சுத்ரா பற்றித் தெரிந்து கொள்வோம் – 03

بسم الله الرحمن الرحيم

தொழக்கூடியவருக்கும் அவருடைய சுத்ராவுக்கும் இடையில் உள்ள தூரம்

பெரும்பான்மையான அறிஞர்கள் தொழுகையாளிக்கும் அவருடைய சுத்ராவுக்கும் இடையிலுள்ள தூரத்தை மூன்று முழம்களாகக் கூறுகின்றனர். ஏனெனில், நபியவர்கள் கஃபாவிற்குள் பிரவேசித்த சமயம் தனக்கும் அதன் சுவருக்கும் மத்தியில் மூன்று முழங்கள் இடைவெளிவிட்டுத் தொழுதார்கள். மேலும், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களும் இப்படியே செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். (புகாரி)

இப்படிப்பட்ட அளவைத் தான் எவ்வித பிசகுதலுமின்றி தொழுக்கூடிய ஒவ்வொருவரும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல. மாற்றமாக, குறித்த அளவீடு பின்பற்றப்படுவது விரும்பத்தக்கது என்ற அடிப்படையில் தான் இவ்வாறு நாம் கூறியுள்ளோம்.

மேலும், தொழுகையாளிக்கும் சுத்ராவுக்கும் இடையில் ஓர் ஆடு கடக்கக்கூடிய இடமளவு இருக்க வேண்டும் என்று ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் பதிவாகியுள்ளது. ஆயினும், குறித்த அளவு சுஜூதின் போது இருக்க வேண்டிய இடைவெளியையே குறிக்கின்றது என்று மாற்று விளக்கம் கூறப்படுகின்றது.

சுத்ராவைப் பேணுவதின் சட்டம்

அறிஞர்களில் ஒரு கூட்டம் சுத்ராவைப் பேணுவது வாஜிப் என்று கூறுகின்றது. இக்கருத்தை இமாம்களான அல்பானி மற்றும் அல்வாதி ஆகியோர் சரிகண்டிருக்கின்றார்கள்.

இக்கருத்தைக் கூறக்கூடிய உலமாக்கள் பின்வரும் சான்றுகளைக் கொண்டு தம் கூற்றுக்கு வலு சேர்க்கின்றார்கள்.

1.    இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்: "நிச்சயமாக நபியவர்கள் பெருநாள் தினத்தில் வெளிக்கிளம்பினால் ஓர் ஈட்டியைக் கொண்டுவருமாறு கட்டளையிடுவார்கள். அவ்வீட்டியானது அவர்களுக்கு முன்னிலையில் வைக்கப்படும்”. (புகாரி)

2.    நபியவர்கள் கூறினார்கள்: "சுத்ராவை முன்னோக்காமல் தொழ வேண்டாம்! மேலும், எவரையும் உனக்கும் உன் சுத்ராவுக்கும் மத்தியால் கடந்து செல்ல விட வேண்டாம்!” (இப்னு ஹுஸைமா)

3.    நபியவர்கள் கூறினார்கள்: "ஒட்டகத்தின் மீதிருக்கும் இருக்கையின் பிற்பகுதி அளவு உயரம் கொண்ட ஒரு பொருள் தொழக்கூடியவர் முன்னிலையில் சுத்ராவாகக் காணப்படாதவிடத்து, அவரது தொழுகை துண்டிக்கப்பட்டுவிடும்”. (ஸஹீஹுல் ஜாமிஉ) இக்கருத்தைக் கூறக்கூடியவர்கள் இச்செய்தியை வைத்து சுத்ராவானது தொழுகை துண்டிக்கப்படுவதைவிட்டும் பாதுகாக்கக்கூடியதாக இருக்கும் என்றும், "ஒரு வாஜிப் பூர்த்தியாவதற்கு மற்றொரு விடயம் அவசியப்படும் போது அதனைச் செய்வதும் வாஜிப்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சுத்ராவைப் பேணுவது வாஜிப் என்றும் கூறுகின்றார்கள்.

4.    நபியவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் சுத்ராவை நோக்கித் தொழுதால் அவர் அதனை நெருங்கி நிற்கட்டும்! ஷைத்தான் அவருடைய தொழுகையைத் துண்டிக்காது பார்த்துக் கொள்ளட்டும்!” (அபூதாவுத்)

மேலும், நபியவர்கள் ஊரில் இருக்கும் போதும் பிரயாணத்தில் இருக்கும் சுத்ராவைப் பேணியிருக்கின்றார்கள். இப்படியான கரிசனை குறித்த விடயம் வாஜிப் என்பதைப் புலப்படுத்துகின்றது எனலாம்.

இப்படியிருக்க, "நபியவர்கள் சுவர் அல்லாத ஒன்றை நோக்கித் தொழுதார்கள்” என்று பதிவான ஒரு செய்தியை வைத்து சுத்ராவைப் பேணுவது வாஜிபன்று. மாற்றமாக, விரும்பத்தக்கது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

