நபி வழியில் வுழூச் செய்வோம் – 03

بسم الله الرحمن الرحيم

6. முகத்தை கழுவியதன் பின்பு இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்.

வுழூச் செய்யும்போது இரு கைகளையும் முழங்கை வரை கழுவுவது கட்டாயமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காக எழுந்தால் உங்களுடைய முகங்களையும் இரு கைகளையும் முழங்கை வரை கழுவிக்கொள்ளுங்கள்.” (அல்மாஇதா: 6)

கைகளைக் கழுவும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலதை முற்படுத்துவதையே விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். என்றாலும் வலதை முற்படுத்திக் கழுவுவது கட்டாயமான ஒன்றல்ல. எவராவது ஆரம்பத்தில் இடது கையை கழுவிவிட்டு பின்பு வலதைக் கழுவினால் அவருடைய வுழூ சரியான மற்றும் செல்லுபடியானதாகும்.

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: 'இடதைவிட வலதை முற்படுத்துவது ஏகோபித்த முடிவின்படி சுன்னாவாகும். ஏகோபித்த முடிவின்படி கட்டாயமான ஒன்றல்ல.” (அல்மஜ்மூஉ)

7. இரு கைகளையும் கழுவியதன் பின்பு தலையை மஸ்ஹு - தடவுதல் - செய்ய வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தலையை ஒரு முறை மாத்திரமே மஸ்ஹு செய்தார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கையை நீரில் நுழைத்தார்கள். பின்பு தனது தலையை மஸ்ஹு செய்தார்கள். தனது இரு கைகளையும் ஒருமுறை முன்னோக்கி பின்பு பின்னோக்கிக் கொண்டு வந்தார்கள்.” (புஹாரீ, முஸ்லிம்)

அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கையை நீரில் நுழைத்து பின்பு தனது தலையை ஒருமுறை மஸ்ஹு செய்தார்கள்.” (ஸஹீஹு அபீதாவூத்)

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'சரியான கருத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல தடவை தனது தலையை மஸ்ஹு செய்யவில்லை என்பதாகும். மாறாக, அவர்கள் ஏனைய உறுப்புக்களை பல தடவைகள் கழுவினாலும் ஒருமுறையே தனது தலையை மஸ்ஹு செய்திருக்கின்றார்கள். இவ்வாறே அவர்களிடமிருந்து தெளிவான செய்தி இடம்பெற்றுள்ளது. இதற்கு மாற்றமாக எச்செய்தியும் அவர்களைத் தொட்டும் சரியாக இடம்பெறவில்லை.” (ஸாதுல் மஆத்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தலையின் முழுப்பகுதியையும் மஸ்ஹு செய்வார்கள். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'உங்களது தலையையும் மஸ்ஹு செய்துகொள்ளுங்கள்.” (அல்மாஇதா: 6)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரு கைகளாலும் தனது தலையை மஸ்ஹு செய்வார்கள். தனது தலையின் ஆரம்பப் பகுதியிலிருந்து ஆரம்பித்து இரு கைகளையும் பிடறி வரை கொண்டு செல்வார்கள். பின்பு மஸ்ஹு செய்ய ஆரம்பித்த இடத்திற்கே தனது கைகளைக் கொண்டுவருவார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: 'பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரு கைகளாலும் தனது தலையை மஸ்ஹு செய்தார்கள். அவ்விரண்டையும் அவர்கள் முன்னோக்கியும் பின்னோக்கியும் கொண்டுவந்தார்கள். தனது தலையின் ஆரம்பப் பகுதியிலிருந்து ஆரம்பித்து அதனை பிடறி வரையும் கொண்டு சென்று பின்பு அவ்விரு கைகளையும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வருவார்கள்.” (புஹாரீ)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைகளைக் கழுவிய நீரினால் சிலவேளை தனது தலையை மஸ்ஹு செய்வார்கள். சிலவேளை புதிய நீரை எடுத்து தலையை மஸ்ஹு செய்வார்கள்.

