உழ்ஹிய்யாவில் கூட்டுச்சேர முடியுமா?

வினா:

உழ்ஹிய்யாவில் கூட்டுச்சேர முடியுமா?

விடை:

உழ்ஹிய்யா கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியன உள்ளன. ஆட்டைப் பொறுத்தளவில் அதில் கூட்டுச்சேர முடியாது என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

ஆயினும் மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளில் கூட்டுச்சேர முடியுமா? என்பதில் அறிஞர்கள் மத்தியில் இருவகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

1. மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளில் ஏழு நபர்கள் கூட்டுச் சேரமுடியும். இக்கருத்தை பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகின்றனர்.

2. ஒருவர் ஒரு மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ தனக்காகவோ அல்லது தனது குடும்பத்திற்காகவோ அறுத்துப்பலியிடலாம். அவர்கள் எண்ணிக்கையில் ஏழைவிட அதிகமானவர்களாக இருந்தாலும் சரியே! மாற்றமாக, ஏழுநபர்கள் பங்கில் அவற்றை வாங்கிப் பலியிட முடியாது. அவ்வாறு கூட்டாகப் பலியிடுவதாக இருந்தால், ஸூன்னத்தான ஹதியில் மாத்திரமே குடுபத்துடன் கூட்டுச் சேரமுடியும் வாஜிபான ஹதியிலோ உழ்ஹிய்யாவிலோ முடியாது. இக்கருத்தை இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முதல் சாராரின் ஆதாரங்கள்முதல் சாராரின் ஆதாரங்கள்

1. ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ஹூதைபிய்யா உடன்படிக்கை இடம்பெற்ற ஆண்டு எங்களில் ஏழுலேழு நபர்கள் இணைந்து ஒட்டகம், மாடு ஆகியவற்றை அறுத்தோம். (முஸ்லிம்: 1318)

பிறிதோர் அறிவிப்பில் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபியவர்களுடன் ஹஜ்ஜில் பங்கேற்றோம். அப்போது எங்களில் ஏழு நபர்கள் கூட்டாக இணைந்து ஒட்டகம், மாடு ஆகியவற்றை அறுத்தோம். (அபூதாவுத்: 2808)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது முஸ்லிம் கிரந்தத்திற்கான விரிவுரை நூலில் இந்த ஹதீஸ் குறித்துக் கூறுகையில்: இந்த ஹதீஸ்கள் ஹதியில் கூட்டுச்சேர முடியும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. மேலும், ஆட்டில் அவ்வாறு கூட்டுச்சேர முடியாது என்பதில் அறிஞர்கள் அனைவரும் ஒரு மித்த கருத்தைக் கொண்டுள்ளாகள். அத்தோடு, இச்செய்திகளில் இருந்து ஒட்டகம், மாடு ஆகியவற்றில் ஏழு நபர்கள் கூட்டுச் சேரலாம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவ்வாறு ஏழு நபர்கள் கூட்டுச் சேர்ந்த பிராணியின் ஏழில் ஒரு பங்கு, ஓர் ஆட்டிற்குச் சமனாகும் என்பதையும் புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள்.

2. மேலும், இவ்விடயம் குறித்து மிகத் தெளிவான ஒரு செய்தி திர்மிதி (905), நஸாயி (4392), இப்னுமாஜா (3131), அஹ்மத் (2480) ஆகியகிரந்தங்களில் பதிவாகியுள்ளது. அவ்வாசகமாவது:

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபியவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். அப்போது ஈதுல் அழ்ஹாத்தினம் வந்தது. எனவே, எங்களில் ஏழு நபர்கள் மாட்டை அறுப்பதிலும் பத்து நபர்கள் ஒட்டகத்தை அறுப்பதிலும் ஒன்றிணைந்தோம். இச்செய்தியை இப்னுல் கத்தான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்வஹ்ம் வல்ஈஹாம் என்ற தனது நூலில் ஸஹீஹான செய்தி என்கிறார்கள். (5/410)

மேலும், இப்னுல் முலக்கின் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது நூலான அல்பத்ருல் முனீர் இல் இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை தொடர்பாகக் கூறும்போது: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகத் தன்மையுடையவர்கள் என்கிறார்கள். (9/304)

இன்னும், அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மஷ்காத் எனும் நூலில் இடம் பெறக்கூடிய ஹதீஸ்களைத் தரம் பிரிக்கும் போது இச்செய்தியை ஸஹீஹ் எனும் பட்டியலில் சேர்த்துள்ளார்கள். (1469)

3. ராபி இப்னு ஹூதைஜ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் பத்து ஆடுகளை ஒர் ஒட்டகத்திற்கு கணக்கிட்டார்கள். (புகாரி: 2324), (முஸ்லிம்: 5093)

இவ்வளவீடு கூட ஒட்டகம், மாடு ஆகிய பிராணிகளில் கூட்டுச் சேர்வதற்கு அனுமதி இருக்கின்றது என்ற பாங்கில் அமைந்துள்ளது.

