கோபத்தை அடக்கி நற்பாக்கியங்களைப் பெற்றிடுவோம்! – 04

بسم الله الرحمن الرحيم

கோபத்தை அடக்குவதின் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நபியவர்கள் கூறினார்கள்: "யார் தனக்கேற்பட்ட கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு சக்திபெற்றிருந்தும் அதனை அடக்கிக் கொள்கிறாரோ, அல்லாஹ் அவருடைய உள்ளத்தை மறுமைநாளில் திருப்பொருத்தத்தைக் கொண்டு நிரப்பிவிடுவான்". (ஸஹீஹுல் ஜாமிஇ)

கோபத்த அடக்குபவருக்கு விரும்பிய ஹூருல் ஈன் பெண்ணை அடைந்து கொள்ள முடியும்.

நபியவர்கள் கூறினார்கள்: "யாருக்கு கோபத்தைத் தீர்த்துக் கொள்ளச் சக்தியிருந்தும் அவ்வாறு செய்யாது அதனை அடக்கிக் கொள்கிறாரோ, அவரை அல்லாஹுத்தஆலா மறுமைநாளில் படைப்புகள் அனைத்துக்கும் முன்னிலையில் வரவழைத்து அவர் விரும்புகின்ற ஹூருல் ஈன் பெண்ணைத் தெரிவு செய்து கொள்ளுமாறு கூறப்படும்". (அபூதாவுத்)

கோபத்தை அடக்குபவனே உண்மையான வீரன்!

நபிவர்கள் கூறினார்கள்: "கோபம் ஏற்படும் போது தனது கோபத்தை எதிரியைத் தாக்கி வீழ்த்துவதின் மூலம் தீர்த்துக் கொள்பவனல்ல உண்மையான வீரன், மாறாக, உண்மையான வீரனாகிறவன், கோபம் ஏற்படும் போது தன்னை அடக்கிக் கொள்பவனாவான்". (அஹ்மத்)

போபத்தை அடக்குவது இறையச்சம் உள்ளவர்களின் அடையாளங்களில் ஒன்றாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள். கோபத்தையும் அடக்கிக்கொள்ளக்கூடியவர்கள். மனிதர்களின் குற்றங்களையும் மன்னித்து விடக்கூடியவர்கள். அல்லாஹ்வோ இத்தகைய நன்மை செய்வோரை நேசிக்கின்றான்". (ஆலு இம்ரான்: 134)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: "இன்னும் அவர்களுக்குக் கோபம் ஏற்பட்டால் பழி தீர்க்காது மன்னித்துவிடுவார்கள்". (அஷ்ஷூரா: 37)

கோபம் ஏற்படும் போது அதனை அடக்கிக் கொள்ளுமாறு வேண்டப்பட்டால் அவ்வேண்டுகோளுக்கு இணங்க வேண்டும்.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நுழைவதற்காக அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அம்மனிதர்: ஹத்தாபுடைய மகனே! அல்லாஹ் மீது சத்தியமாக எங்களுக்கு நீங்கள் அதிகமாகக் கொடுப்பதில்லை, நீதத்தைக் கொண்டு எங்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவதுமில்லை எனக் கூறினார்கள். இதனைச் செவியுற்ற உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்நபரைத் தாக்குகின்ற அளவுக்குக் கோபப்பட்டார்கள். அப்பொழுது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மஜ்லிஸில் இருந்து ஹுர் இப்னு கைஸ் என்பவர்: விசுவாசிகளின் தலைவரே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய நபியை நோக்கி: (நபியே!) நீர் மன்னிப்பை எடுத்துக் கொள்வீராக! நன்மையை ஏவியும் வருவீராக! அறிவீனர்களைப் புறக்கணித்தும் விடுவீராக! (அல் அஃராப்: 199) என்ற வசனத்தை ஓதிக் காண்பித்து, நிச்சயமாக இந்நபர் அறிவீனர்களில் ஒருவராக உள்ளார் எனக் கூறினார். அல்லாஹ் மீது சத்தியமாக, அவ்வசனத்தை ஓதிக் காண்பித்த போது உமர் அதனைத் தாண்டிச் செல்ல முற்படவில்லை".

இன்ஷா அல்லாஹ் தொடரும்.