துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்.

بسم الله الرحمن الرحيم

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைச் சிறப்பித்துப் பல செய்திகள் குர்ஆன், ஹதீஸ் நெடுகிலும் பதிவாகியுள்ளன. அந்த விதத்தில் அல்பஜ்ர் அத்தியாயத்தின் துவக்கத்தில் அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

விடியற்காலை மீது சத்தியமாக, பத்து இரவுகள் மீதும் சத்தியமாக. இவ்வசனத்தில் பத்து இரவுகள் என்ற வாசகத்தின் மூலம் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்கள் நாடப்படுவதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (தப்ஸீர் இப்னு கஸீர்)

மேலும், அல்ஹஜ் அத்தியாயத்தின் 28ஆம் வசனத்தில் அல்லாஹுத்தஆலா துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை இவ்வாறு அறிமுகம் செய்கின்றான். மேலும், குறிப்பிடப்பட்ட நாட்களில் (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயரை அவர்கள் கூறுவதற்காகவும் என்கிறான்.

இங்கு குறிப்பிடப்பட்ட நாட்கள் என்ற வார்த்தையின் மூலம் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்கள் நாடப்படுகின்றன என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி) அதேபோன்று, ஹதீஸ்களைப் புரட்டிப் பார்த்தாலும் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள் குறித்து பல செய்திகள் பதிவாகியிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. எடுத்துக்காட்டாக இரு செய்திகளை மாத்திரம் சமர்ப்பிக்கின்றேன்.

உலக நாட்களில் (துல்ஹஜ்ஜுடைய முதல்) பத்து நாட்களே மிகச் சிறப்புடையன என நபியவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇஸ் ஸகீர்) ஏன் இந்தளவுக்கு துல்ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்கள் சிறப்புடையனவாகக் கருதப்படுகின்றன என்பதை சற்று ஆராய்ந்து பார்த்தால் சிறப்புவாய்ந்த ஒரு கூற்றை இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது பத்ஹுல் பாரி எனும் நூலில் பதியவைத்துள்ளார்கள். அதாவது, துல்ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்களைப் பொருத்தளவில் அந்நாட்களில் ஐம்பெரும் தூண்களில் உள்ளடங்கக்கூடிய தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய வணக்கவழிபாடுகள் சங்கமிக்கின்றன. இந்நிலையைக் கருத்திற்கொண்டே குறித்த நாட்களுக்கு இத்தகைய சிறப்பு வழங்கப்பட்டிருக்க முடியும் என்கிறார்கள்.

மேலும், இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்கள் சிறந்தனவா அல்லது ரமாளான் மாத்தின் கடைசிப் பத்து நாட்கள் சிறந்தனவா என வினவப்பட்டபோது, துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களினது பகல்கள் ரமழான் மாத்தின் கடைசிப் பத்து நாட்களின் பகல்களைவிடச் சிறந்தன என்றும் ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களின் இரவுகள் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களின் இரவுகளைவிடச் சிறந்தன என்றும் பதிலளித்தார்கள். (மஜ்மூஉல் பதாவா)

இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மேற்குறித்த பதில் தொடர்பாக இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விளக்கமளிக்கையில் துல்ஹஜ் மாத்தின் முதல் பகல்களில் அரபாதினம், அறுத்துப்பலியிடும் தினம் மற்றும் தல்பியாவுடைய தினங்கள் போன்றன உள்ளடங்குவதானால் அத்தினங்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களின் பகல்களைவிடச் சிறந்தனவாகவும் ரமழானின் கடைசி பத்து நாட்களின் இரவுகளில் இராத் தொழுகையுடைய தினங்கள் மற்றும் லைலதுல் கத்ர் இரவு ஆகியன இடம்பெறுவதனால் அத்தினங்கள் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களின் இரவுகளை விடச் சிறந்தனவாகத் திகழுகின்றன எனத் தெரிவித்துள்ளார்கள். (பதாஇஉல் பவாஇத்)

அதேபோன்று, துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் குறித்து மற்றுமொரு ஹதீஸைக் குறிப்பிடலாம்.

