எலியை இப்படிக் கொல்லாதீர்கள்!

 

بسم الله الرحمن الرحيم

முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அதை அழகிய முறையில் கொல்லுங்கள். உடனடியாக அதனுடைய உயிர் போகின்றவாறு கொல்லுங்கள். அப்பிராணிக்கு நீங்கள் நோவினை கொடுக்க வேண்டாம்.

எலிக்கு மனிதர்கள் செய்யக்கூடிய நோவினைகளில் ஒன்றுதான் சிலர் எலிக்கு ஒட்டக்கூடிய ஒரு வகையான பசையை வைப்பார்கள். அதில் எலி ஒட்டிக்கொள்கிறது.

பின்பு அதனை அப்படியே வைப்பார்கள். அந்த எலி பசியாலும் தாகத்தாலும் இறந்து விடுகிறது.

இது கூடாத காரியமாகும். ஏனெனில், இந்தப் பசையை நீங்கள் வைத்தால் அதைத் தொடர்ந்து நீங்கள் கவனித்த வண்ணம் இருக்க வேண்டும். அதிலே எலி ஒட்டியதுடன் உடனடியாக அதைக் கொல்ல வேண்டும்.

ஆனால், இந்தப் பசையை நீங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களாக வைத்துவிட்டு அதிலே எலி அகப்பட்டு பசியாலும் தாகத்தாலும் அது இறந்து விடுமாயின் அதன் காரணமாக நீங்கள் நரகத்தில் நுழைவீர்கள் என்ற ஒரு பயமும் ஏற்படுகிறது. ஏனெனில், நபியவர்கள் "ஒரு பூனை விடயத்தில் ஒரு பெண் நரகம் நுழைந்தாள். அவள் அந்தப் பூனையை அது இறக்கும் வரை கட்டி வைத்தாள். அதற்கு அவள் உண்ணக் கொடுக்கவுமில்லை. பூமியில் உள்ள பூச்சி புழுக்களை உண்பதற்கு அதனை அவிழ்த்து விடவுமில்லை" என்று கூறினார்கள்.

ஷர்ஹு ரியாளிஸ்ஸாலிஹீன் (4/596)