இஸ்லாத்தின் பார்வையில் உண்மையான நஷ்டவாளிகள் யார்? -02

بسم الله الرحمن الرحيم

5.இஸ்லாத்தில் நூதனங்களை ஏற்படுத்தியவர்கள்

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: (நபியே!) அமல் புரிந்தும் நஷ்டமடைந்தோரைப் பற்றி உங்களுக்கு நாம் அறிவிக்கட்டுமா? அவர்களுடைய முயற்சிகளோ இவ்வுலகில் வீணாகிப் போய்விட்டன. ஆனால், அவர்களோ தாம் செய்வது சிறந்ததெனக் கருதுகின்றனர்' என்று கூறுங்கள். (அல்கஹ்ப்: 103, 104)

இவ்வசனம் இஸ்லாத்தில் சொல்லப்படாத வணக்கங்களை உருவாக்கியவர்கள் குறித்துப் பேசியுளள்து. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் அமையாத ஒவ்வொரு வணக்கமும் மறுமையில் மகத்தான நஷ்டத்தை உண்டுபண்ணும் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் எச்சரிக்கை செய்கிறான்.

இஸ்லாத்தில் புதிய நூதனங்களை உருவாக்குபவர்கள் அதற்காக பல கோடிக்கணக்கான பணங்களைச் செலவு செய்தாலும், அவர்களுடைய அயராத முயற்சியை வெளிப்படுத்தினாலும், பல மணித்தியாலங்களை அதற்காக அவர்கள்  செலவிட்டாலும்,  அவர்களுடைய எண்ணம் சிறந்ததாக இருந்தாலும் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை உருவாக்கியதற்காக வேண்டி அல்லாஹ் அவர்களுடைய முயற்சிகளை வீணாக்கி, பிரயோசனமற்றதாக ஆக்கி விடுவான்.

ஐங்காலத் தொழுகைகளுக்குப் பிறகு கூட்டுதுஆ ஓதிவருபவர்கள், மரணித்தவரைச் சூழ இருந்து கூட்டுதுஆ ஓதிவருபவர்கள், நபிகளாரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள், இஸ்லாத்தில் சொல்லப்படாத தொழுகைகளையும் நோன்புகளையும் உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடியவர்கள், இதுபோன்ற மார்க்கத்தில் வழிகாட்டப்படாத செயல்களை வணக்கம் என்ற பெயரில் அரங்கேற்றக்கூடியவர்கள் யாவரும் மறுமை நாளுடைய மகத்தான நஷ்டத்தைப் பயந்து கொள்ளட்டும்.

6.உறவைத் துண்டித்து வாழக்கூடியவர்கள்

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: எவர்கள் அல்லாஹ்வுடன் உடன்படிக்கை செய்து, பின்பு அவ்வுடன்படிக்கையை முறித்துக்கொள்கின்றார்களோ, மேலும், யாருடன் சேர்ந்து நடக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவர்களைத் துண்டித்து நடப்பவர்கள், மற்றும் பூமியில் குழப்பம் செய்பவர்கள் ஆகியோர் தாம் (உண்மையான) நஷ்டவாளிகள். (அல்பகறா: 27)

யார் யாருடன் சேர்ந்து உறவைப் பேணிக்கொள்ளுமாறு இஸ்லாம் ஏவியிருக்கின்றதோ அவர்களுடைய உறவைத் துண்டித்து வாழக்கூடியவன் நஷ்டவாளி என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான்.

பெற்றோருடைய உறவைப் பேணிக்கொள்ளுமாறு இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. அவ்வுறவைத் துண்டித்து வாழ்பவன் ஒரு நஷ்டவாளியாவான். குடும்பத்தாருடைய உறவைப் பேணிக்கொள்ளுமாறு இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. அவ்வுறவைத் துண்டித்து வாழ்பவனும் ஒரு நஷ்டவாளியாவான்.

சிறு சிறு பிரச்சினைகளுக்காக உறவைத் துண்டித்து, மாதக்கணக்கிலும் பல வருடங்களாகவும் உறவினர்களை வெறுத்து, ஒதுக்கி வாழக்கூடியவர்கள் மறுமை நாளில் ஏற்படக்கூடிய மகத்தான நஷ்டத்தை அஞ்சிக் கொள்ள வேண்டும்.

