நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 6

بسم الله الرحمن الرحيم

மனதில் ஊசலாட்டம் மற்றும் சந்தேகம் உண்டாவதைத் தடுப்பதற்கான பரிகாரங்கள்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், (நபியே) ஷைத்தானிலிருந்து ஏதேனுமொரு ஊசலாட்டம் உம்மைத்தொட்டுவிடுமாயின் தாமதமின்றி அல்லஹ்விடத்தில் நீர் பாதுகாவல் தேடிக்கொள்வீராக! நிச்சயமாக அவனே, (யாவையும்) செவியேற்பவன், நன்கறிபவன்." (புஸ்ஸிலத்: 36)

இவ்வசனம் குறித்து இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: "சொல்லப்பட்டதில் மிக அழகானது, அல்லாஹ் எதனைக் கொண்டு எங்களை நெறிப்படுத்தினானோ அதுவும், அவன் தனது வார்த்தையைக் கொண்டு எங்களை ஏவியதுமாகும்” என்கிறார்கள்.

நபியவர்கள் கூறினார்கள்: “ஷைத்தான் உங்களில் ஒருவரிடத்தில் சமூகம்தந்து, இவ்வாறு இவ்வாறெல்லாம் படைத்தவன் யார்? என்று கேட்டுவிட்டு இறுதியில் உன்னுடைய இரட்சகனைப் படைத்தவன் யார்? என்று கேட்பான். எனவே, அந்த நிலையை அவர் அடைந்தால் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடிக்கொள்ளட்டும். மேலும், அத்தோடு அதனை நிறைவுக்குக் கொண்டுவரட்டும்."

இச்செய்தி அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (3276), முஸ்லிம் (134) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

பிறிதோர் அறிவிப்பில்: அவர்...

آمَنْتُ بِاللهِ، وَرُسُلِهِ

என்று கூறட்டும் என்று இடம்பெற்றுள்ளது. (முஸ்லிம்)

பொருள்: நான் அல்லாஹ்வைக் கொண்டும் அவனுடைய தூதர்களைக் கொண்டும் விசுவாசம் கொண்டுவிட்டேன்.

மற்றோர் அறிவிப்பில்: நீங்கள்...

اللهُ أحَد، اللهُ الصَّمَد، لمْ يَلِدْ وَلَمْ يُوْلَد، وَلَمْ يَكُنْ لَهُ كُفوًا أحَد

என்று கூறுங்கள். பின்பு அவர் தனது இடப்பக்கம் மூன்று விடுத்தங்கள் துப்பட்டும். மேலும், ஷைத்தானில் இருந்தும் பாதுகாவல் தேடிக்கொள்ளட்டும்.

இச்செய்தி அபூதாவுத் (4722) எனும் கிரந்தத்தில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும் முஸ்லிம் (135) எனும் கிரந்தத்தையும் பார்க்க.

பொருள்: அல்லாஹ் ஒருவன், அவன் எவ்விதத் தேவையும் அற்றவன், அவன் பெறவும் இல்லை பெறப்படவும் இல்லை. அவருக்கு நிகராக எதுவும் இல்லை.

அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அஸ்ஸஹீஹா (118) எனும் தொகுப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: "அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்ற வார்த்தையைக் கொண்டு ஷைத்தான் யாரிடத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகின்றானோ அவர் ஹதீஸ்களில் இடம்பெற்றிருக்கக்கூடியவற்றைக் கொண்டு அவனுக்குப் பதிலளித்து> அவனுடன் தர்க்கம் புரிவதை விட்டும் விலகி நடப்பது வாஜிபாகும் என்பதை இந்த ஸஹீஹான ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

மேலும், அதன் சுருக்கமாவது:

آمنت بالله ورسله، الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد

என்று கூறிவிட்டு தனது இடப்பக்கமாக மூன்று விடுத்தங்கள் உமிழ வேண்டும். மேலும் ஷைத்தானில் இருந்தும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடவேண்டும். பின்பு ஊசலாட்டத்துடன் இலுபட்டுச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்படும் விதத்தில் நிச்சயமாக யார் அதனைச் செய்கிறாரோ மற்றும் அதில் மனத்தூய்மையாக நடந்து கொள்கிறாரோ நிச்சயமாக அவரைவிட்டும் அவ்ஊசலாட்டம் அகன்று செல்வது அவசியமாகிவிடுகிறது. ‘நிச்சயமாக அது அவனைவிட்டும் சென்றுவிடும்’ என்ற நபியவர்களின் வார்த்தைக்கு இணங்க ஷைத்தான் துகலாகிவிடுவான்."