(மனிதன்) நல்லமல் செய்கின்ற நாட்களில் இந்த துல்ஹஜ்ஹுடைய பத்து நாட்களைப் போல் அல்லாஹ்வுக்கு மிக உவப்பான நாட்கள் வேறு எதுவும் இருக்க முடியாது. (அப்போது தோழர்கள்), அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் பாதையில் போராடுவதைவிடவுமா? என வினவினார்கள். (அதற்கு நபியவர்கள்), அல்லாஹ்வுடைய பாதையில் செய்யப்படும் அறப்போராட்டமாக இருந்தாலும் அது நிகராக அமையாது (என்று கூறிவிட்டு) தனது ஆத்மா மற்றும் செல்வம் ஆகியவற்றைக் கொண்டு வெளியேறி அவை ஒன்றுடனும் திரும்பிவராத போராளியைத்தவிர என நபியவர்கள் விதிவிலக்களித்ததாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹ் சுனன் திர்மிதி)

இச்செய்தி குறித்து இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விளக்கமளிக்கையில், துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படுகின்ற அமல்கள் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாக இருக்கின்றன எனவும் ஜிஹாதின் வகைளில் மிகப் பிரதானமான காபீர்களுடன் (பல தியாகங்களுக்கு மத்தியில்) மேற்கொள்ளப்படும் போராட்டத்தின் மூலம் நிகழும் மரணத்தைத்தவிரவுள்ள அனைத்து அமல்களும் அல்லாஹ்விடத்தில் சிறப்பு வாய்ந்தனவாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள். (ளதாஇபுல் மஆரிப்)

துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்கள் புரிவதற்கு விரும்பத்தக்க செயல்கள்.

பொதுவாக துல்ஹஜ்மாதத்தின் முதல் பத்து நாட்களில் புரியப்படும் அமல்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருப்பதினால் அத்தினங்களில் பர்ளான மற்றும் உபரியான கிரியைகளில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். இவ்வடிப்படையை மையமாக வைத்து எம்முன்னோர்கள் காரியமாற்றியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் வரலாற்றைப் படிக்கின்ற போது புரிந்து கொள்ளலாம். ஸஈத் இப்னு ஜுபைர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களை அடைந்தல் தன்னால் முடியாமல் போகும் வரை வணக்க வழிபாடுகள் விடயத்தில் முயற்சிப்பார்கள். (ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்)

எனவே இதற்கமைய சில வணக்க வழிபாடுகளை உங்கள் முன் பட்டியல் படுத்துகின்றேன்.

1. நோன்பு நோற்றல்.

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களில் அதிகமாக நோன்புகளை நோற்பது சிறந்த அம்சமாகும். இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் லதாஇபுல் மஆரிப் என்ற நூலில் கூறும் போது: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களை அடைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருப்பார்கள். மேலும், அதிகமான அறிஞர்கள் அதன் சிறப்பு குறித்து பேசியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.

மேலும், அத்தினங்களில் வழியுறுத்தப்பட்ட ஒரு நோன்பும் உள்ளது. அதுவே அரபாவுடைய நோன்பாகும். நபியவர்கள் அரபா நோன்பு பற்றி வினவப்பட்டபோது அந்நோன்பானது சென்ற வருடம் மற்றும் அடுத்த வருடம் ஆகிய காலங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என பதிலளித்ததாக அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். (முஸ்லிம்)

2. இராத்தொழுகையில் ஈடுபடல்

இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் தனது லதாஇபுல் மஆரிப் எனும் நூலில் தொடர்ந்து கூறுகையில் இராத் தொழுகையை அத்தினங்களில் பேணிவருவதும் ஏற்றமாகும் என்கிறார்கள்.

ஸஈத் இப்னு ஜுபைர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அத்தினங்களை அடைந்தால் உங்கள் விளக்குகளை (குறித்த அப்)பத்து நாட்களின் இரவுகளில் அணைக்க வேண்டாம் எனக் கூறுவார்கள்.

3. அல்லாஹ்வை ஞாபகித்தல்

நாம் ஏற்கனவே திருக்குர்ஆன் வசனத்தைக் கொண்டு அடிக்கோடிட்டுக் காட்டிய பிரகாரம் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வை ஞாபகிக்கும் காலம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த அடிப்படையில் அத்தினங்களில் அல்லாஹ்வை ஞாபகபபடுத்துவது மிக ஏற்றமான செயலாகும். இப்னு உமர், அபூஹுரைரா, அபான் இப்னு உஸ்மான், மைமூனா, உமர் இப்னு அப்தில் அஸீஸ் போன்றோரின் வரலாறுகளைப் படிக்கும் போது இவ்வம்சம் அமுலில் இருந்ததை அவதானிக்கலாம்.

இவைதவிர்ந்த இன்னும் பல உபரியான காரியங்கள் பல உள்ளன. அவற்றையும் அத்தினங்களில் மேற் கொண்டு எங்கள் பதிவேட்டில் நன்மைகள் பல சேர்த்திட வல்ல இறைவனைப் பிரார்த்திற்கின்றேன்.

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK