதுல் பகராவை ஓதுங்கள்! நிச்சயமாக அதனை எடுத்துக் கொள்வது அபிவிருத்தியாகும், அதனை விட்டுவிடுவது கைசேதமாகும், சூனியக்காரர்கள் அதற்குச் சக்திபெறமாட்டார்கள்.' (முஸ்லிம்: 804)

மேலும், அவர் ஓர் இடத்தில் தங்க நாடினால்:

أعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

பொருள்: பூர்த்திமிக்க அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன்.

ஹவ்லா பின்து ஹகீம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அவர் இதனைக் கூறினால், அந்த இடத்தில் இருந்து புறப்படும் வரை எந்த ஒன்றும் அவருக்குத் தீங்கிழைக்காது.' (முஸ்லிம்: 2708)

நோய் ஏற்பட்டிருக்கும் என்னுடைய சகோதரனே! நிவாரணம் விடயத்தில் நிராசை அடைந்துவிடாதே!

1.     நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அல்லாஹ் ஒரு நோயை இறக்கி வைத்தால் அதற்குரிய நிவாரணத்தையும் ஏற்படுத்தாமல் விட்டுவிடுவதில்லை." (புகாரி: 5678)

2.     அல்லாஹ்வின் தூதரைத் தொட்டும் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒவ்வொரு நோயிற்கும் மருந்துண்டு. எனவே, நோயை மருந்து அடைந்துவிடுமென்றால் அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அந்நோய் குணமாகிவிடும்." (முஸ்லிம்: 2204)

"நிவாரணமானது (உரிய நோயைச்) சென்றடைவது அல்லாஹ்வினுடைய அனுமதியில் தங்கியுள்ளது என்பது பற்றிய சுட்டிக்காட்டுதல் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. அதாவது, சில வேளைகளில் மருந்தானது கொடுக்கப்படும் விதம் அல்லது அளவு ஆகிய அடிப்படைகளில் எல்லை மீறிய நிலையில் நோயாளியைச் சென்றடையும். அதனால் மருந்தின் தாக்கம் வெளிப்படமாட்டாது. மாறாக, சிலவேளைகளில் மற்றொரு நோயைக்கூட ஏற்படுத்திவிடும். மேலும், இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் சில வகையான மருந்துகளை எல்லோரும் அறிந்து வைத்திருக்கமாட்டார்கள் என்பது பற்றிய சுட்டிக்காட்டுதல் இடம்பெற்றுள்ளது. மற்றும், ஹதீஸ்களில் நோய் நிவாரணத்திற்கான காரணங்களை உறுதி செய்தல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வுடைய அனுமதியுடனும் அவனுடைய நிர்ணயத்துடனும் நடக்கின்றது என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவனின் மீது பொறுப்புச் சாட்டுதலை மேற்கொள்வதில் ஒருபோதும் முரண்பாட்டை ஏற்படுத்திவிட மாட்டாது. மேலும், அவை தன்னளவிலே ஈடேற்றத்தைக் கொடுக்காது. மாறாக, அல்லாஹுத்தஆலாவுடைய நிர்ணயத்துடன் நடைபெறுகின்றது. அல்லாஹ் நிர்ணயித்தால் மருந்து கூட நோயாக மாறிவிடலாம். இவ்விடயமே ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் 'அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு' என்ற வாசகத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இவை அனைத்தினதும் அச்சாணி அல்லாஹ்வுடைய நிர்ணயமும் அவனுடைய நாட்டமுமாகும். எவ்வாறு பசி மற்றும் தாகத்தைத் தனிப்பதற்கு உணவு, குடிபானம் ஆகியவற்றை எடுப்பது முரணாக அமையாதே, அவ்வாறே நோய்நிவாரணம் தேடுதல் என்ற அம்சம் பொறுப்புச் சாட்டுதலுக்கு முரணாக அமைந்துவிட மாட்டாது. அதேபோன்று, மனிதனை அழிக்கக்கூடியவற்றைத் தவிர்ந்து கொள்ளல், ஆரோக்கியத்தை வேண்டி துஆச் செய்தல், தீங்கிழைக்கக்கூடியவற்றை தவிர்த்தல் போன்றனவும் எம்மீது கடமையாகும்." (பத்ஹுல் பாரி)

3. நபியவர்கள் கூறியதாக உஸாமா இப்னு ஷரீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் மருந்தைக் கொண்டு நிவாரணத்தைத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் வயோதிபத்தைத்தவிர எந்த ஒரு நோயையும் அதனுடன் நிவாரணத்தைக் கொண்டேயன்றி ஏற்படுத்தவில்லை." (திர்மிதி: 2038, அபூதாவுத்: 3855, இப்னு மாஜா: 3436)

4. நபியவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "அல்லாஹ் எந்த ஒரு நோயையும் அதற்குரிய மருந்தைக் கொண்டேயன்றி இறக்கிவைக்கவில்லை. அதனைத் தெரிந்தவர்கள் தெரிந்திருப்பார்கள், தெரியாதவர்கள் தெரியாதிருப்பார்கள்." (அஹ்மத், இப்னுமாஜா: 3438, ஸஹீஹுல் ஜாமிஉ: 5558)

பிரயோசனம் மிக்க ஒரு தகவல்: இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "மஜ்மூஉல் பதாவா" (3/274) என்ற தொகுப்பில் கூறுகிறார்கள்: "உடன்பட்ட கருத்தின் அடிப்படையில் நோய்நிவாரணம் தேடுவது அனுமதிக்கத்தக்கதாகும். ஒரு முஸ்லிமுக்கு உள்ரங்க நோய்கள், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டிய நோய்கள், மனநோய்கள் எனப் பல நோய்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வைத்தியரிடத்தில் செல்ல அனுமதியுள்ளது. மார்க்க ரீதியில் அனுமதிக்கத்தக்க மருந்துகளில் இருந்து பொருத்தமானதைக் கொண்டு வைத்தியத் துறையில் அறிமுகமான அடிப்படையில் அவனுக்குச் சிகிச்சையும் செய்து கொள்ள முடியும். ஏனெனில், அது அனுமதிக்கத்தக்க வழமையான காரணங்களைக் கையாள்வதில் உள்ளடங்கக்கூடியது. மேலும், அது அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டுதலுக்கு முரணமாக அமையவும் மாட்டாது."

முற்றும்.

والحمد لله رب العالمين