நபியவர்களிடத்தில் உஸ்மான் இப்னு அபீல்ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சமூகம் வந்து: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக ஷைத்தான் எனக்கும் எனது தொழுகை மற்றும் குர்ஆன் ஓதுதல் ஆகியவற்றிக்கும் மத்தியில் குறுக்;கிட்டு அவற்றில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றான்" என்றார்கள். அதற்கு நபியவர்கள்: "அவன் தான் ஹன்ஸப் என்று அழைக்கப்படும் ஷைத்தான் ஆவான். எனவே, நீ அவனுடைய குறுக்கீட்டை உணர்ந்தால் அவனில் இருந்தும் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடிக் கொள்! மேலும், உன்னுடைய இடப்புறத்தில் மூன்று விடுத்தங்கள் உமிழ்ந்து கொள்!" என்று கட்டளையிட்டார்கள். குறித்த தோழுர் கூறுகிறார்: "நான் அவ்வாறு செய்தேன். அல்லாஹ் என்னை விட்டும் அவனைத் தூரமாக்கினான்." (முஸ்லிம்: 2203)

உபதேசங்களும் வழிகாட்டல்களும்.

1.   தவ்ஹீதை நிலைநாட்டல், குர்ஆன் சுன்னாவைப் பற்றிப்பிடித்தல், தக்வா, மீளுதல், அல்லாஹ்வின் மார்க்கத்தில் நிலையாக நிற்றல் ஆகியவற்றைப் பேணிக்கொள்ளல், அவன் மீது பொறுப்புச் சாட்டுதலின் உண்மைநிலை, அவனிடத்தில் மீளுதலின் மகத்துவம் ஆகியவற்றைக் கடைபிடித்தல், ஜமாஅத்துடன் தொழுகையைப் பேணிவருதல், ஸதகாக்களைக் கொடுத்தல், நல்ல காரியங்களைச் செய்தல், உருவப்படங்கள், உருவச் சிலைகள், பாடல்கள், ஊதுகுழல்கள் மற்றும் ஏனைய மார்க்கம் வெறுக்கும் அனைத்தை விட்டும் தனது வீட்டைச் சுத்தப்படுத்தல் போன்றவிடயங்களில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகக் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியமாகும்.

இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது "மஜ்மூஉல் பதாவா" (9/429, 21/176) எனும் தொகுப்பில் பின்வருமாறு கூறுகின்றார்கள்: "இசையைக் கொண்டு சிகிச்சை செய்வதைப் பொருத்தளவில் அதற்கு (மார்க்கத்தில்) எவ்வித அடிப்படையும் கிடையாது. மாறாக, அது மடையர்களின் செயலில் நின்றும் உள்ளதாகும். இசை ஒரு சிகிச்சையன்று, என்றாலும் அது ஒரு நோயாகும். மேலும், அது கேலிக்கைக்குரிய கருவிகளைச் சார்ந்தது. எனவே, அவைகள் அனைத்தும் உள்ளங்களுக்கு நோயாகவும் நற்பண்புகள் அற்றுப்போவதற்குக் காரணமாகவும் உள்ளன. மாறாக அல்குர்ஆன், பயனளிக்கும் உரைகள் மற்றும் ஹதீஸ்களைச் செவிமடுப்பது பிரயோசனம் அளிக்கும் சிகிச்சையாகவும் உள்ளங்களுக்கு ஆறுதலைத் தரக்கூடியதாகவும் இருக்கும். மாற்றமாக, இசை மற்றும் அதன் கருவிகளைக் கொண்டு சிகிச்சை செய்வது அவர்களை பிழையான ஒன்றின் மீது இயல்பாக்கிவிடும். மேலும், அவர்களின் நோயிக்கு மேல் இன்னும் நோயை அதிகரித்துவிடும். அத்தோடு குர்ஆன், சுன்னா, பிரயோசனம் மிக்க உபதேசங்கள் ஆகியவற்றைச் செவிமடுப்பதைக் குறைத்துவிடும். அல்லாஹ்வைக் கொண்டேயன்றி எதற்கும் எவ்வித சக்தியும் கிடையாது."