4. ஹதி, உழ்ஹிய்யா ஆகிய இரண்டும் காலம், இடம், விநியோகம் போன்ற அம்சங்களில் வேறுபட்டாலும் அறுப்புப் பிராணிகளின் வகைகள், அதில் கூட்டுச் சேரும்விதம் போன்றவற்றில் ஒரே அமைப்பை உடையாதாக உள்ளன.

இரண்டாவது சாராரின் ஆதாரங்கள்:

1. ஹதி தொடர்பாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு ஸூன்னத்தான ஹதியில் கூட்டுச் சேருவதைக் குறிக்கின்றது.

2. ஹதியுடைய சட்டம் வேறு, உழ்ஹிய்யாவுடைய சட்டம் வேறு. இரண்டையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியாது

தீர்வு:

இதுபற்றிய முழுமையான அறிவு அல்லாஹ் ஒருவனிடத்தில் மாத்திரமே உள்ளது என்பதை முதன்மைப்படுத்தி, இதுவிடயத்தில் மிக ஏற்றமான கருத்தாக முதல் சாராரின் கருத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். அதற்கான சான்றுகளாவன:

a. இது விடயத்தில் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, ராபிஉ இப்னு ஹூதைஜ் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோரின் செய்திகள் மிகத் தெளிவானவை.

b. ஹதியையும் உழ்ஹிய்யாவையும் நவீன காலத்தில் சிலர் வேறுபடுத்திப் பேசுவதைப் போன்று வேறு எவரும் வேறுபடுத்தியதில்லை.

c. இமாம் மாலிக்கைத் தவிர அனைத்து அறிஞர்களும் ஜாபி;ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியை ஹதி, உழ்ஹிய்யா ஆகியவற்றிக்குப் பொதுவான செய்தியாகக் கருதுகின்றார்கள்.

d. இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் செய்தி இது விடயத்தில் மிகத் தெளிவானது .அச்செய்தி முழுமையாக உழ்ஹிய்யாவைப் பற்றியே பேசுகின்றது. அச்செய்தியை பிரயாணத்தில் நடந்தது என்று சாட்டுப் போக்குக் கூறி வீண் தர்க்கம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. உஸூலுல் பிக்ஹ் கலையைப் படித்தவர்களுக்கு இப்படியான செய்திகளை குறிப்பாக்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நன்றாகத் தெரியும். எனவே, அவற்றைக் கவனத்தில் கொண்டு வலிந்துரைகள் செய்வதைத் தவிர்த்துக் கொள்வோம்.

e. ஒட்டகத்தில் கூட்டுச்சேரும் நபர்களின் எண்ணிக்கை குறித்து ஹதியிலும் உழ்ஹிய்யாவிலும் இருவிதமான அளவுகள் குறிப்பிடப்பட்டிருப்பதும் இது விடயத்தில் கூட்டுச்சேர அனுமதியுண்டு என்பதைப் புலப்படுத்துகின்றது.

மேலும், இவ்விடயம் குறித்து சவூதி அரேபியாவின் லஜினதுத் தாஇமா வல்இப்தாஉ என்ற சங்கத்திடம் வினவப்பட்டபோது, ஒட்டகம், மாடு ஆகியன ஏழு நபர்களுக்கு கூட்டுச் சேர்வதற்குப் போதுமானதாகும். அவ்வாறு கூட்டுச்சேரும் நபர்கள் ஒரே வீட்டில் உள்ளவர்களாகவோ அல்லது பல வீடுகளில் பிரிந்து வசிக்கக் கூடியவர்களாகவோ இருக்கலாம். அவர்களுக்கு மத்தியில் உறவுமுறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியே! ஏனெனில், ஒட்டகம், மாடு ஆகியவற்றில் கூட்டுச்சேர்வதற்கு ஸகாபாக்களுக்கு அனுமதித்த நபியவர்கள் அது தொடர்பாக விபரிக்கவில்லை என்கிறது. (பதாவா அல்லஜ்னதித் தாஇமா: 11/401)

மேலும், அஷ்ஷேய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில்: ஓர் ஆடு ஒருவருக்கு மாத்திரம் போதுமானதாகும். அதேபோன்று எவருக்கு ஓர் ஆடு போதுமோ அவருக்கு ஒட்டகத்தில் அல்லது மாட்டில் ஏழில் ஒருபங்கும் போதுமானதாகும் என்கிறார்கள்.

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK