தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள் – 1

அறபியில்: அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி

தமிழில்: அபு ஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்

மொழிபெயர்த்தோன் உரை

الحمد لله ، والـصـلاة والـسـلام على رسول الله ، وعلى آله وأصحابه ومن اهتدى بهداه، أما بعد

அன்பின் வாசகர் நெஞ்சங்களுக்கு;

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

நாம் கீழே பதிவாக்கியுள்ள தமிழாக்கம் யமன் திருநாட்டில் 'தம்மாஜ்' எனும் பிரதேசத்தில் 'தாருல் ஹதீஸ்' எனும் நாமத்தில் இயங்கிவரும் கலாசாலையைத் தலைமை தாங்கி வழிநடாத்திச் செல்லும் அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் 'அல்மபாதிஉல் முபீதா பித் தவ்ஹீதி வல் பிக்ஹி வல் அகீதா' என்ற நூலாகும்.

இந்நூலில் மார்க்கக் கல்வியின் பிரதான பிரிவுகளில் மூன்றின் உள்ளடக்கம் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அவை தவ்ஹீத், பிக்ஹ் மற்றும் அகீதா ஆகியனவாகும்.

உண்மையில், இம்முப்பிரிவுகளும் இஸ்லாத்தில் பிரவேசித்துள்ள அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய அம்சங்களாகும். அவற்றைச் சரிவரக் கற்பதின் மூலமே ஒரு முஸ்லிம் தனது கடமையை உணர்ந்து செயற்பட முடிகின்றது. எதார்த்தத்தில் கூறப்போனால், அத்தகைய அம்சங்களைக் கற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் வயதெல்லை கிடையாது. தன்னை முஸ்லிம் என்று சொல்லும் அனைவரும் இது விடயத்தில் கவனம் எடுத்தேயாக வேண்டும்.

இன்று எம்சகோதரர்களில் பலரிடத்தில் இப்பிரிவுகள் தொடர்பான அறிவு இல்லாத நிலையைக் காண்கின்றோம். அதற்கு என்ன காரணம் என்று நினைக்கின்றீர்;கள்? நிச்சயமாக அவர்கள் சிறுபராயத்தில் இருக்கும் போது அவர்களின் பெற்றோர்கள் இது விடயத்தில் விட்ட தவறுதான் காரணமாகும். உண்மையில், பெற்றோர்களாகிய அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வி தொடர்பான போதனைகளை வழங்கியிருப்பார்களானால் நிச்சயமாக அவர்களுக்கு மத்தியில் நிகழும் பிரச்சினைகளின் போது அவற்றைச் சரிவரப் பகுப்பாய்வு செய்து எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவைப் பெற்றிருப்பார்கள். இந்நிலை இனியும் நீடிக்கக்கூடாது. எம்மை மாற்றிக் கொள்ள முயற்சி எடுப்போம்.

அம்முயற்சியின் ஒருகட்டமாக, இந்நூலாசிரியர் நாம் ஏலவே குறிப்பிட்ட பிரதான பிரிவுகளை இலகுவாக சிறார்களின் மனதில் பதியவைப்பதற்காக கேள்வி பதில் என்ற அமைப்பில் குர்ஆன் சுன்னாஹ் ஆதாரங்களின் அடிப்படையில் தொகுத்துத்தந்துள்ளார். அவை நிச்சயம் வாசிப்பதற்கும், விளங்குவதற்கும், மனனமிடுவதற்கும் இலகுவாக இருக்கும்.

எனவே, நாமும் இதனை வாசித்துப் பயன்பெறுவதுடன் எம் பிள்ளைகளுக்கும் பயனடைய வைக்கக்கூடிய முயற்சிகளைச் செய்ய வேண்டும். அந்தவிதத்தில், மார்க்க விடயங்களை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கக்கூடிய அழைப்பாளர்களும், மார்க்க விடயங்களைப் படிப்பதிலும் அதனைப் பிறருக்கு சென்றடைவதற்கான வழிவகைகளைச் செய்வதிலும் கரிசனை காட்டக்கூடியவர்களும் இப்புத்தகத்தை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து படிக்கத் தூண்ட முடியும். இன்னும், இதனை கல்வி போதிக்கும் பாடசாலைகள், பள்ளிக்கூடங்கள், மத்ரஸாக்கள் போன்றவற்றில் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இணைத்து பயிற்றுவிக்கவும் முடியும்.

மேலும், இப்புத்தகத்தின் முதற்பகுதியில் நூலாசிரியர் தவ்ஹீதின் உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசியுள்ளார். அதனைத்தான் நாம் இங்கு பிரசுரித்துள்ளோம். ஏனைய இரு பகுதிகளையும் இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் பகுதி பகுதியாக பிரசுரிப்போம். அத்தோடு, எமது தமிழாக்கத்தின் ஈற்றில் அதனை முழுமையாக அனைவரும் தம்வசம் வைத்து வாசித்துப் பயன்பெறுவதற்காக வேண்டி நூல்வடிவிலும் வெளியாக்கத் திட்டமிட்டுள்ளோம். அல்லாஹ் எம் பணிகளைச் சரிவரச் செய்ய என்றும் எமக்குத் துணை நிற்பானாக!