2. சூனியக்காரர்கள், வித்தை காட்டுபவர்கள், குறிபார்ப்பவர்கள் போன்றோரிடத்தில் போவதில் இருந்தும் கடும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். மேலும், அவர்களிடத்தில் வினவுவது அல்லது, அவர்கள் கூறக்கூடியவற்றைக் கொண்டு அவர்களை உண்மைப்படுத்துவது போன்ற செயல்கள் விடயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நபியவர்கள் கூறினார்கள்: "யார் குறிபார்ப்பவரிடத்தில் சென்று (ஒரு விடயத்தைப் பற்றி) அவனிடத்தில் கேட்கிறாரோ அவருடைய நாட்பது இரவுகளின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது." (இச்செய்தி  நபியவர்களின் சில மனைவிகளைத் தொட்டும் முஸ்லிம்: 2230 எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.)

மேலும், நபியவர்கள் கூறினார்கள்: "யார் குறிபார்ப்பவன் அல்லது சாஸ்திரகாரனிடம் சென்று அவன் சொல்பவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கி அருளப்பட்டதை நிராகரித்துவிட்டார்." (இச்செய்தி அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத்: 2/408,429,476 எனும் கிரந்தத்தில் துணை அறிவிப்புக்களைக் கொண்டு ஹஸன் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது.

3. அத்கார்கள் மற்றும் நபியவர்கள் காட்டித்தந்த துஆக்களைக் கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "இந்த அத்கார்களையும் பாதுகாவல் துஆக்களையும் உண்மையாகவும் ஈமானுடனும் அல்லாஹ்வைக் கொண்டு உறுதியுடனும் அவன் மீது முழுமையான நம்பிக்கையுடனும் அவை அறிவிக்கக்கூடியவற்றின் பால் உள்ளம் விரிந்து கொடுக்கப்பட்ட நிலையிலும் ஓதிவருவது சூனியம் இன்னும் அதுவல்லாதவற்றின் தீங்குகளில் இருந்து பாதுகாக்கும் மிகப்பெரிய காரணங்களாகத் திகழும்.

மேலும், இந்த துஆக்களை அல்லாஹ்விடத்தில் தாழ்மைப்பட்டவர்களாக அதிகதிமாக ஓதுவதும் தீங்கை அகற்றுமாறும் கஷ்டத்தை நீக்குமாறும் அவனிடத்தில் கேட்பதும் சூனியம் நிகழ்ந்த பின் அதனை அகற்றுவதற்கு மிகப் பெரிய ஆயுதங்களாக விளங்குகின்றன." (மஜ்மூஉல் பதாவா: 3/278, 8/165, 26/167)

அதன் வரிசையில் பின்வரும் காலை மாலை துக்களைக் குறிப்பிடலாம்.

1.   اللهُمَّ بِكَ أصْبَحْنَا، وَبِكَ أمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوْتُ، وَإِلَيْكَ النُّشُوْر

பொருள்: அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே நாங்கள் காலைப்பொழுதை அடைந்தோம். மேலும், உன்னைக் கொண்டே மாலைப் பொழுதை அடைந்தோம். இன்னும் உன்னைக் கொண்டே நாங்கள் உயிர்வாழ்கிறோம். மற்றும் உன்னைக் கொண்டே நாங்கள் மரணிக்க இருக்கிறோம். மேலும், உன்னிடத்தில்தான் மீளெழுப்பப்படுதல் இருக்கிறது.

