உழ்ஹிய்யாவும் அதனை நிறைவேற்றுபவர் கவனிக்க வேண்டிய விடயங்களும் – 01

بسم الله الرحمن الرحيم

நாம் அனைவரும் அல்லாஹுத்தஆலாவினால் கண்ணியப்படுத்தப்பட்ட துல்ஹஜ் மாதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இம்மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களைப் பொறுத்தமட்டில் சிறப்பிக்கப்பட்ட நாட்களாகும். இதன் ஒன்பதாவது நாள் அரபா நாளாகவும் பத்தாவது நாள் ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகவும் கணிக்கப்படுகின்றன.

இப்பெருநாள் தினத்திலே நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு காரியமே உழ்ஹிய்யா என்றழைக்கப்படும் வணக்கமாகும். இந்த உழ்ஹிய்யா குறித்த பல சட்டதிட்டங்களை அதிகமான முஸ்லிம்கள் அறியாதிருப்பதின் காரணமாக அவைகளை இங்கு கேள்வி பதிலாகத் தொகுத்துக் கூறியிருக்கின்றோம். அல்லாஹ் இதனைக் கொண்டு அனைவருக்கும் பயனளிக்கச் செய்வானாக!

கேள்வி: உழ்ஹிய்யா என்றால் என்ன?

பதில்: உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலும் அய்யாமுத் தஷ்ரீக் என அழைக்கப்படக்கூடிய அதை அடுத்து வரக்கூடிய மூன்று தினங்களிலும்  ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலிருந்து அறுத்துப் பலியிடுவதற்குப் பயன்படுத்தும் வார்த்தையாகும்.

கேள்வி: உழ்ஹிய்யாக் கொடுப்பதின் சட்டம் என்ன?

பதில்: உழ்ஹிய்யாவின் சட்டம் குறித்து அறிஞர்கள் இரு வகையான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

முதலாவது கருத்து: உழ்ஹிய்யாக் கொடுப்பது வசதிபடைத்த அனைவர் மீதும் கடமையாகும். இக்கருத்தை ரபீஆ, லைஸ், அபூஹனீபா, அல்அவ்ஸாஈ, அஸ்ஸவ்ரீ, மாலிக் (ஓர் அறிவிப்பில்) , இப்னு தைமியா ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இவர்களுடைய ஆதாரம்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யாருக்கு வசதியிருந்தும் அவர் உழ்ஹிய்யாக் கொடுக்கவில்லையோ அவர் எங்களுடைய தொழுமிடத்தை நெருங்க வேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அஹ்மத் :2/321, இப்னுமாஜா: 3123, ஹாகிம்: 2/389)

இரண்டாவது கருத்து: உழ்ஹிய்யாவைக் கொடுப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னாவாகும். அது கட்டாயமான ஒரு கடமையல்ல. இக்கருத்தை அபூபக்ர், உமர், அபூமஸ்ஊத் அல்பத்ரீ ரழியல்லாஹு அன்ஹும், ஸஈத் இப்னுல் முஸய்யப், சுவைத் இப்னு உக்பா, அதாஃ, அல்கமா, அல்அஸ்வத், மாலிக், ஷாபிஈ, இஸ்ஹாக், அஹ்மத், அபூயூஸுப், அபூஸவ்ர், அல்முஸனீ, தாவூத், இப்னு ஹஸ்ம், இப்னுல் முன்திர், அஷ்ஷெய்ஹ் பின்பாஸ் ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இவர்களுடைய முதல் ஆதாரம்: உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'துல்ஹஜ் பத்து நாட்கள் நுழைந்தால் உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாக் கொடுக்க நாடினால் அவர் தனது முடியையும் நகத்தையும் வெட்டாமல் தடுத்துக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1977)

இந்த ஹதீஸில் 'உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாக் கொடுக்க நாடினால்” என்ற வார்த்தையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் உழ்ஹிய்யா கட்டாயமான ஒன்றல்ல என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

இரண்டாவது ஆதாரம்: அபூபக்ர், உமர், அபூமஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் வசதிபடைத்தவர்களாக இருந்தும் யாரும் உழ்ஹிய்யா கொடுப்பது கட்டாயம் என்று கருதாமல் இருப்பதற்காக அவர்கள் உழ்ஹிய்யாவைக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். (பைஹகீ: 9/295) அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இர்வாஉல் கலீல் என்ற அவருடைய நூலில் இச்செய்தியை ஸஹீஹ் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

சரியான கருத்து: உழ்ஹிய்யாக் கொடுப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னாவாகும். மாறாக அது கட்டாயமான ஒன்றல்ல.

கட்டாயமெனக் கூறியவர்கள் முன்வைத்த ஆதாரத்தைப் பொறுத்தவரையில் அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டதா? அல்லது அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பா? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. அச்செய்தியைப் பொறுத்தவரையில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டது என்பதே சரியான கருத்தாகும்.