7.ஷைத்தானுக்கு அடிபணியக்கூடியவர்கள்

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வையன்றி ஷைத்தானை தனது பாதுகாவலனாக எடுத்துக்கொள்பவர்கள் நிச்சயமாக தெளிவான நஷ்டத்தை அடைந்து விட்டனர். (அந்நிஸா: 19)

ஷைத்தானை தன்னுடைய தோழனாக எடுத்துக்கொண்டவர்களின் நிலைமையைப் பற்றி அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். அவர்களும் மறுமை நாளின் மகத்தான நஷ்டத்தை அடையக்கூடியவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஷைத்தானுக்கு அடிபணிந்து, அவனது கட்டளைகளுக்கு இணங்கி பாவங்களில் ஈடுபடக்கூடியவர்கள், ஷைத்தானுக்கு அடிபணிந்து சினிமாக்களையும் மோசமான காட்சிகளையும் கண்டு களிப்பவர்கள், ஷைத்தானுக்கு அடிபணிந்து மது, வட்டி, விபச்சாரம் எனப் பெரும்பாவங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடியவர்கள், ஷைத்தானுக்கு அடிபணிந்து மறைக்க வேண்டிய அங்கங்களை மறைக்காமல் தமது அலங்காரங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி திரியக்கூடிய பெண்கள், ஷைத்தானுக்கு அடிபணிந்து அத்துமீறி பிற மனிதர்களின் உரிமைகளைப் பறித்து சொல்லாலும், செயலாலும் அவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் மனிதர்கள் அனைவருமே மறுமை நாளில் நஷ்டத்திற்குரியவர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

8.சிறப்பான காலங்களில் அல்லாஹ்வை வணங்கி, துன்பமான காலங்களில் அல்லாஹ்வை மறந்தவர்கள்

அல்லாஹுதஅலா கூறுகின்றான்: மக்களில் சிலர் ஓரத்தில் இருந்து அல்லாஹ்வை வணங்கி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு நலவு ஏற்பட்டால் அதைக் கொண்டு அமைதி பெறுகின்றனர். அவர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்வை விட்டும் தமது முகங்களைத் திருப்பிக்கொள்கின்றனர். இவர்கள் உலகில் நஷ்டமடைந்து மறுமையிலும் நஷ்டமடைவார்கள். அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும். (அல்ஹஜ்: 11)

இவ்வசனத்தில் அல்லாஹ் சில மனிதர்களின் நிலைகளை சுட்டிக்காட்டியுள்ளான். அவர்களைப் பொறுத்த வரையில், ஏதாவது நலவு அவர்களுக்கு ஏற்படுமாயின் அல்லாஹ்வைப் புகழ்வார்கள், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவார்கள். ஆனால், ஒரு துன்பத்தை எதிர்கொள்கின்றபோது அல்லாஹ்வைப் புறக்கணித்து, அல்லாஹ்வுக்கு ஏசக்கூடியவர்களாக மாறிவிடுவார்கள்.

தமக்கு பண வசதி ஏற்படுகின்றபோது அல்லாஹ்வைப் புகழ்வார்கள். நஷ்டம் வந்தடைகின்றபோது அல்லாஹ்வைத் திட்டுவார்கள். ஆரோக்கியமான காலங்களில் அல்லாஹ்வைப் புகழ்வார்கள். நோயின்போது அல்லாஹ்வுக்கு ஏசுவார்கள். குழந்தைப் பாக்கியம் உண்டாகினால் அல்லாஹ்வைப் புகழ்வார்கள். குழந்தைப் பாக்கியம் இல்லாவிட்டால் அல்லாஹ்வைப் புறக்கணிப்பார்கள். வியாபாரத்தில் இலாபம் ஏற்பட்டால் அல்லாஹ்வைப் புகழ்வார்கள். வியாபாரத்தில் தோல்வியடைந்தால் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். நிச்சயமாக தமது நிலைமைகளுக்கு ஏற்ப அல்லாஹ்வுடனான தொடர்பை மாற்றிக்கொள்ளக்கூடிய இவர்களும் மறுமை நாளின் நஷ்டவாளிகளாக இருப்பார்கள் என்பதை மேற்கூறப்படட வசனம் உணர்த்துகின்றது.

அன்பின் வாசகர்களே! நாம் இங்கு குறிப்பிட்ட இவர்கள் மாத்திரம் மறுமை நாளின் நஷ்டவாளிகளன்று. மாறாக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மறுமையின் நஷ்டவாளிகள் என்று இன்னும் பலரையும் இனங்காட்டியுள்ளனர்.

மறுமையின் நஷ்டம் உலகத்தில் ஏற்படக்கூடிய எந்த நஷ்டத்திற்கும் ஈடாகமாட்டாது. உலகில் ஏற்படக்கூடிய நஷ்டம் அது ஒரு காலத்தில் மறைந்து விடும். ஆனால் மறுமையின் நஷ்டம் அல்லாஹ்வின் மன்னிப்பு இருக்காவிட்டால் நிரந்தரமாக அமைந்து விடும் என்பதை நாம் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மறுமையின் நஷ்டத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள அந்நஷ்டவாளிகளின் தீய பண்புகளிலிருந்து எம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும். எவ்வாறு உலக வாழ்க்கையில், வியாபாரத்தில் நஷ்டம் போய்விடக்கூடாது என்பதில் நாம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கின்றோமோ, அதைவிடக் கூடுதலாக மறுமை நாளின் நஷ்டத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள அதிக முயற்சியுன் செயற்படக்கூடிய நல்லடியார்களாக எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லாஹ் நம்மனைவரையும் அந்த மகத்தான நாளின் நஷ்டத்திலிருந்து பாதுகாப்பானாக!