தலை முடியை நீளமாக வளர்ப்பது சுன்னாவைச் சார்ந்ததா?

بسم الله الرحمن الرحيم

தலை முடியை நீளமாக வளர்ப்பது சுன்னாவைச் சார்ந்த அம்சம் என்றும் அவ்வாறு செய்யாதவர்கள் சுன்னாவை கைவிட்டவர்கள் என்றும் ஸலபி தஃவா என்ற போர்வையில் சிலர் பிரச்சாரம் செய்து வருவதை நாம் அறிகின்றோம். மேலும், இது விடயத்தில் பிடிவாதத்துடன் செயற்படக்கூடியவர்களாகவும் அவர்கள் காணப்படுகின்றார்கள்.

உண்மையில் முடி வளர்ப்பது சுன்னாவா? இல்லையா? என்பதை நாம் அறிந்து கொள்ள அவசியப்பட்டிருக்கின்றோம். இது விடயம் குறித்து அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மற்றும் அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் ஆகியோர் சரியான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களிருவரினதும் கருத்தை இங்கு நாம் பதிய வைக்கின்றோம்.

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

"முடி வளர்ப்பது சுன்னாவைச் சார்ந்த அம்சமல்ல. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை வளர்த்தது மக்கள் அக்காலத்தில் அதை வளர்க்கக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதற்காகவேயாகும். இதன் காரணமாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையின் சில பகுதியை வழித்த ஒரு சிறுவனைக் கண்டபோது: ‘நீ முழுமையாக வழித்து விடு! அல்லது, அதை முழுமையாக விட்டுவிடு!’ என்று கூறினார்கள். முடியை வளர்ப்பது அவசியமான ஒன்றாக இருந்திருந்தால் ‘முடியை அப்படியே நீ விட்டுவிடு!’ என்று கூறியிருப்பார்கள். எனவே, இதன்படி முடி வளர்ப்பது சுன்னாவைச் சார்ந்த அம்சமல்ல என்று நாம் கூறுகிறோம். என்றாலும், மனிதர்கள் இச்செயலை வழமை என்ற அடிப்படையில் செய்பவர்களாக இருந்தால் நீங்களும் அவ்வாறு செய்து கொள்ளலாம். அவ்வாறான ஒரு வழமை காணப்படாவிடின் மனிதர்கள் எதை வழமை என்ற அடிப்படையில் செய்கிறார்களோ அதை நீங்களும் செய்து கொள்ளுங்கள்! எனது சகோதரர்களே! ஏனென்றால், சுன்னாவென்பது தனிப்பட்ட விதத்தில் சிலவேளை சுன்னாவாக இருக்கும். இன்னும் சிலவேளை அதன் இனத்தை வைத்து சுன்னாவாக்கப்பட்டதாக இருக்கும். உதாரணமாக, ஆடைகளைப் பொறுத்தமட்டில் அது ஹராமான ஆடைகளாக இருக்காவிட்டால் மனிதர்கள் அது விடயத்தில் எந்நிலைப்பாட்டில் உள்ளார்களோ அதைப் பின்பற்றுவதே சுன்னாவாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களின் வழமையைப் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்காரியத்தைச் செய்தார்கள். எனவே, முடியை வளர்க்காமல் இருப்பதே தற்போது மனிதர்களுடைய வழமையாக ஆகியிருக்கின்றது என்று நாம் கூறுகின்றோம். இதன் காரணமாகவே எங்களுடைய பெரிய ஆலிம்களை நோக்குகையில் அவர்களுள் நான் முதலாவதாக எங்களுடைய ஷெய்ஹ் நாஸிர் அஸ்ஸஃதி அவர்களைக் குறிப்பிடுகின்றேன். அவ்வாறே எங்களுடைய ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ், அவ்வாறே ஏனைய ஷெய்ஹ்மார்கள், இன்னும் முஹம்மத் இப்னு இப்றாஹீம் மற்றும் அவருடைய சகோதரர்கள், இன்னும் பெரிய ஆலிம்களில் உள்ள ஏனையோர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் முடியை வளர்க்கமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் இதை சுன்னாவாகப் பார்க்கவில்லை. இவர்கள் இதை சுன்னாவாகப் பார்த்திருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுவதை கடைபிடிப்பதற்காக வேண்டி இது விடயத்தில் மனிதர்களில் மிகவும் கடுமையானவர்களாக இருந்திருப்பார்கள் என்பதை நாம் அறிவோம். இவர்கள் அனைவரும் இதுவிடயத்தில் வழமையைப் பின்பற்றினார்கள் என்பதே சரியான ஒன்றாகும். மனிதர்கள் முடியை வளர்க்கின்ற ஒரு பிரதேசத்தில் வசிக்கக்கூடியவராக நீங்கள் இருந்தால் நீங்களும் அதை வளர்த்துக்கொள்ளுங்கள்! அவ்வாறு இருக்காவிட்டால் நீங்கள் அதை வளர்க்காதீர்கள்!”

