தராவீஹ் தொழுகை நடாத்தப்படும் போது இமாமுக்குப் பின்னால் இஷாத் தொழலாமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி:  இஷாத் தொழாத நிலையில் பள்ளிவாசலுக்கு சமுகம் தந்த ஒருவர் அங்கு ஜமாஅத்தாக நடைபெறும் தராவீஹ் தொழுகையில் இஷாவுடைய நிய்யத்துடன் இணைந்து தொழலாமா?

விடை: அறிஞர்களின் இரு வகையான கருத்துக்களில் சரியான கருத்தின்படி இஷாவுடைய நிய்யத்துடன் அவருக்கு அவர்களுடன் இணைந்து தொழுவதில் குற்றமில்லை. இமாம் ஸலாம் கொடுத்தால் அவர் எழும்பி அவருடைய தொழுகையைப் பூரணப்படுத்த வேண்டும். ஏனென்றால், புஹாரி மற்றும் முஸ்லிமில் பின்வருமாறு ஒரு ஹதீஸ் இடம்பெறுகின்றது. முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஷாத் தொழுதுவிட்டு பின்பு தனது கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு இஷாத் தொழுவிப்பார்கள். அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுக்கவில்லை. எனவே, இது நபிலான தொழுகை தொழுபவருக்குப் பின்னால் பர்ளான தொழுகை தொழக்கூடியவர் தொழலாம் என்பதை அறிவிக்கின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சத்தொழுகையின் சில வகைகளில் ஒரு கூட்டத்தினருக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவிப்பார்கள். பின்பு ஸலாம் கொடுத்துவிட்டு அடுத்த கூட்டத்தினருக்கு தொழுவிப்பார்கள். பின்பு அவர்கள் ஸலாம் கொடுப்பார்கள். அவருடைய முதலாவது தொழுகை பர்ளாகவும் இரண்டாவது தொழுகை நபிலாகவும் இருந்தது. அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் பர்ள் தொழுகையாளிகளாக இருந்திருக்கின்றார்கள்.

-    மஜ்முஉ பதாவா பின் பாஸ்

-    தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்