மாலைப் பொழுதை அடைந்தால்,

اللهُمَّ بِكَ أمْسَيْنَا، وَبِكَ أصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوْتُ، وَإِلَيْكَ المَصِيْر

பொருள்: அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மேலும், உன்னைக் கொண்டே நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். இன்னும் உன்னைக் கொண்டே நாங்கள் உயிர்வாழ்கிறோம். மற்றும் உன்னைக் கொண்டே நாங்கள் மரணிக்க இருக்கிறோம். மேலும், உன்னிடத்தில் தான் மீளப்படுதல் இருக்கிறது.

இந்த துஆக்கள் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் (2/408, 429, 476) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும் துணைச்சான்று அறிவிப்புக்களை வைத்து இச்செய்தி ஹஸன் எனும் தரத்தைப் பெறுகின்றது.

2. أمْسَيْنَا وَأمْسَى المُلْكُ لله، وَالحَمْدُ لله، لا إلهَ إلا الله وَحْدَهُ لا شَرِيْكَ لهُ، لهُ المُلْكُ، وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، رَبِّ أسْأَلُكَ خَيْرَ مَا فِيْ هَذِهِ اللَيْلَةِ، وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيْ هذِه الليلةِ، وَشَرِّ مَا بَعْدَهَا، رَبِّ أعُوْذُ بِكَ مِنْ الكَسَلِ، (وَالهَرَمِ)، وَسُوْءِ الِكَبِر، (وَفِتْنَةِ الدُّنْيَا)، رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ فِي النَّارِ، وَعَذَابِ فِي القَبْرِ.

பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மேலும், ஆட்சி அதிகாரம் அனைத்தும் மாலைப்பொழுதில் அல்லாஹ்வுக்குரியதாக ஆகிவிட்டது. இன்னும், புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறுயாரும் இல்லை. அவன் தனித்தவன் இணைதுணையற்றவன். அவனுக்கு ஆட்சி அதிகாரமும் புகழ் அனைத்தும் உரியன. இன்னும், அவனே அனைத்து வஸ்துக்கள் மீதும் ஆற்றல் படைத்தவன். என்னுடைய இரட்சகனே! இந்த இரவில் இருக்கும் நலவை உன்னிடத்தில் கேட்கிறேன். இதற்கு பின் இருக்கும் நலவையும் கேட்கிறேன். மேலும், இந்த இரவில் இருக்கும் தீங்கிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். இதற்குப் பின் இருக்கும் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். என்னுடைய இரட்சகனே! சோம்பேறித்தனம், முதுமை, பெருமையின் தீங்கு, உலகத்தின் பித்னா ஆகியவற்றிலிருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். அத்தோடு நரகத்தில் உள்ள வேதனை மற்றும் கப்ரில் உள்ள வேதனை ஆகியவற்றிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்.

மேலும், காலைப் பொழுதை அடைந்தால் இவ்வாறு கூறுவார்.

أصْبَحْنَا وَأَصْبَحَ المُلْكُ لله ......

இந்த துஆ இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (2723) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேல்மிச்சமாக அறிவிக்கப்பட்டவையும் அவருக்குரிய அறிவிப்பாகும்.

3. اللهُمَّ أنْتَ رَبَّيْ لا إلهَ إلا أنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عليَّ، وَأبُوْءُ لَكَ بِذَنْبِيْ، فَاغْفِرْلِيْ، فإنَّهُ لا يَغْفِرُ الذُّنُوْبَ إلا أنْتَ

என்ற துஆவையும் ஓதிக் கொள்ளலாம். இந்த துஆ ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6306) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. இந்த துஆ குறித்து நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "யார் இதனைப் பகல் பொழுதில் நம்பிக்கையுடன் ஓதுதி, மாலை வருவதற்குள் அன்றைய தினமே மரணிக்கின்றாரோ அவர் சுவர்க்க வாசிகளில் ஒருவராக ஆகிவிடுவார். மேலும், யார் இதன் மீது நம்பிக்கை கொண்டவராக இராப்பொழுதில் ஓதி காலை வருவதற்கு முன் மரணத்தைத் தழுவுகிறாரோ அவரும் சுவர்க்க வாசிகளில் ஒருவராக ஆகிவிடுவார்."