இந்த பத்வா ஷெய்ஹ் அவர்களின் திறந்த சந்திப்பின் மார்க்கத் தீர்ப்புக்கள் தொகுப்பில் பதிவாகியுள்ளது.

அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

"முடி வளர்க்கின்ற இந்த வழமையான வழிமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் உறுதியான ஒரு செய்தியாகும். அவர்களுக்கு நீண்ட முடி காணப்பட்டது. சிலவேளை அது இரு காதுகளின் சோனையை அடையும். அது நீளமாகிவிட்டால் தோளின் உச்சப் பகுதியை அடையும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் நுழையும்போது அவர்களுடைய முடி நான்கு பின்னல்களாகப் பின்னப்பட்டு இருந்த நிலையில் நுழைந்தார்கள் என்ற செய்தியும் உறுதியாகியுள்ளது. முதலாவதாக முடியை வளர்ப்பதும், இரண்டாவதாக அதை பல பின்னல்களாக அமைப்பதும் இபாதத் ரீதியான வழிமுறையா? அல்லது வழமை ரீதியான வழிமுறையா? இது வழமை ரீதியான வழிமுறையாகும் என்பதில் தடுமாற்றம் கொள்ளத் தேவையில்லை என்பதும் அதனை ஆகுமாக்கி வைக்கக்கூடிய மற்றும் அதன் பால் தூண்டக்கூடிய செய்திகள் இடம்பெற்றுள்ளனவா? என்று சிந்திப்பதும் அவசியமில்லை என்பதே என்னைப் பொறுத்தளவில் இதற்கான பதிலாகும்.

ஏன்?!

முதலாவதாக: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வழிமுறையை உருவாக்கவில்லை. இந்த வழிமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்திற்கு முன்பிருந்தே இருந்தது என்று கூறுவதை விட அவருடைய பிறப்பிற்கு முன்பிருந்தே காணப்பட்டது எனலாம். இது அரேபியர்களின் வழமையில் காணப்பட்ட ஒரு விடயம். அவர்கள் அவர்களுடைய முடியை வளர்க்கக்கூடியவர்களாக இருந்தார்கள். சிரியா நாட்டின் சில பள்ளத்தாக்குகளில் வசிக்கக்கூடிய அவர்களைச் சார்ந்த வாலிபர்களும் இன்று வரைக்கும் அவர்களுடைய முடியை வளர்த்து அதை பல பின்னல்களாக ஆக்குவதை நாம் பார்த்திருக்கின்றோம். இந்த வழமையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கவில்லை. மாறாக, இது அரேபியர்களின் வழமையில் காணப்பட்டு வந்த ஒன்றாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருடைய முடியை நீளமாக வளர்த்தார்கள். மக்காவில் நுழையும் நாளன்று நான்கு பின்னல்களாக இருந்த நிலையில் நுழைந்தார்கள்.

