ஜனாதிபதித் தேர்தலும் முஸ்லிம்களின் திசைமாறும் இலட்சியமும்.

بسم الله الرحمن الرحيم

ஒவ்வொரு முஸ்லிமையும் அவனது வாழ்வின் இலட்சியத்தைவிட்டும் திசை திருப்பிவிடக்கூடிய பல நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம். அத்தகைய ஒரு நிகழ்வுதான் எமது நாட்டில் தற்போது சூடுபிடித்துள்ள ஜனாதிபதித் தேர்தலாகும். இலங்கை வாழ் அனைத்து இன மக்களினதும் கவனத்தையும் வெகுவாகவே ஈர்த்துள்ள இத்தேர்தலானது முஸ்லிம் சமூகத்தையும் ஒரு கனம் உசுப்பேற்றி வைத்துள்ளது. நம்மவர்களின் அன்றாட நடவடிக்கைகளே அதற்கான சான்றாகும். ஆட்சியில் அமரப்போகின்ற ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் பொருத்தே தமது இருப்பு, பாதுகாப்பு, உரிமைகள் என்பவற்றுக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்ற அநேக முஸ்லிம்களின் மேலெண்ணமே இந்த அதீத ஆர்வத்திற்கான பின்புலனாகும்.

ஆனால், இந்த எண்ணம் இறைவிசுவாசத்தின் பலவீனத்திற்கான வெளிப்பாடன்றி வேறில்லை என்பதை ஈமான் என்ற பாடத்தை ஆழ அகளப் புரிந்து கொண்ட ஒரு முஸ்லிம் நன்குணர்ந்து கொள்வார். “அறிந்து கொள்! இந்த சமுதாயம் உமக்கு ஒரு தீங்கிழைக்க ஒன்று திரண்டாலும் அல்லாஹ் உம்மீது எழுதிவிட்ட ஒன்றை அன்றி அவர்களால் தீங்கிழைக்க முடியாது” என்ற எமது தூதரின் வாக்கு இதுபோன்ற காலங்களில் பசு மரத்தாணியாக எமது உள்ளங்களில் பதியப்பட வேண்டும். எப்படிப்பட்ட வல்லவர்கள் ஆட்சிபீடம் ஏறினாலும் அவர்களால் எமக்கு எழுதப்பட்ட வாழ்வாதாரத்தைக் கூட்டிக் குறைத்து விடவோ அல்லது எமது ஆயுளை முன் பின் தள்ளி விடவோ முடியாது என்ற ஈமானியப் பாடத்தை நாம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நிரந்தரமான வாழ்க்கையை நோக்கிய நீண்ட பயணத்தின் இளைப்பாறும் தளமே இவ்வுலக வாழ்க்கை என்ற மகா தத்துவம் எமது சிந்தனையில் புறையோடிப்போன ஒன்றாக சதா காலமும் இருக்க வேண்டும். அத்தகைய இலட்சியப் பயணி அவ்வப்போது மேடையேறுகின்ற இதுபோன்ற அரசியல் நாடகங்களிற்காகவோ அதில் வேடம் தரிக்கின்ற ஏமாளிகளுக்காகவோ தனது வாழ்நாட்களை ஒருபோதும் தாரை வார்த்து விடமாட்டான். இதுபோன்ற அற்பத்தனமான காரியங்களுக்காகத் தனது நேரகாலங்களை வாரியிறைப்பது தான் மறுமையில் ஆசிக்கின்ற நிம்மதியை கெடுத்து சுவனப் பாக்கியத்தையும் சூனியமாக்கிவிடும் என்பதில் எச்சரிக்கையாக இருப்பான். “ஈமான் கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், இன்னும் ஓர் ஆத்மா நாளைக்காக எதனை முற்படுத்தி வைத்துள்ளது என்பதை பார்த்துக் கொள்ளட்டும்” என்ற இறை வசனம் மறுமை வாழ்விற்கு முகம் கொடுப்பதற்கான எம் ஒவ்வொருவரினதும் தார்மீகப் பொறுப்பை ஞாபமூட்டுகின்றது.

ஒருவரை ஆட்சியில் அமர்த்துவதும் அதிலிருந்து தூக்கியெறிவதும் இப்பிரபஞ்சத்திற்கே அதிபதியான அந்த ரப்பின் கைவசம் உள்ள விடயம் என்பது அல்குர்ஆனின் அறைகூவலாகும். இத்தரணியில் அத்துமீறி அராஜகம் புரிந்த மகா கொடுங்கோலர்களையே தான் நாடியபோது தண்டித்து ஏனையோருக்குப் படிப்பினையாக வைத்தான் என்பது வரலாறு சொல்லித் தரும் பாடமாகும். ஆகவே “எவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் எமக்கு நலவாக அமையுமோ அவர்களையே ஆட்சியில் அமர்த்துவாயாக” என்று அவனிடமே பிரார்த்தித்துவிட்டு எமது நிரந்தர வாழ்க்கையின் இலட்சியம் திசை மாறிவிடாது இருப்பதற்கு முயற்சிப்பதே சானக்கியமும் அறிவுடமையுமாகும்.

-    வழங்கியவர்: சில்மி இப்னு ஷம்சிலாப்தீன்