காபிர்களின் பண்டிகைகளின் போது… – 01

بسم الله الرحمن الرحيم

கண்ணியமிக்க வாசகர் நெஞ்சங்களே! நாம் அனைவரும் வாழத்தலைப்பட்ட இச்சூழலானது, எம்முடைய அகீதாவைப் பறிகொடுக்கக்கூடிய அமைப்பில் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

இன்று பெருவாரியான முஸ்லிம்கள் சம்பாத்தியம், நட்பு, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் நடிப்பு என்ற ரீதியில் காபிர்களுடைய மத நடவடிக்கைகளில் தம் ஈடுபாட்டை வெளிக்காட்டி வருகின்றனர்.

உண்மையில் இவர்கள் இருக்கும் நிலை மிக அபாயகரமானது. எக்காரணம் கொண்டும் அல்லாஹ்வின் எதிரிகளுடன் எமக்கு நட்புக் கொள்ள முடியாது என்ற சித்தாந்தத்தை நல்ல முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் எதிரிகள் விடயத்தில் அவன் என்ன சொல்கின்றான் என்பதைப் படித்துப் பாருங்கள்!

"விசுவாசங்கொண்டோரே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களை(த் தனக்கு)ப் பாதுகாவலராக்கிக் கொண்டால், அப்போது நிச்சயமாக அவரும் அவர்களில் உள்ளவர் தாம்." (அல்மாயிதா: 51)

மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "விசுவாசங் கொண்டோரே! என்னுடைய விரோதியையும் உங்களுடைய விரோதியையும் அவர்கள் பால் (உங்கள்) நேசத்தைச் சேர்த்து வைக்கின்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம். (ஏனென்றால்,) சத்தியத்திலிருந்து உங்களிடம் வந்த (வேதத்)தை திட்டமாக அவர்கள் நிராகரித்தும் விட்டனர்." (அல்மும்தஹினா: 01)

இப்படியான பல எச்சரிக்கைகள் குர்ஆன் சுன்னா நிரம்பக் காணப்படினும் நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்த பிரகாரம் யூத கிறிஸ்தவர்களை நேசிக்கக்கூடிய ஒரு பெருவாரியான கூட்டம் எம்மத்தியில் இருந்து வருகின்றது.

உண்மையில், இத்தகைய காபிர்கள் அல்லாஹ்வுடையதும் அவனது தூதருடையதும் விரோதிகள் எனக்கருதி அவர்களைவிட்டும் விலகி நடப்பதும், எக்காரணம் கொண்டும் அவர்களுக்காக எமது மார்க்கத்தின் அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பதும் எமது கடமையாகும். அவர்களுடைய எந்த ஒரு திருநாளாக இருந்தாலும் அந்நாளில் எமது செயற்பாடுகளை அன்றாடம் நாம் மேற்கொள்வது போன்று சாதாரணமாக மேற்கொள்வது எமது கடமையாகும்.

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது பத்வாத் தொகுப்பில் (3/44) பின்வருமாறு கூறுகின்றார்கள்: "காபிர்களை ஒத்துநடத்தல் முஸ்லிம்கள் மீது ஹராமாகும். (அவ்வாறு ஒத்துநடத்தலின் முகமாக,) அவர்களுடைய சந்தர்ப்ப திருநாட்களின் போது விழாக்களை நடாத்துவதும், அவை குறித்து அன்பளிப்புக்கள், இனிப்புப் பண்டங்கள் போன்றவற்றைப் பரிமாறுவதும், அவற்றுக்காக குறித்த தினங்களில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதுமான அனைத்துக் காரியங்களையும் தவிர்ந்தாக வேண்டும். ஏனெனில், நபியவர்கள் கூறுகிறார்கள்: யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கிறாரோ அவர் அதனைச் சார்ந்தவராவார்."

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ் தொடர்பாக ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: "(இந்த ஹதீஸின் படி) மனிதர்களின் வழக்காறுகள் விடயத்திலேயே காபிர்களை ஒத்துநடக்க முடியாதென்றால் அதனைவிட மிக முக்கியத்துவம் வாய்ந்த மார்க்க விடயத்தில் அவர்களை எப்படி ஒத்துநடக்க முடியும்?!" என வினவுகின்றார்கள்.

ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது "இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம் லி முஹாலபதி அஸ்ஹாபில் ஜஹீம்" என்ற நூலில் கூறும் போது: "(காபிர்களின்) சில பண்டிகைகளின் போது அவர்களை ஒத்துநடப்பது அவர்களுடைய தவறான கொள்கை கோட்பாடுகள் விடயத்தில் அவர்களின் உள்ளங்களில் சந்தோசத்தை உண்டாக்கிவிடும். சிலவேளை (இப்படியான) சந்தர்ப்பங்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்ளவும் (முஸ்லிம்களில்) பலவீனமானவர்களை இழிவுக்குள்ளாக்கவும் வழிவகுக்கும். எனவே, அத்தகைய காரியங்களில் ஏதேனும் ஒன்றை யார் செய்தாலும் அவர் பாவியாகக் கருதப்படுவார். அவ்வாறு செய்தவர் அதனை காபிர்களிடத்தில் நடிப்பதற்காக அல்லது, அன்பை வெளிப்படுத்துவதற்காக அல்லது, வெட்கத்திற்காக அல்லது, இன்னபிற காரணங்களுக்காக செய்தாலும் சரியே! ஏனெனில், இது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விட்டுக் கொடுப்பை மேற்கொள்வதாகும். மேலும், இந்நடவடிக்கைகள் காபிர்களின் உள்ளங்கள் பலம்பெறுவதற்கும், அவர்கள் தங்கள் மதத்தைக் கொண்டு பெருமை பாராட்டுவதற்கும் வழிகோலும்" என்கிறார்கள்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.