இந்த வழிமுறையை வழமை ரீதியான வழிமுறையாக நாம் கணிப்பிடக்கூடாது என்பதை அவசியப்படுத்தும் எந்த ஒன்றும் கிடையாது. இவ்வாறு வளர்த்த நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயல்களையும் இவ்வாறான ஒரு விளக்கத்தில் (தெளிவின்றி) எடுத்துக்கொண்டு தற்காலத்தில் பொடுபோக்காக இருக்கக்கூடிய மனிதர்களை அதிலும் குறிப்பாக அறிவைத் தேடும் மாணவர்களை நாம் பார்ப்பது அவசியமானதாகும். அம்மாணவர்கள் எல்லை மீறி சில விடயங்களில் மூழ்கிச் சென்றுள்ளார்கள். சில வாலிபர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னா என்று கருதியவர்களாக முடியை வளர்க்க நாடுகின்றார்கள். ஆம். இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயலில் உள்ள ஒன்று என நான் கூறுகின்றேன். ஆனாலும், இவ்வாறு முடியை வளர்ப்பதே மிகச் சிறந்தது என்பதை அறிவிக்கக்கூடிய எந்த ஒரு செய்தியும் இல்லை. மாறாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது போன்று ‘நீங்கள் முழுமையாக வழித்து விடுங்கள்! அல்லது, முழுமையாக விட்டுவிடுங்கள்!’ என்று கூறினார்கள்.

எனவே, முடி வளர்ப்பது இபாதத் ரீதியான வழிமுறையல்ல. மாறாக, அது வழமை ரீதியான வழிமுறையே ஆகும். ஒரு மனிதன் வழமை என்ற அடிப்படையில் முடியை வளர்த்தால் அல்லது அவனுடைய படைப்பமைப்புக்கு நேர்படக்கூடிய விதத்தில் மாறிமாறி வரும் காலத்திற்கேற்ப அவன் முடியை வளர்த்தால் அதை தடுக்க முடியாது. ஆனால், முடி வளர்ப்பதின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடுவதைப் பொறுத்தவரையில்; நிச்சயமாக இதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு முரண்பாடு இருப்பதாகவே நாம் கூறுவோம். ஒரு யதார்த்தம் இருக்கின்றது, அதை நாம் விழிப்புடன் நோக்க வேண்டும். அது என்னவென்றால், எவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றல் என்ற அடிப்படையில் தனது முடியை வளர்க்கிறாரோ அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாற்றம் செய்து விட்டார் என்றே நான் முழுத் தெளிவுடன் கூறுகின்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முடி வளர்ப்பதின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடினார்கள் என்பதை நாம் அறியாதவர்களாக இருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் நெருக்கத்தைத் தேடாத ஒன்றின் மூலம் நெருக்கத்தைத் தேடுவது முஸ்லிமுக்கு ஆகுமானதல்ல. மார்க்கத்தில் பித்அத் செய்வதை கடுமையாக எச்சரிப்பது குறித்த ஹதீஸ்களிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வது போன்று இதுவே மார்க்கத்தில் பித்அத்தாகும். ‘யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உண்டாக்குகிறாரோ அது நிராகரிக்கப்படும்.’ எனவே, இச்செயல் மார்க்கத்தில் உண்டாக்கப்பட்ட பித்அத்தாகும். ஏனென்றால், இவ்வாறு செய்பவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் நெருக்கத்தைத் தேடாத ஒன்றைக் கொண்டு அல்லாஹ்விடம் நெருக்கத்தைத் தேடுகின்றான். இது பித்அத்வாதிகளின் சுபாவமாகும். அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் நெருக்கத்தைத் தேடாத அமல்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.”

ஸில்ஸிலதுல் ஹுதா வந்நூர், ஒலிப்பதிவு நாடா இல: 1367

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்