முன்னுரை

அருள் பொருந்தியதும் சிறப்புமிக்கதுமான புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! மேலும், வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் இணைதுணையற்றவன் என்றும் சாட்சி பகருகின்றேன். இன்னும், நிச்சயமாக முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனின் அடியாரும் தூதருமாவார் என சாட்சி பகருகின்றேன். அடுத்து,

அல்லாஹுத்தஆலா தன்னுடைய சங்கைமிக்க வேதத்தில் கூறும் போது: 'யஃகூபுக்கு மரணம் வந்தபோது (யூதர்களே!) நீங்கள் (அங்கு) பிரசன்னமாக இருந்தீர்களா? அவர் தனது பிள்ளைகளிடம், எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்? எனக் கேட்ட போது அவர்கள், உமது இரட்சகனும் உமது மூதாதையர்களாகிய இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் ஆகியோரின் இரட்சகனுமாகிய ஒரே இரட்சகனையே வணங்கி அவனுக்கே நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக நடப்போம் எனக் கூறினர்.' (அல்பகரா: 133)

மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவாகியுள்ளதாவது, 'ஒரு நாள் நான் நபியவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தேன், (அப்போது நபியவர்கள் என்னை நோக்கி,) சிறுவனே! நிச்சயமாக நான் உனக்கு சில வார்த்தைகளைக் கற்றுத் தருகின்றேன். நீ அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் போணிப்பாதுகாத்துக் கொள் அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான்! நீ அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பேணிப்பாதுகாத்துக் கொள் நீ அவனை உன் கண்ணெதிரில் கண்டு கொள்வாய்! நீ கேட்பாதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்! மேலும், நீ உதவிதேடுவதென்றால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! இன்னும், அறிந்து கொள்! நிச்சயமாக உம்மத்தினர் (அனைவரும்) உனக்கு ஏதாவது ஒன்றைக் கொண்டு பிரயோசனம் அளிக்க நாடினால், அல்லாஹ் உனக்கென்று எழுதியதைக் கொண்டேயன்றி வேறு எதனைக் கொண்டும் அவர்களால் உனக்கு பிரயோசனம் அளிக்க முடியாது. மேலும், (அவர்கள் அனைவரும்) ஒன்றிணைந்து ஏதாவது ஒன்றைக் கொண்டு உனக்குத் தீங்கிழைக்க நாடினால், அல்லாஹ் உன் மீது எழுதியிருக்கின்ற ஒன்றைக் கொண்டேயன்றி (வேறு எதனைக் கொண்டும்) அவர்களால் உனக்குத் தீங்கிழைக்க முடியாது. (விதியை எழுதிய) பேனைகள் உயர்த்தப்பட்டுவிட்டன, (அவை எழுதப்பட்ட) ஏடுகளும் காய்ந்துவிட்டன.

இக்குர்ஆனிய வசனமும் நபிகளாரது பொன்மொழியும் மற்றும் இவை இரண்டைப் போன்ற மூலாதரச் சான்றுகளும் பிள்ளைகளுக்கு அல்லாஹ்வின் ஏகத்துவம் தொடர்பான வார்த்தைகளின் மொத்த தொகுப்புக்களைச் சொல்லிக் கொடுப்பதற்கும், அவனை வணங்குவது பற்றிக் கற்றுக் கொடுப்பதற்கும், அவனது எல்லைகளைப் பேணிப்பாதுகாப்பதற்கும், அவன் மீது பொறுப்புச் சாட்டுவதற்கும், அவனது கண்காணிப்பை உணர்த்துவதற்கும், நல்லது கெட்டதாக அமையக்கூடிய விதியை விசுவாசம் கொள்வதற்கும் அடிப்படையாக அமைந்துள்ளன. மேலும், எவர் இதனடிப்படையில் (சிறுபராயத்தில் இருந்து) வளர்ந்துவருகிறாரோ அவர் ஸாலிஹான நல்லடியார்களில் ஒருவராகத் திகழ்வதற்கு மிகப்பொருத்தமானதாக எதிர்பார்க்கப்படும் சரியான மற்றும் மார்க்கரீதியிலான தர்பியா இதுவேயாகும். இதனாலும் நான் என்னுடைய சிறிய பிள்ளைகளுக்காக வேண்டி (இந்நூலை) எழுதுவதற்குத் தூண்டப்பட்டேன். – நான் அல்லாஹ்விடத்தில் அவர்களைச் சீர் செய்யுமாறும், அவர்களைக் கொண்டு சீர் செய்வதையும் கேட்கின்றேன் - தவ்ஹீத், அகீதா, பிக்ஹ் ஆகியவற்றின் அடிப்படைகள் தொடர்பான இந்த இலகுவான வார்த்தைகள் குர்ஆன், சுன்னாஹ் ஆதாரங்களைக் கொண்டு உறுதி செய்யப்பட்டவையாகும். இதனைக் கொண்டு அவர்களும், ஏனைய முஸ்லிம்களின் பிள்ளைகளும் பிரயோசனம் அடைய அல்லாஹ்விடம் ஆசை வைக்கின்றேன். மேலும், அல்லாஹ்விடத்தில் பொருத்தத்தையும் கேட்கின்றேன்.

அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி
ரஜப் மாதம் 1425 ஹிஜ்ரி

இன்ஷா அல்லாஹ் தொடரும்