கைகளைக் கழுவிய பின் புதிய நீரை எடுத்து தலையை மஸ்ஹு செய்தார்கள் என்பதற்கான ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய்கொப்பளித்தார்கள். பின்பு நீரை வெளியேற்றினார்கள். பின்பு தனது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். இன்னும் தனது வலது கையை மூன்று முறையும் அடுத்த கையை மூன்று முறையும் கழுவினார்கள். பின்பு கைகளைக் கழுவிய நீரல்லாமல் (புதிய நீரை எடுத்து) தனது தலையை மஸ்ஹு செய்தார்கள்.” (முஸ்லிம்)

அவர்கள் தனது தலையை கைகளைக் கழுவிய நீரினாலே மஸ்ஹு செய்வார்கள் என்பதற்கான ஆதாரம்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தனது முகத்தை கழுவினார்கள். பின்பு நீரை அள்ளி வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தினார்கள். பின்பு நீரை அள்ளி அதனை இவ்வாறு செய்தார்கள். அதாவது அதனை அடுத்த கையுடன் சேர்த்து அவ்விரு கைகளாலும் தனது முகத்தை கழுவினார்கள். பின்பு நீரை அள்ளி தனது வலது கையைக் கழுவினார்கள். பிறகு நீரை எடுத்து தனது இடது கையைக் கழுவினார்கள். பின்பு தனது தலையை மஸ்ஹு செய்தார்கள். அவர்கள் வுழூச் செய்துவிட்டு 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்வதை நான் இவ்வாறே கண்டேன்” என்று கூறினார்கள். (புஹாரீ)

இந்த ஹதீஸில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் கழுவுவதற்கு நீர் அள்ளி எடுத்ததாக இடம்பெற்றிருக்கின்றது. ஆனால், தலையை மஸ்ஹு செய்தவற்கு மாத்திரம் அவர்கள் நீரை எடுத்ததாக அங்கு குறிப்பிடப்படவில்;லை. எனவே, கைகளைக் கழுவிய நீரினாலே மஸ்ஹு செய்யலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.

8. தலையை மஸ்ஹு செய்வதோடு அதற்குப்பின் இரு காதுகளையும் மஸ்ஹு செய்ய வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையை மஸ்ஹு செய்வதோடு இரு காதுகளையும் மஸ்ஹு செய்வார்கள். காதுகளின் வெளிப்புறத்தை தனது பெருவிரல்களாலும் உட்புறத்தை தனது சுட்டுவிரல்களாலும் மஸ்ஹு செய்வார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்தார்கள். நீரை அள்ளி வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தினார்கள். பின்பு நீரை அள்ளி தனது முகத்தை கழுவினார்கள். பின்பு நீரை அள்ளி தனது வலது கையை கழுவினார்கள். பின்பு நீரை அள்ளி தனது இடது கையை கழுவினார்கள். பின்பு தனது தலையையும் இரு காதுகளையும் மஸ்ஹு செய்தார்கள். காதுகளின் உட்புறத்தை சுட்டுவிரல்களாலும் வெளிப்புறத்தை தனது பெருவிரல்களாலும் மஸ்ஹு செய்தார்கள்.” (நஸாஈ, இப்னுமாஜா)

தலையை மஸ்ஹு செய்த நீரினாலே அவர்கள் காதுகளையும் மஸ்ஹு செய்வார்கள். காதுகளை மஸ்ஹு செய்தவற்கு புதிய நீர் எடுக்கமாட்டார்கள். இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தலையுடன் இரு காதுகளையும் மஸ்ஹு செய்வார்கள். காதுகளின் வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் மஸ்ஹு செய்வார்கள். காதுகளை மஸ்ஹு செய்வதற்கு அவர்கள் புதிய நீர் எடுத்ததாக அவரை தொட்டும் உறுதியாகவில்லை.” (ஸாதுல் மஆத்)

9. காதுகளை மஸ்ஹு செய்வதன் பின்பு இரு கால்களையும் கழுவ வேண்டும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'உங்கள் கால்களையும் கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள்.” (அல்மாஇதா: 6)

எனவே, கால்களைக் கழுவுவது கட்டாயமாகும். கால்களைக் கழுவும்போது கால்விரல்களைக் கோதிக்கழுவுவது சுன்னாவாகும். இதற்கான ஆதாரம் முன்பு கூறப்பட்டுவிட்டது.

குறிப்பு: நபி ஸல்லல்லாஹு அலைஹி அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்யும்போது ஒவ்வொரு உறுப்புக்களையும் மூன்று முறை கழுவியுள்ளார்கள்.

ஆதாரம்: உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒவ்வொரு உறுப்புக்களையும் மூன்று முறை கழுவிவிட்டு 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய இந்த வுழூவைப்போன்று வுழூச் செய்வதை நான் கண்டேன்” என்று கூறினார்கள். (புஹாரீ)

சிலவேளை அவர்கள் தனது உறுப்புக்களை இரண்டு முறைகள் கழுவியிருக்கின்றார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு உறுப்புக்களையும் இரண்டு முறைகள் கழுவி வுழூச் செய்தார்கள்.' (புஹாரீ)

சிலவேளை அவர்கள் சில உறுப்பக்களை மூன்று முறைகளும் சில உறுப்புக்களை இரண்டு முறைகளும் கழுவுவார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வுழூவைப்பற்றி கேட்கப்பட்டபோது அவர்கள் வுழூச் செய்து காண்பித்தார்கள். நீரை தனது இரு கைகளுக்கும் ஊற்றி மூன்று முறை கழுவினார்கள். பின்பு பாத்திரத்தில் தனது கையை நுழைத்து மூன்று கையளவு நீரினால் மூன்று முறை வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் அந்நீரை செலுத்தி வெளியேற்றினார்கள். பின்பு பாத்திரத்தில் தனது கையை நுழைத்து நீர் எடுத்து தனது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு பாத்திரத்தில் தனது கையை நுழைத்து நீர் எடுத்து தனது இரு கைகளையும் முழங்கை வரைக்கும் இரு முறைகள் கழுவினார்கள். (புஹாரீ)

இந்த ஹதீஸில் அவர்கள் தனது கைகளை இரு முறையும் ஏனைய உறுப்புக்களை மூன்று முறைகளும் கழுவியிருக்கின்றார்கள்.

சிலவேளை அவர்கள் ஒவ்வொரு உறுப்புக்களையும் ஒரு முறை மாத்திரம் கழுவுவார்கள்.

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு உறுப்புக்களையும் ஒவ்வொரு முறை கழுவி வுழூச் செய்தார்கள்.” (புஹாரீ)

மூன்று தடவைகளுக்கு அதிகமாக வுழூச் செய்வதை அவர்கள் தடுத்தார்கள். ஒரு நாட்டுப்புறவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து வுழூவைப்பற்றி கேட்டார்கள். அதற்கு அவர்கள் அம்மனிதருக்கு ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்மூன்று முறைகள் கழுவி வுழூச் செய்து காண்பித்தார்கள். பின்பு 'வுழூ இவ்வாறுதான், இதைவிட யார் அதிகரிக்கிறாரோ அவர் தீங்கிழைத்துவிட்டார், வரம்பு மீறிவிட்டார், அநியாயம் இழைத்துவிட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹு அபீதாவூத்)

அல்லாஹ்வின் அருளின் காரணமாக இந்தத் தொகுப்பினூடாக நபிவழியில் எவ்வாறு வுழூச் செய்ய வேண்டும் என்பதை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியிருக்கின்றேன். ஆகவே, எமது வுழூக்களை இந்த அடிப்படையில் நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும், இத்தொகுப்பை பிறருக்கும் வழங்கி அவர்களுக்கும் இதனைக்கொண்டு பிரயோசனமடையச் செய்வது அனைவரினதும் கடமையாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

-     தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்