இப்னுல் ஹாதீ, இப்னு ஹஜர், தஹாவீ போன்ற அறிஞர்கள் இச்செய்தி அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட செய்தியென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

கேள்வி: உழ்ஹிய்யாக் கொடுக்க விரும்புபவர் துல்ஹஜ் பத்து நாட்களை அடைந்தால் தனது நகம், முடி ஆகியவற்றை வெட்டிக்கொள்வதின் சட்டம் என்ன?

பதில்: உழ்ஹிய்யாக் கொடுப்பவர் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களில் நுழைந்தால் தனது நகத்தையும் முடியையும் வெட்டிக்கொள்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'துல்ஹஜ் பத்து நாட்கள் நுழைந்து உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாக் கொடுக்க நாடினால் அவர் தனது முடியையும் நகத்தையும் வெட்டாமல் தடுத்துக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1977)

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நகம் மற்றும் முடியை வெட்டிக்கொள்வதை தடைசெய்திருக்கின்றார்கள். ஸன்ஆனீ, ஷவ்கானீ, அல்வாதிஈ, இப்னு உஸைமீன் ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுக்க விரும்புபவர் துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் நகம் மற்றும் முடியை வெட்டிக்கொள்வது ஹராமாகும் என்று கூறியிருக்கின்றார்கள்.

கேள்வி: உழ்ஹிய்யாப் பிராணியை கொழுக்க வைப்பதும் அதனை பெருக்க வைப்பதும் விரும்பத்தக்கதா?

பதில்: உழ்ஹிய்யாப் பிராணியை கொழுக்க வைப்பதும் அதனை பெருக்க வைப்பதும் விரும்பத்தக்கதாகும். இக்கருத்தை இமாம் இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இது அனைத்து அறிஞர்களின் ஏகோபித்த கருத்து என்று கூறியிருக்கின்றார்கள். இவ்வாறு உழ்ஹிய்யாப் பிராணியை கொழுக்க வைப்பதும் பெருக்க வைப்பதும் அதிகமான கூலியையும் மற்றும் பிரயோசனத்தையும் பெற்றுக்கொள்வதற்கான காரணமாகவும் அமையும் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

கேள்வி: உழ்ஹிய்யாவின் ஆரம்ப நேரம் எது?

பதில்: உழ்ஹிய்யாவின் நேரம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

முதலாவது கருத்து: சூரியன் உதித்து பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவுக்கு எந்தளவு நேரம் பயன்படுத்தப்படுமோ அந்த நேரம் நிறைவுற்றதன் பின்பு உழ்ஹிய்யாவுடைய நேரம் ஆரம்பிக்கப்படும்.

இக்கருத்தை இமாம் ஷாபிஈ, இப்னுல் முன்திர், தாவூத் அள்ளாஹிரீ, ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த சில அறிஞர்கள் (ரஹிமஹுமுல்லாஹ்) போன்றோர் முன்வைக்கின்றனர்.

இரண்டாவது கருத்து: பெருநாள் தொழுகையும் குத்பாவும் நிறைவடைந்ததும் உழ்ஹிய்யாவுடைய நேரம் ஆரம்பிக்கப்படும். இக்கருத்தை அல்ஹஸன் அல்பஸரீ, அஹ்மத், இஸ்ஹாக், அல்அவ்ஸாஈ ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

மூன்றாவது கருத்து: பெருநாள் தொழுகை முடிவடைந்ததிலிருந்து உழ்ஹிய்யாவுடைய நேரம் ஆரம்பிக்கப்படும். இக்கருத்து அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மத்ஹபில் கூறப்பட்ட பிரசித்தி பெற்ற கருத்தாகும். இக்கருத்தை இமாம் இப்னு குதாமா, தஹாவீ, ஷவ்கானீ, இப்னு உஸைமீன், பின்பாஸ் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்களும் கூறியிருக்கின்றார்கள்.

இதுவே சரியான கருத்தாகும். ஏனென்றால், ஜுன்துப் இப்னு ஸுப்யான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் மனிதர்களுக்கு தொழுகை நடாத்திய பின் அறுக்கப்பட்ட ஓர் ஆட்டைக் கண்டார்கள். பின்பு அவர்கள் 'யார் தொழுகைக்கு முன் அறுத்துப் பலியிட்டாரோ அவர் அதற்குப் பகரமாக ஓர் ஆட்டை அறுக்கட்டும்! யார் அறுத்துப் பலியிடவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்துப் பலியிடட்டும்!” என்று கூறினார்கள். (புஹாரீ: 5562, முஸ்லிம்: 1960)

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு முன் உழ்ஹிய்யாக் கொடுப்பதை தடுத்திருக்கின்றார்கள். எனவே, தொழுகைக்குப் பின்னரே அதனுடைய நேரம் ஆரம்பிக்கப்படும் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்