எம் உள்ளங்கள் எவற்றை உள்வாங்க வேண்டும்?

بسم الله الرحمن الرحيم

நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் செய்தியை இமாம்களான புகாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: "அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடம்பில் ஒரு சதைப்பிண்டம் உள்ளது. அது சீர்பெற்றுவிட்டால் உடம்பு பூராகவும் சீர்பெற்றுவிடும்! மேலும், அது சீர்கெட்டுவிட்டால் உடம்பு பூராகவும் சீர்கெட்டுவிடும்! அறிந்து கொள்ளுங்கள்! அதுவே உள்ளமாகும்".

இச்செய்தியல் உள்ளங்கள் கண்காணிக்கப்படுவதின் அவசியம் உணர்த்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளங்களை சீர்செய்வதின் அவசியமும் வழியறுத்தப்பட்டுள்ளது.

எனவே, உள்ளமானது அதிகம் கவனிக்கப்பட வேண்டிய தேவையில் உள்ளது. இவ்வுள்ளத்தை உடம்புடன் ஒப்பிடுகையில் பெரும் படைகளுக்குச் சொந்தக்காரனாக இருக்கும் ஒரு மன்னனைக் குறிப்பிடலாம். அம்மன்னன் சிறந்தவனாக இருந்தால் நிச்சயமாக அவன் தனது படைகளுக்கு நல்லதைக் கொண்டே கட்டளையிடுவான். மேலும் அம்மன்னன் கெட்டவனாக இருந்தால் அவன் தனது படைகளுக்கு கெட்டவற்றைக் கொண்டே கட்டளையிடுவான். இவ்வாறு தன் உள்ளமும் உள்ளது.

உள்ளத்திற்கு பிரழ்தல் என்ற கருத்தைக் கொடுக்கின்ற கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. காரணம், உள்ளமே எல்லாவற்றினதும் அடைப்படையாகவும் ஒன்றிலிருந்து மற்றொன்றிக்கு விரைவாகத் தாவக்கூடியதாக இருப்பதினாலாகும். இதனால் தான் நபியவர்கள் தனது துஆக்களின் போது: "உள்ளங்களைப் பிரழச் செய்பவனே! எனது உள்ளத்தை உன் மார்க்கத்தின் மீது உறுதியாக வைப்பாயாக!" எனப் பிரார்த்திப்பார்கள். (ஸஹீஹுல் ஜாமிஉ)

எம்முடைய உள்ளங்களாவன பின்வரும் பண்புகளை அணிகலன்களாகக் கொண்டிருக்க வேண்டும்.

1. ஈமான் (இறை நம்பிக்கை)

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசங் கொண்ட சமுகத்தினரை அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீ காணமாட்டீர்! அவர்கள் தங்களின் பெற்றோர்களாயினும் அல்லது தங்களின் ஆண்மக்களாயினும் அல்லது தங்களின் சகோதரர்களாயினும் அல்லது தங்கள் குடும்பத்தவராயினும் சரியே! (காரணம்,) அத்தகையோர் அவர்களின் இதயங்களில் ஈமானை (விசுவாசத்தை அல்லாஹ்வாகிய) அவன் எழுதிவிட்டான்." (அல்முஜாதிலா: 22)

2. அமைதி

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(இத்தகுதிக்குரியோர்) எத்தகையோரென்றால், அவர்கள் (மெய்யாகவே) விசுவாசங் கொண்டார்கள். இன்னும், அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீர்களாக!" (அர்ரஃது: 28)

3. பயத்தால் நடுநடுங்குதல்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால் அல்லாஹ் (அவன் பெயர் அவர்கள் முன் கூறப்பட்டால் அவர்களுடைய இதங்கள் பயந்து நடுங்கிவிடும் மேலும் (இவ்வேதத்தை இறக்கிவைத்த) அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும்)". (அல்அன்பால்: 2)

4. அன்பை அடிப்படையாகக் கொண்ட சகோதரத்துவப் பிணைப்பு

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், (விசுவாசிகளாகிய) அவர்களுடைய இதயங்களுக்கிடையில் (சிதறிக்கிடந்த அவர்களை இஸ்லாத்தின் மூலம்) அன்பையூட்டினான். பூமியிலுள்ள யாவையும் நீர் செலவு செய்த போதிலும் அவர்களுடைய இதயங்களில் அன்பையூட்ட உம்மால் முடிந்திருக்காது." (அல் அன்ஃபால்: 63)

5. உள்ளத்துடனான உறுதிமிக்க தொடர்பு

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், (அக்காலத்திய அரசன் முன்னிலையில்) அவர்கள் எழுந்து நின்று வானங்களுக்கும் பூமிக்கும் இரட்சகன்தான் எங்கள் இரட்சகன், அவனையன்றி வணக்கத்திற்குரிய (வேறு) நாயனை நாங்கள் அழைக்கவே மாட்டோம் (அவ்வாறு அழைத்தால்) அப்போது திட்டமாக நாம் வரம்பு மீறிய வார்த்தையைக் கூறிவிட்டோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறிய போது, அவர்களுடைய உள்ளங்களை (நேரான வழியில்) நாம் உறுதிப்படுத்திவிட்டோம்." (அல் கஹ்ஃப்: 14)

6. தூய்மை

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "எவர் (ஆத்மாவாகிய) அதை பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர் திட்டமாக வெற்றியடைந்துவிட்டார்." (அஷ்ஷம்ஸ்: 9)

7. பணிவு

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், அறிவுகொடுக்கப்பட்டிருந்தார்களே அத்தகையவர்கள் நிச்சயமாக இ(வ்வேதமான)து உம் இரட்சகனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை அவர்கள் விசுவாசிப்பதற்காகவும் இன்னும் (இதனால்) அவர்களின் இதயங்கள் அவனுக்குப் பணிவதற்காகவும் (அவ்வாறு செய்தான்.)" (அல்ஹஜ்: 54)

