இஸ்லாமிய வலீமாக்களின் சீர்கேடுகளும் அனாச்சாரங்களும்

அல்லாஹுத்தஆலா இவ்வுலகில் உள்ள மார்க்கங்களில் இஸ்லாத்தையே தேர்ந்தெடுத்தான்.

நிச்சயமாக அல்லாஹ்விடம் (ஏற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கம் என்பது இஸ்லாமாகும். (ஆல இம்ரான்:19) என அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.

அந்த மார்க்கத்தை தெளிவுபடுத்துவதற்காக வேண்டி காலத்துக்குக் காலம் நபிமார்களையும் அவன் அனுப்பினான். அவர்களில் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே தற்பொழுது பின்பற்றப்பட வேண்டிய ஒரே ஒரு நபியாகும். அந்தத் தூதர் அல்லாஹ்வின் கட்டளைப்படி இந்த உம்மத்துக்கு ஹலால், ஹராம் எதுவென்பதைத் தெளிவாக எத்திவைத்தார். அதனடிப்படையில் எமக்கு ஹலாலாக்கப்பட்ட ஒரு அம்சமே வலீமா விருந்தாகும். ஓவ்வொரு மணமகனும் தன் திருமணத்தின் போது கொடுக்க வேண்டிய விருந்தே அதுவாகும். ஹலாலாக்கப்பட்ட அந்த விருந்தில் இன்று எமது முஸ்லிம்கள் எத்தனையோ ஹராமான விடயங்களை உற்புகுத்தியுள்ளார்கள்.

வலீமா விருந்தோடு தொடர்புடைய அனைத்து சாரர்களினாலும் பல ஹராமான விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவைகளை தனித்தனியாக நாம் பார்ப்போம்.

திருமணத்தை ஏற்பாடு செய்யும் பெற்றோர்கள்

திருமணத்தை ஏற்பாடு செய்யும் பெற்றோர்கள் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களை வலீமாவுக்குள் நுழைவிப்பதன் காரணமாக அந்த வலீமாவே மோசமான வலீமாவாக மாறுகின்றது. அவைகளை நாம் வரிசையாகப் பார்ப்போம்.

ஆடம்பரமான முறையில் திருமணத்தை நடாத்தல்

இன்றைய வலீமாக்கள் பெற்றோர்களின் பிடிவாதம் காரணமாக ஆடம்பரமாக நிகழ்த்தப்படுவதை நாம் பார்க்கலாம். மணமகனுக்கும் மணமகளுக்கும் எல்லை மீறி ஆடை, ஆபரணங்களை வாங்கி வீண்விரயம் செய்கின்றனர். மேலும், வலீமாவுக்கு ஏற்பாடு செய்யும் உணவுகளில் வீண்விரயம் செய்கின்றனர். தனது ஒரேயொரு மகன் அல்லது ஒரேயொரு மகளின் திருமணத்தை நான் இவ்வாறுதான் நடாத்துவேன் என்ற நிலைப்பாடே பெற்றோர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கான காரணமாகும்.

நீங்கள் உண்ணுங்கள் இன்னும் பருகுங்கள் மேலும் வீண்விரயம் செய்யாதீர்கள். (அல் அஃராப்:31) என அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.

மார்க்கத்திற்கு முரணான அம்சங்களுக்கு வழிவகுக்கும் திருமண மண்டபங்களை தெரிவு செய்தல்

அதிகமான திருமண வைபவங்கள் இன்று மண்டபங்களில் நடைபெறுகின்றன. அதற்கு மார்க்கத்தில் எந்நத் தடையும் இல்லை. ஆனால், நாம் தெரிவு செய்யும் மண்டபம் மார்க்கத்தின் வரையறைகளை உள்ளடக்கியுள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும். ஆண், பெண் கலப்புக்கு ஏற்றதாக அமையும் மண்டபமாக அது இருக்கக்கூடாது.

உங்களுக்கு பெண்களிடம் நுழைவதை நான் எச்சரிக்கிறேன். (திர்மிதீ, அஹ்மத்) என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், காபிர்களால் மது அருந்தப்படும், இசை நிகழ்த்தப்படும் மண்டபங்களையும் நாம் தெரிவு செய்யக்கூடாது.

மணமகன்

மணமகன் ரீதியாகவும் திருமணங்கள் மார்க்கத்திற்கு முரணானதாக அமைகிறன. தன் திருமணத்திற்கு ஆடையலங்கார ரீதியாக மணமகன் செய்யும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்கள் சிலவற்றை பார்ப்போம்.

தாடி வழித்தல்

தாடியை வழித்தல், கத்தரித்தல், வெட்டுதல், பிடுங்குதல் ஆகிய அனைத்தும் மார்க்கத்தில் ஹராமாகும்.

இணைவைப்பவர்களுக்கு நீங்கள் மாற்றம் செய்யுங்கள் மீசையை கத்தரியுங்கள் இன்னும் தாடியை வளர விடுங்கள். (முஸ்லிம்) என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

இது ஒரு ஏவல் என்பதால் இதனைப் பின்பற்றுவது அனைவரின் மீதும் கடமையாகும். தாடி வழிப்பது ஹராமாகும் என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும் என இமாம் இப்னு ஹஸ்ம் தெரிவித்துள்ளார்.

