காபிர்களின் ஜனாஸாக் கிரியைகளில் முஸ்லிம்களுக்குப் பங்கேற்க முடியுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: காபிர்களின் ஜனாஸாக் கிரியைகளில் பங்கேற்பதன் சட்டம் யாது? இப்படிப் பங்கேற்பதானது சமூகத்தில் பின்பற்றப்பட்டு வருகின்ற ஓர் அரசியல் சார் அம்சமாகவும் அனைவரும் ஏகோபித்த அடிப்படையில் ஏற்றுக் கொண்ட ஒன்றாகவும் காணப்படுகின்றதே! (இதன் நிலைப்பாடு யாது?)

பதில்: காபிர்களில் ஒருவர் மரணித்து அவரின் ஜனாஸாக் கிரியைகளை நிறைவேற்ற அவர்களில் நின்றும் உள்ளவர்கள் காணப்படுமிடத்து முஸ்லிம்களுக்கு அவரின் ஜனாஸாக் கிரியைகளை மேற்கொள்ள அனுமதியில்லை. மேலும், காபிர்களுடன் ஒன்றரக் கலந்து அவர்களின் ஜனாஸாக் கிரியைகளில் உதவி புரிவதற்கோ அல்லது, அரசியல் வழக்காறு என்ற அடிப்படையில் அவர்களது ஜனாஸாக்கள் குறித்து ஆறுதல் வழங்க விஜயம் செய்வதைப் போன்று தம்மைக் காட்டிக் கொள்ளவோ முடியாது. ஏனெனில், நிச்சயமாக இப்படியான நடவடிக்கைகள் நபியவர்கள் மற்றும் நேர்வழி நடந்த கலீபாக்கள் ஆகியோரைத் தொட்டும் அறிமுகமற்றவைகளாகக் காணப்படுகின்றன. மாற்றமாக, அல்லாஹுத்தஆலா தன்னுடைய தூதரை அப்துல்லாஹ் இப்னு ஸலூலுடைய கப்ரிடத்தில் நிற்பதைத் தடை செய்தான். அவனிடத்தில் காணப்பட்ட இறைநிராகரிப்பே அதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்: "அன்றியும், அவர்களில் இறந்துபோன எந்த ஒருவரின் மீதும் ஒருபோதும் நீர் தொழவும் வைக்காதீர் அவருடைய கப்ரின் மீதும் (மன்னிப்புக்கோர) நிற்கவும் வேண்டாம். (ஏனென்றால்), நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள். இன்னும், அவர்கள் பாவிகளாகவே இறந்துமிருக்கின்றனர்”. (அத்தவ்பா: 84)

அவ்வாறின்றி, காபிர்களில் இருந்து எவரும் குறித்த நபரை அடக்கம் செய்யக் காணப்படாதவிடத்து, நபியவர்கள் பத்ரில் கொலை செய்யப்பட்டோரை அடக்கம் செய்ததைப் போன்றும் தன்னுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் மரணித்தபோது அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து: “நீ சென்று அவரைப் புதைத்துவிடு!” என்று கூறியதை அடிப்படையாகக் கொண்டும் முஸ்லிம்கள் அவரை அடக்கம் செய்ய முடியும்.

தீர்ப்பு: அல்லஜ்னதுத் தாயிமா (9/10)

தமிழில்: அபூஹுனைப்