தொழுகையில் குனூதுந்நாஸிலா ஓதலாமா?

بسم الله الرحمن الرحيم

வினா: தொழுகையில் குனூதுந்நாஸிலா ஓதலாமா?

விடை: பெரும்பான்மையான அறிஞர்கள் முஸ்லிம்களுக்கு ஏதாவதொரு பிரச்சினை ஏற்படும் போது தொழுகைகளில் குனூத்துந்நாஸிலா ஓதமுடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் இது குறித்து பல ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலாவது ஹதீஸ்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமாத காலம் ருகூஉக்குப் பின்னால் அரேபியர்களின் கிராமங்களில் சில கிராமங்களுக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள்.

புஹாரீ: 4089, முஸ்லிம்: 677,304

இரண்டாவது ஹதீஸ்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கூட்டத்திற்காகப் பிரார்த்தித்து அல்லது ஒரு கூட்டத்திற்கு எதிராகப் பிரார்த்தித்தே தவிர அவர்கள் குனூத் ஓதவில்லை.

இப்னு ஹுஸைமா: 620

மூன்றாவது ஹதீஸ்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருக்காக அல்லது ஒருவருக்கெதிராகப் பிரார்த்திக்க நாடினால் ருகூஉக்குப் பின்னால் குனூத் ஓதுவார்கள்.

புஹாரீ: 4560, இப்னு ஹுஸைமா: 619

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: இக்கருத்தே சுன்னாவுக்கு மிக நெருங்கிய கருத்தாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் குனூத்துந்நாஸிலா உறுதியாகியுள்ளது. ஆகவே, அது சுன்னா என்பதை வேண்டி நிற்கின்றது.

பார்க்க: ஷர்ஹுல் முஹத்தப்: 3/  494,  அல்முங்னீ: 2: 586 - 587, பத்ஹுல் அல்லாம் 1 / 772 - 773

தமிழாக்கம்: அஸ்கி இப்னு ஷம்ஷிலாப்தீன்