8. அமைதி

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அவன் எத்தகையவனென்றால், விசுவாசங் கொண்டவர்களுடைய இதயங்களில் அவர்களுடைய விசுவாசத்துடன் (பின்னும்) விசுவாசத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காக அமைதியை அவன் இறக்கிவைத்தான்". (அல் ஃபத்ஹ்: 4)

9. இறையச்சம்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அதுவே (அவனுடைய கதியாகும்), இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அப்போது நிச்சயமாக அது இதயங்களிலுள்ள பயபக்தியில் (ஏற்பட்டது) ஆகும்". (அல் ஹஜ்: 32)

10. மார்க்க ரீதியான மற்றும் அமைப்பு ரீதியான அத்தாட்சிகளை விளங்கிக் கொள்ளல்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "திட்டமாக ஜின்களிலும் மனிதர்களிலும் அநேகரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். (அவர்கள் எத்தகையோரென்றால்), அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு (நல்லவற்றை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்". (அல் அஃராப்: 179)

11. இணைவைப்பு, மோசமான கொள்கைகள், முகஸ்துதி, நயவஞ்சகம், பொறாமை, பெருமை போன்றவற்றில் இருந்து ஈடேற்றம் பெற்றிருத்தல்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "செல்வமும் குமாரர்களும் (யாதொரு) பயனளிக்காத (அந்த) நாளில்... (ஆயினும், இணைவைப்பதிலிருந்து நீக்கம் பெற்ற) பரிசுத்தமான இதயத்துடன் (தன் இரட்சகனாகிய) அல்லாஹ்விடம் யார் வந்தாரோ அவர் தவிர (மற்றவருக்குப் பயனளிக்காத நாள்)" (அஷ்ஷுஅரா: 88, 89)

12. மீளுதல்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "எவர்கள் மறைவில் அர்ரஹ்மானுக்கு பயந்து நடந்து, (அவன் பால்) மீளக்கூடிய (பரிசுத்த) மனத்துடன் வருகின்றார்களோ (அவர்களுக்குச் சுவனம் நெருக்கமாக்கப்பட்டு அவர்களிடம்), சந்ததியுடன் நீங்கள் இதில் நுழையுங்கள்! இது நிரந்தர நாளாகும் (என்றும் அவர்களுக்கு கூறப்படும்)". (காஃப்: 33, 34)

13. சுத்தம்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வீராக". (அல் முத்தஸ்ஸிர்: 4)

இங்கு ஆடை என்று சொல்லப்படுவதின் மூலம் உணர்வு ரீதியான ஆடையும் கருத்து ரீதியான ஆடையும் உள்வாங்கப்படுகின்றன. இவற்றில் கருத்து ரீதியான ஆடையானது உள்ளத்தைக் குறிக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது!

14. கிருபை, இரக்கம்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "இவரைப் பின்பற்றி இருந்தவர்களுடைய இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் நாம் ஆக்கினோம்". (அல் ஹதீத்: 27)

15. மென்மை

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "பின்னர் அவர்களுடைய தோல்களும் இதயங்களும் அல்லாஹ்வை நினைவுகூர்வதின் பால் இளகுகின்றன". (அல்ஜுமர்: 23)

16. உயிரோட்டம்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "விசுவாசங் கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும், உங்களை வாழவைப்பதன் பால் (அல்லாஹ்வின் தூதராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள்!" (அல் அன்ஃபால்: 24)

17. வெண்மை

நபியவர்கள் கூறினார்கள்: "ஒரு விரிப்பில் காணப்படும் நார்கள் எப்படி ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து காணப்படுகின்றனவோ, அதேபோன்று குழப்பங்களும் உள்ளங்களைக் குறுக்கிடும். எனவே, எந்த உள்ளம் குழப்பத்திற்கு உள்ளாகின்றதோ அவ்வுள்ளத்தில் கருப்பு நிறமான ஒரு புள்ளி இடப்படும். மேலும், எந்த உள்ளம் அதனை நிராகரிக்கின்றதோ அவ்வுள்ளத்தில் வெள்ளை நிறமான ஒரு புள்ளி இடப்படும். இவ்வாறு இடப்படுவதின் மூலம் இரு உள்ளங்கள் பெறப்படும். ஓர் உள்ளம் வெள்ளைப் புள்ளிகள் இடப்படுவதின் மூலம் அஸ்ஸபா என்ற கல்லைப் போன்று வெண்மையாகக் காட்சியளிக்கும். அதன்பிற்பாடு, வானங்கள் மற்றும் பூமி இருக்கும் காலமெல்லாம் அதற்கு எந்தவொரு குழப்பத்தாலும் தீங்கிழைக்க முடியாது. மற்ற உள்ளம் பிரட்டப்பட்ட கோப்பையைப் போன்று சாம்பலால் கடும் கருப்பு நிறத்தை உடையதாக காணப்படும். அந்த உள்ளமானது மனஇச்சையில் இருந்து தன்வசப்படுத்தியதைத் தவிர எந்த ஒரு நல்ல விடயத்தையும் அறியாததாகவும் எந்த ஒரு தீயவிடயத்தையும் தடுக்காததாகவும் இருக்கும்." (முஸ்லிம்)

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! இத்தொகுப்பின் மூலம் எம்முடைய உள்ளம் எப்படியான விடயங்களை உள்வாங்க வேண்டும் என்பது தொடர்பான சில தகவல்களை பெற்றுக் கொண்டிருப்பீர்கள். அவற்றை நாமும் எம் உள்ளங்களுக்கு அணிகலன்களாக்க முயற்சி செய்வோமாக!

-    அபூ ஹுனைப் மதனி