ஆயினும், இச்செய்திக்குப் பின்வருமாறு பதிலளிக்கலாம். நபியவர்கள் சுவரை முன்னோக்கித் தொழவில்லை என்ற செய்தி, அவர்கள் சுத்ராவாகச் சுவரல்லாத ஒன்றை எடுக்கவில்லை என்பதைக் குறிக்காது. மாற்றமாக, பெரும்பான்மையான அறிஞர்கள் இப்னு ஹுஸைமாவில் இடம் பெரும் அறிவிப்பான: 'நபியவர்கள் தனக்கு சுத்ராவாக இருக்கக்கூடிய ஒன்றை நோக்கித் தொழுவர்கள்” என்ற வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு நபியவர்கள் சுவர் அல்லாத ஒன்றை நோக்கித்தான் தொழுதார்கள் என்று தீர்மானிக்க முடியும் என்கிறார்கள். மேலும், இக்கருத்தைக் கூறுபவர்கள் எடுத்துக் கொண்ட செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல் கரீம் இப்னு அபில் மஹாரிக் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் மிகவும் பலவீனமானவராகக் கருதப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பழ்ள் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கக்கூடிய அபூதாவுத் மற்றும் நஸாயி ஆகிய கிரந்தங்களில் பதிவான ஒரு செய்தியையும் இக்கூற்றைக் கூறக்கூடியவர்கள் முன்வைக்கின்றார்கள். அச்செய்தியாவது: "நாங்கள் ஒரு கிராமப்புறத்தில் இருந்தபோது நபியவர்கள் எங்களிடத்தில் வருகை வந்தார்கள். அவர்களுடன் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் காணப்பட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்கு முன்னிலையில் சுத்ராவை ஏற்படுத்தாத நிலையில் அப்பாலைவனப் பிரதேசத்தில் தொழுதார்கள்”...

இச்செய்தி பலவீனமானது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்பாஸ் இப்னு உபைதில்லாஹ் இப்னில் அப்பாஸ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரின் நிலை என்னவென்று அறியப்படாத நிலையில் உள்ளது. மேலும், இவர் தன்னுடைய தந்தையின் சகோதரனைத் தொட்டும் அறிவிக்கின்றார். ஆயினும், இவர் அவரை சந்தித்ததே இல்லை. எனவே, இச்செய்தி "முன்கதிஉ” எனும் பலவீனமான ஹதீஸைச் சார்ந்ததாகும்.

அதேபோன்று, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கும் மற்றொரு செய்தியையும் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்கையில் நானும் பனூ ஹாஷிம் கிளையைச் சேர்ந்த ஒரு சிறுவனும் ஒரு கழுதையில் அவர்களைக் கடந்து சென்றோம். பின்பு நாங்கள் அதனை விட்டும் இறங்கி எங்களுடைய கழுதையைக் கீரைகள் நிறைந்த ஒரு தரையில் மேய்வதற்காக விட்டுவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுகையில் இணைந்து கொண்டோம். அப்போது: 'ஒரு மனிதர் நபியவர்களுக்கு முன்னிலையில் சுத்ராவாக ஒரு தடி இருந்ததா? என வினவினார். அதற்கு: "இல்லை” என்று கூறினார்.

இந்த ஹதீஸைப் பொறுத்தளவில் சுத்ராவைப் போணுவது வாஜிபன்று எனக் கூறக்கூடியவர்களின் பலமான ஆதாரமாகத் திகழ்கின்றது. ஏனெனில், இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமானவர்கள். என்றாலும், இச்செய்தி ஈடேற்றம் பெற்ற ஒன்றல்ல. காரணம், இதன் அறிவிப்பாளர் வரிசையானது: அலி இப்னுல் ஜஃத் என்பவர் ஷுஃபா என்பவரைத் தொட்டும், அவர் அம்ர் இப்னு முர்ரா என்பவரைத் தொட்டும், அவர் யஹ்யா அல்ஜஸ்ஸார் என்பரைத் தொட்டும், அவர் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் அமைந்துள்ளது. அலி இப்னுல் ஜஃத் என்பவர் நம்பகமானவராக இருந்தாலும் அவர் விடயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. இந்த ஹதீஸை முஹம்மத் இப்னு ஜஃபர், அப்பான் இப்னு முஸ்லிம் ஆகியோர் அஹ்மத் எனும் கிரந்தத்தில் ஷுஃபா என்பவரைத் தொட்டும் அறிவித்திருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் ஷுஃபாவை விட மிகவும் பலமானவர்கள். ஆயினும், இவர்கள் இருவரும் தங்கள் அறிவிப்பில்: 'நபியவர்களுக்கு முன்னிலையில் ஒரு தடி இருந்தது” என்ற மேலதிகமான செய்தியை அறிவிக்கவில்லை. மேலும், யஹ்யா அல்ஜஸ்ஸார் என்பவர் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களிடத்தில் அதனை செவிமடுக்கவுமில்லை. மாற்றமாக, அதனை அபுஸ் ஸஹ்பா அல்பக்ரீ என்பவர் மூலமே கேட்டுள்ளார். அவரும் குறித்த நபர் மூலம் அறிவிக்கையில் இந்த மேலதிகமான வாசகத்தைப் பதிவு செய்யவில்லை. எனவே, மேலதிகமான இத்தகவலில் ஏதோ ஒரு குளறுபடி காணப்படுகின்றது.

மேலும், இச்செய்தியில் அவர்கள் இருவரும் நபியவர்கள் தொழுதுகொண்டிருக்கையில் அவர்களுக்கு முன்னால் கழுதையில் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. நபியவர்களுக்கு முன்னிலையில் சுத்ரா இல்லாமல் காணப்பட்டால், நிச்சயமாக நபியவர்களின் தொழுகையை அவர்கள் கடந்து சென்ற செயல் துண்டித்திருக்கும் என்பதையும் கவனத்திற் கொள்க!

எனவே, சுத்ரா வாஜிபானது என்பதே மிகவும் ஏற்றமாக கருத்தாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

-     இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     தொகுப்பு: அபூஹுனைப்