தன்னை அலங்காரப்படுத்திக்கொள்வதற்காக மணமகன் உட்பட அதிகமான ஆண்கள் தங்களது தாடிகளை வழிக்கின்றார்கள். ஆனால் இது இஸ்லாத்தின் பார்வையில் அலங்காரமல்ல. மாறாக அது பெண்களுக்கும் காபிர்களுக்கும் ஒப்பான செயலாகும்.

ஆண்களில் பெண்களுக்கு ஒப்பானவர்களையும் பெண்களில் ஆண்களுக்கு ஒப்பானவர்களையும் ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சபித்தார்கள். (புஹாரீ)

மேலும், அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர்களேயாவார். (அபூ தாவூத்)

கரண்டைக் காலின் கீழ் ஆடையணிதல்

ஆண்கள் கரண்டைக் காலின் கீழ் ஆடையணிவது மார்க்கத்தில் ஹராமாகும். இது குறித்து கடும் எச்சரிக்கை ஹதீஸ்களில் வந்துள்ளது.

கீழாடையில் இருந்து கரண்டையை விட்டும் கீழிறங்கியது நரகத்திலாகும். (புஹாரீ) என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், அவர்கள் கூறினார்கள்: யார் பெருமைக்காக தன் ஆடையை இழுத்துச் செல்கிறாரோ அவரை மறுமையில் அல்லாஹ் பார்க்கமாட்டான். (புஹாரீ, முஸ்லிம்)

கரண்டைக் காலின் கீழ் பெருமைக்காக அணிபவருக்கு அல்லாஹ்வின் இரக்கப்பார்வை கிடைக்காது. பெருமையின்றி அணிபவர் நரகத்திலே இருப்பார் என்பதே இந்த இரு ஹதீஸ்களின் விளக்கமாகும்.

பெண்களுக்கு கை கொடுத்தல்

அந்நியப் பெண்களின் உடலைத் தொடுவதே ஹராமான அம்சமாகும். கை கொடுப்பது அதை விட மிகப்பெரிய குற்றமாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: இரும்பினாலான ஒரு ஊசியின் மூலம் ஒரு மனிதனின் தலையில் குத்தப்படுவது அவனுக்கு ஹலாலாகாத ஒரு பெண்ணைத் தொடுவதை விட மிகச் சிறந்ததாகும். (முஸ்னதுர்ருவ்யானீ)

பெண்களைத் தொடுவது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஆகவே, அந்நியப் பெண்களுக்கு கை கொடுப்பதும் ஹராமாகும்.

மணமகள்

அந்நிய ஆண்களுக்கு ஒரு பெண் தன் அலங்காரத்தை வெளிக்காட்டக்கூடாது. தன் கணவருக்கு மாத்திரமே அவள் தன் அலங்காரத்தை வெளிக்காட்ட முடியும். ஆனால், இன்று திருமண வைபவங்களில் மணப்பெண்கள் தங்கள் அலங்காரத்தை அனைவருக்கும் காட்டுகின்றார்கள். அதை எந்த ரோஷமுமின்றி மணமகன்களும் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மேலும், (நபியே) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக்கொள்ளவும். அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முந்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க்கொள்ள வேண்டும். (அந்நூர்:31)

உறவினர்கள்

மணமகன் அல்லது மணமகளின் உறவினர்களாலும் திருமண வைபவங்கள் மார்க்கத்திற்கு முரணாக மாறிவிடுகின்றது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

போட்டோ பிடித்தல்

உருவப்படம் அமைப்பது இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட விடயமாகும். வெறும் கையால் வரைவது மாத்திரம் ஹராமானதல்ல. கெமராவின் மூலம் போட்டோ பிடிப்பதும் ஹராமானதாகும். ஏனெனில், போட்டோ எடுப்பவரே அந்த உருவத்தை அமைக்கிறார். அதற்கு முழுக்காரணமும் அவரே. உருவப்படங்கள் குறித்து எச்சரித்து வரக்கூடிய ஹதீஸ்களை நாம் பார்ப்போம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக இந்த உருவங்களை செய்பவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். நீங்கள் படைத்தவற்றை உயிரூட்டுங்கள் என அவர்களுக்கு கூறப்படும். (புஹாரீ, முஸ்லிம்)

மேலும், அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் வேதனையால் மிகக்கடுமையானவர்கள் உருவம் அமைப்பவர்கள். (புஹாரீ, முஸ்லிம்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உருவம் அமைப்பவர்களை சபித்தார்கள். (புஹாரீ) போட்டோ பிடிப்பதின் விபரீதத்தை மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொண்டீர்களா?

இசை கேட்டல்

இசை கேட்பது மார்க்கத்தில் ஹராமான ஓர் அம்சமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: (இவர்களைத்தவிர) மனிதர்களில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து (மனிதர்களை) வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். (லுக்மான்:6)

வீணான செய்தியென்றால் அது இசையாகும் என இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சத்தியமிட்டுக் கூறினார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: (எனது சமுதாயத்தில் விபச்சாரம், பட்டாடை, மது, இசை ஆகியவற்றை ஹலாலாக்கக்கூடிய கூட்டத்தினர்கள் தோன்றுவார்கள். (புஹாரீ)

இறுதியாக

அனைத்து ஹராமான அம்சங்களிலிருந்தும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!

by: ASKI IBNU SHAMSIL ABDEEN