பொருள்: அல்லாஹ்வே! நீ என்னுடைய இரட்சகன்! உன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவர் வேறு யாரும் இல்லை. நீ என்னைப் படைத்தாய். மேலும், நான் உன்னுடைய அடியாராக உள்ளேன். இன்னும், நான் உன்னுடைய உடன்படிக்கையின் மீதும் வாக்கின் மீதும் என்னுடைய சக்திக்குற்பட்டவிதத்தில் இருக்கின்றேன். நான் செய்தவற்றின் தீங்கிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன். என் மீதுள்ள உன்னுடைய அருட்கொடையைக் கொண்டு உனக்காக நான் ஏற்றுக் கொள்கின்றேன். மேலும், என்னுடைய பாவத்தைக் கொண்டு உனக்காக நான் ஏற்றுக் கொள்கின்றேன். எனவே, என்னை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக உன்னைத் தவிர பாவங்களை மன்னிக்கக்கூடியவன் வேறுயாரும் இல்லை.

4. اللهُمَّ فَاطِرَ السَّمَواتِ والأرْضِ، عَالِمَ الغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيْكَهُ، أَشْهَدُ أنْ لا إلهَ إلا أنْتَ، أعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ، وَشَرِّ الشّيْطَانِ وَشِرْكِهِ

இந்த துஆ அபூதாவுத் (5067), திர்மிதி (3392) ஆகிய கிரந்தங்களில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (1333) எனும் தொகுப்பில் ஸஹீஹ் எனும் தரத்திலும் ஸஹீஹுத் திர்மிதி (2701) இலும் பதிவாகியுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட துஆவில் இடம்பெறும் شِرْكِهِ என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் அடிப்படையில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவதும் அதன் பால் அழைப்பு விடுப்பதும் நாடப்படுகிறது. இதனை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "அல்அத்கார்" எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள். மேலும், இவ்வார்த்தை இரு பத்ஹுகளைக் கொண்டு شَرَكِهِ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களை குழப்பத்திற்குள்ளாக்க ஷைத்தான் தயார் செய்து வைத்திருக்கும் பொறி மற்றும் சதிவலை ஆகியன நாடப்படுகின்றன. (அவ்னுல் மஃபூத்)

பொருள்: அல்லாஹ்வே! வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றை படைத்தவனே! மறைவான மற்றும் வெளிப்படையானவற்றை அறிந்தவனே! நீயே! அனைத்து வஸ்துக்களினதும் இரட்சகனும் சர்வல்லமையுடையவனுமாக இருக்கின்றாய்! உன்னைத்தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறுயாரும் இல்லை என்று நான் சாட்சி பகருகின்றேன். என்னுடைய ஆத்மாவின் தீங்கில் இருந்தும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும், ஷைத்தானின் தீங்கு மற்றும் அவனின் இணைவைப்பில் இருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.

5. بِسْمِ اللهِ، الذِيْ لا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأرْضِ، وَلا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيْعُ العَلِيْم

என்ற இந்த துஆவை மூன்று விடுத்தங்கள் ஓத வேண்டும்.

இந்த துஆ அபூதாவுத் (5088), திர்மிதி (3388) ஆகிய கிரந்தங்களில் உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும் அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (910) எனும் தொகுப்பில் ஹஸன் எனும் தரத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஸஹீஹுத் திர்மித் (2698) எனும் கிரந்தத்தில்: "யார் இதனைக் கூறுகின்றாரோ அவரை அந்நாளில் அல்லது அந்த இரவில் எந்த ஒன்றும் தீண்டாது" என்று இடம்பெற்றுள்ளது.

பொருள்: பூமியிலோ வானத்திலோ எந்த ஒன்றும் எவனுடைய பெயரைக் கொண்டு தீங்கிழைக்காதோ அத்தகையவனின் பெயரைக் கொண்டு (பாதுகாவல் தேடுகின்றேன்.) மேலும் அவன் நன்கு செவியேற்பவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

6. اللهُمَّ إنِّيْ أسْأَلُكَ العَافِيَة فِي الدُّنْيَا وَالآخِرَة، اللهم إني أسْألك العَفْوَ والعَافِيَة فِي دِيْنِيْ وَدُنْيَايَ وَأهْلِيْ وَمَالِيْ، اللهم اسْتُرْ عَوْرَاتِيْ، وَآمِنْ رَوْعَاتِيْ، اللهم احْفَظْنِيْ مِنْ بَيْنَ يَدَيَّ وَمِنْ خَلْفِيْ، وَعَنْ يَمِيْنِي وعن شِمَالِيْ، ومن فَوْقِيْ، وَأعُوْذُ بِعَظَمَتِكَ أنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ

இந்த துஆ அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் அபூதாவுத் (5074) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும் அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (765) எனும் தொகுப்பில் ஸஹீஹ் எனும் தரத்திலும் ஸஹீஹ் இப்னு மாஜா (3121) இலும் பதிவாகியுள்ளது.

பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடத்தில் உலகிலும் மறுவுலகிலும் பூரண ஆரோக்கியத்தைக் கேட்கிறேன். அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடத்தில் எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்க்கையிலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் பூரண ஆரோக்கியத்தையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! என்னுடைய குற்றம் குறைகளை மறைப்பாயாக! என்னுடைய திடுங்கங்களுக்குப் பாதுகாப்பளிப்பாயாக! அல்லாஹ்வே! எனக்கு முன்னாலும் பின்னாலும் வலதாலும் இடதாலும் மேலாலும் என்னைப் பாதுகாப்பாயாக! மேலும், உன்னுடைய மகத்துவத்தைக் கொண்டு எனக்குக் கீழ் இருந்து நான் கொலை செய்யப்படுவதைவிட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்.

7. لا إلهَ إلا الله، وَحْدَهُ لا شَرِيْكَ لَهُ، وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْر

என்ற துஆவை நூறு விடுத்தங்கள் கூற வேண்டும். இந்த துஆ புகாரி (6403), முஸ்லிம் (2691) ஆகிய கிரந்தங்களில் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

எனவே, யார் இதனைக் கூறுகின்றாரோ அவருக்குப் பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்கு நிகரான கூலி கிடைக்கும். மேலும், நூறு நன்மைகள் எழுதப்பட்டு நூறு தீமைகள் அழிக்கப்படும். மாலை வரை அன்றைய தினத்தில் ஷைத்தானில் இருந்து அவருக்குப் பாதுகாப்பு கிடைக்கும். இன்னும், இதனை அதிகதிகமாகச் செய்கின்ற ஒரு மனிதனைத் தவிர வேறு எவரும் இதனை விட மிகச் சிறந்த ஒன்றைக் கொண்டு வரமாட்டார்.

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன் இணைதுணையற்றவன் அவனுக்கே ஆட்சி அதிகாரமும் புகழும் உரியன. மேலும், அவனே அனைத்து வஸ்துக்கள் மீதும் ஆற்றல் படைத்தவன்.

8. سُبْحَانَ الله، وَبِحَمْدِهِ

இந்த துஆ முஸ்லிம் (2691) எனும் கிரந்தத்தில் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. யார் இதனைக் காலையை அடையும் போதும் மாலையை அடையும் போதும் கூறுகின்றாரோ சொல்லப்பட்ட இது போன்ற வார்த்தையை அல்லது இதை அதிகமாகச் சொன்ன ஒருவரைத்தவிர வேறு எவரும் இதனை விடச் சிறந்த ஒன்றை மறுமை நாளில் கொண்டுவர மாட்டார். மேலும், புகாரி (3293), முஸ்லிம் (2691) ஆகிய கிரந்தங்களில் سبحان الله وبحمده என்ற வார்த்தையை ஒரு நாளில் நூறு விடுத்தங்கள் கூறுவது ஒருவரின் பாவங்களை அழித்துவிடும் என்றும் அவை கடல் நுறையளவு இருந்தாலும் சரியே! என்றும் இடம்பெற்றுள்ளது.

பொருள்: நான் அல்லாஹ்வைத் துதி செய்கின்றேன். மேலும் அவனுடைய புகழைக் கொண்டும் (துதிக்கின்றேன்.)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்