சந்தோசமும் அது உண்டாவதற்குக் காரணங்களாகத் திகழ்கின்றவையும் – 02

بسم الله الرحمن الرحيم

6. நல்லுபகாரம் செய்தல்

படைப்பினங்களுக்கு நல்லுபகாரம் செய்வது எம்மில் சந்தோசம் உண்டாகக் காரணமாக உள்ளது. அல்லாஹ் கூறுகின்றான்: "தர்மத்தைப் பற்றி அல்லது, நன்மையானவற்றைப் பற்றி அல்லது, மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றி ஏவியவரைத்தவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும் பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. மேலும், எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அதைச் செய்தால் நாம் அவர்களுக்கு மகத்தான (நற்)கூலியைத் தருவோம்." (அன்னிஸா: 114)

எனவே, நாங்கள் பெற்றோர்கள், அண்டைவீட்டார்கள், விருந்தினர்கள், ஏழை எளியவர்கள் என்று அனைவருக்கும் நல்லுபகாரம் செய்யும் போது நாங்கள் மனிதர்களுக்கு மத்தியில் விரும்பப்படக்கூடியவர்களாக மாறுவோம். அதன் காரணமாக எமக்கு மத்தியில் சந்தோசம் உண்டாகும்.

7. அல்லாஹ் மீது உரிய முறையில் பொறுப்புச்சாட்டுதல்.

நாம் நமது காரியங்களின் போது சரியான அமைப்பில் அல்லாஹ் மீது பொறுப்புச் சாட்டக்கூடிய மக்களாக இருந்தால் அதன் காரணமாக எமக்கு மத்தியில் சந்தோசம் ஏற்படும். உண்மையில் பொறுப்புச் சாட்டுதலானது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாக உலமாக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் அல்லாஹ் மீது பொறுப்புச் சாட்டும் போது அவன் மீது தளராத நம்பிக்கையோடு பொறுப்புச் சாட்டுவோம் என்றால் நிச்சயமாக அதன் பயனாக பல நலவுகள் எம் வாழ்வில் உண்டாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: "எவர் அல்லாஹ்வின் மீது (தன் காரியத்தை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்." (அத்தலாக்: 3)

8. துஆச் செய்தல்

துஆச் செய்தலின் மூலமும் சந்தோசத்தை வரவழைத்துக் கொள்ளலாம். நாங்கள் எங்கள் துஆக்களை எங்களுடைய மார்க்கத்திற்காகவும் உலக வாழ்க்கைக்காகவும் ஆக்கிக் கொண்டால் நிச்சயமாக அதன் உதவியால் சுபீட்சம் உண்டாகும். மாறாக, நாங்கள் துஆச் செய்யும் போது வெறுமனே உலகத்தை அடிப்படையாக மாத்திரம் வைத்து அமைத்துக் கொண்டால் அதன் பிரதிபளிப்பு உலகில் மட்டுமே கைகூடும். மறுமைக்கு என்று எந்தப் பங்கும் இருக்காது.

அல்லாஹ் கூறுகின்றான்: "ஆகவே, மனிதர்களில் (சிலர்) 'எங்கள் இரட்சகனே! எங்களுக்கு (எல்லாவற்றையும்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக!' என்று கூறுவோரும் இருக்கின்றனர். ஆனால் இ(வ்வாறு கோருகின்ற)வருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை. 'எங்கள் இரட்சகனே! இம்மையில் நல்லதையும் மறுமையில் நல்லதையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! இன்னும் நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக என்று கூறுவோரும் அவர்களில் இருக்கின்றனர்'." (அல்பகரா: 200, 201)

9. நான்கு விடயங்கள் மீது பாக்கியம் பெறுதல்.

நபியவர்கள் கூறினார்கள்: "நான்கு விடயங்கள் சந்தோசத்தில் நின்றும் உள்ளதாகும்.

1.            நல்ல மனைவி

2.            விசாலமான வதிவிடம்

3.            நல்ல அண்டைவீட்டார்

4.            வசதியான வாகனம்"

இச்செய்தியை ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு ஹிப்பான் எனும் கிரந்தத்தில் இதனைக் காணலாம்.

அதிலும் குறிப்பாக நல்ல மனைவியானவள் ஓர் ஆண்மகனின் வாழ்வில் பெரும் பங்காற்றக் கூடியவளாக இருக்கின்றாள். மனைவியானவள் நல்லவளாக இருக்கும் காலமெல்லாம் அவ்வாண்மகன் தனது வாழ்வில் தீனின் சுவையை சுவைத்துக் கொண்டிருப்பான். அதனால்தான் மார்க்கம் நல்ல மனைவியைத் தேர்ந்தெடுக்கின்ற விடயத்தில் கூடிய அழுத்தத்தைக் கொடுக்கின்றது.

நபியவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் ஒரு பெண்மணிக்கு அருள் புரிவானாக! அவள் இரவு வேளையில் தூக்கத்தை விட்டெழுந்து தானும் தொழுது தனது கணவனையும் தொழுகைக்காக எழுப்பிவிடுகின்றாள். அவ்வாறு தனது கணவன் எழும்ப மறுக்கும் சமயத்தில் அவருடைய முகத்தில் நீரைத் தெளிக்கின்றாள்.” இச்செய்தி அபூதாவுத் எனும் கிரந்தத்தில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

நல்ல மனைவிக்கு முன்னுதாரணமாக ஸகாபிப் பெண்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களில் உம்மு ஸுலைம் ரழியல்லாஹு அன்ஹா அவர்களும் ஒருவராவார். நீண்ட நாட்களாகத் தன்னைவிட்டும் பிரிந்திருந்த தனது கணவரைத் திருப்திப்படுத்தும் முகமாக தனது குழந்தையின் மரணச் செய்தியைக் கூட எத்திவைக்காமல் மறைத்து வைத்தவர் தான் அப்பெண்மணி! மேலும், தன்னைத் திருமணம் செய்ய அவ்வேளையில் காபிராக இருந்த அபூதல்ஹா அவர்கள் நாடிய போது, இஸ்லாத்தைத் தழுவினால் அதனையே மஹராக்கிவிடுவேன் என்று கூறியவர் தான் அந்தப்பெண்மணி!

இப்படி மேற்கூறப்பட்ட ஹதீஸில் இடம்பெறும் ஒவ்வொரு அம்சமும் மனித வாழ்வில் சந்தோசத்தை ஏற்படுத்தக் கூடியனவாக உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! நாம் முன்பு குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் நல்ல முறையில் கடைபிடித்து எதார்த்தமான சந்தோசத்தை வரவழைத்துக் கொள்ள முயற்சி எடுப்போமாக!

முற்றும்.