காபிர்களின் பண்டிகைகளின் போது… – 02

بسم الله الرحمن الرحيم

மேலும், காபிர்களின் பெருநாட்களுடன் தொடர்புடைய பொருட்களை முஸ்லிம்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: "காபிர்கள் தங்களது பெருநாட்களைக் கொண்டாடுவதற்கு உதவி புரியக்கூடிய அமைப்பில் காணப்படக்கூடிய உணவு, ஆடை மற்றும் வாசனை போன்றவற்றை விற்பனை செய்வது அவர்களது ஹராமாக்கப்பட்ட அப்பெருநாளுக்கு உதவி புரிவதாக அமைகின்றது" என்கிறார்கள். (அல்பதாவா அல்குப்றா, மஜ்மூஉல் பதாவா)

இப்படியான பல ஒழுக்கவிழுமியங்களைப் பட்டியல் படுத்திய ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இது விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு கிடையாது என்றும் கூறியுள்ளார்கள். மேலும், சில உலமாக்கள் இத்தகைய காரியங்கள் காபிர்களின் வெளிப்படையான அடையாளங்களை கௌரவிப்பதாக அமைவதால் அவற்றில் ஈடுபாடு காட்டுகின்றவர்கள் காபிர்களாகிவிடுவார்கள் என்று கூறியுள்ளதாக இமாமவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: "யார் அரபு அல்லாத மொழியைப் பேசக்கூடியவர்களின் பிரதேசங்களை நாடிச் சென்று அவர்களுடைய திருவிழாக்களில் பங்கேற்று மரணிக்கும் வரை அவர்களை ஒத்து நடக்கிறாரோ அவர் அவ்வாறே அவர்களுடன் மறுமை நாளில் எழுப்பப்படுவார்."

இன்று முழுஅளவில் முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடுகளில் கூட அவர்கள் காபிர்களுக்கு இதுவிடத்தில் ஒத்துழைப்பாகச் செயற்படுவதைப் பார்க்கிறோம். அவர்கள் தம்முடைய மார்க்க விடயங்களை முழுமையாக நிலைநாட்டுவதற்குப் பாக்கியம் பெற்ற விதத்தில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தும் இறை நிராகரிப்பிற்கு அவர்கள் துணை நிற்பது மிக அபாயகரமானது என்பதை யாவரும் மனதில் கொள்ள வேண்டும்.

எம்முன்னோர்களில் உள்ள உமர் ரழியல்லாஹு அன்ஹு உள்ளிட்ட பல ஸஹாபாக்கள் மற்றும் இமாம்கள் தங்களது காலங்களில் தமது பிரதேசங்களில் வாழக்கூடிய காபிர்களை விழித்து அவர்கள் தங்களது பெருநாட்களை முஸ்லிம்களின் பூமியில் வெளிப்படுத்தாமல் இருக்குமாறும் தங்களது பெருநாட்களை மறைமுகமாக தமது வாழ்விடங்களில் கொண்டாடுமாறும் பணித்துள்ளார்கள்.

மேலும், உமர் ரழியல்லாஹு அவர்கள் கூறினார்கள்: "இணைவைப்பாளர்கள் அவர்களது பெருநாளின் போது தங்களது ஆலயங்களில் ஒன்று கூடியிருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு மத்தியில் நுழையாதீர்கள்! நிச்சயமாக அவ்வேளையில் அல்லாஹ்வுடைய கோபம் அவர்கள் மீது இறங்கிக் கொண்டிருக்கிறது."

எம்முன்னோர்களில் சிலர் "மேலும் அத்தகையவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணான காரியம் நடக்கும் இடங்களைக் கடந்து செல்லும் போது கண்ணியமாக ஒதுங்கிச் சொன்றுவிடுவார்கள்" என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது அத்தகைய இடங்கள் காபிர்களின் பெருநாட்கள் கொண்டாடப்படும் இடங்களாகும் என்று கூறியுள்ளனர்.

மேலும், பெருநாள் என்பது மதம் சார்ந்த விடயமாகும். மாறாக, அது உலகம் சார்ந்த வழக்காறு அன்று. அதனால் தான் நபியவர்கள்: "ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெருநாள் உண்டு, இது எங்களுடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள். எனவே, காபிர்களுடைய பெருநாட்களில் பங்கேற்பது அவர்களுடைய மதம் சார்ந்த விடயங்களில் பங்கேற்பதாகக் கருதப்படும். ஒரு முஸ்லிமிற்கு எச்சந்தர்ப்பத்திலும் காபிர்களின் மதத்தைச் சார்ந்து நடந்து கொள்ள அனுமதியில்லை என்பதை மனதில் கொள்க!

காபிர்களின் பெருநாள் குறித்து அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க முடியுமா?

இவ்வினா குறித்து சிறந்ததொரு தெளிவை இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "அஹ்காமு அஹ்லித் திம்மா" என்ற தனது நூலில் வழங்கியுள்ளார்கள். அவர்களது கூற்றாவது: "காபிர்களுக்கென்று உரிய வெளிப்படையான அடையாளங்களைக் கொண்டு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் ஹராமானதாகும். அவ்வாறு வாழ்த்துத் தெரிவிப்பவர் இறை நிராகபிப்பிலிருந்து ஈடேற்றம் பெற்றவராக இருந்தாலும் இவ்வாறு செய்வது ஹராமாக்கப்பட்டவைகளைச் சாரும்! மேலும், இவ்வாறு வாழ்த்துத் தெரிவிப்பது அவர்கள் சிலுவைக்கு சிரம் தாழ்த்துவது குறித்து வாழ்த்துத் தெரிவிப்பதற்கு நிகரான காரியமாகும். மாறாக, அல்லாஹ்விடத்தில் மகத்தான பாவத்தை தேடித்தரக்கூடியதும், சாராயம் குடிப்பவர், கொலை செய்பவர், விபச்சாரம் போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவர் குறித்து வாழ்த்துத் தெரிவிப்பதைவிட கோபத்தால் மிகக் கடுமையான காரியமாக இக்காரியம் கருதப்படும்."

மேலும், காபிர்களின் பெருநாட்களின் போது அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தலானது, அவர்கள் ஏற்றிருக்கும் இறைநிராகரிப்பின் வெளிப்படையான அடையாளங்களை அங்கீகரிப்பதாகவும் பொருந்திக் கொள்வதாகவும் அமைகிறது. அவ்வாறு வாழ்த்துத் தெரிவிப்பவர் அந்த இறைநிராகரிப்பைத் தனக்குப் பொருந்திக் கொள்ளாதவராக இருந்தாலும் சரியே! என்று இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, இது விடயத்தில் காணப்படும் பராமுகமான நிலையை எம்மைவிட்டும் அகற்றி சீரான முஸ்லிம்களாக வாழத் தலைப்படுவோமாக!

والحمد لله رب العالمين