இஸ்லாத்தின் பார்வையில் மோதிரம் – 03

بسم الله الرحمن الرحيم

கால் விரல்களில் மோதிரம் அணியலாமா?

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “ஒரு பெண் அவள் நாடிய விரலில் மோதிரம் அணிந்து கொள்ளலாம், அது கால் விரல்களாக இருந்தாலும் சரியே! ஆண்களைப் பொறுத்தவரையில் சுட்டு விரல், நடு விரல் ஆகியவற்றில் மோதிரம் அணிவது வெறுக்கத்தக்கதாகும், அவர்கள் கால் விரல்களில் அணிவது கடுமையாக வெறுக்கப்பட்டதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஷர்ஹு ஸஹீஹி முஸ்லிம்)

மோதிரம் அணியப்பட வேண்டிய விரல்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களின் மூலம் நாம் தெரிந்து கொண்டோம். எனவே, சுண்டு விரலில் மோதிரம் அணிவது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தின்படி சிறப்புக்குரியதாகும்.

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “கரத்தின் சுண்டு விரலில் மோதிரம் அணிவது பற்றிய பாடம்” என்று ஷர்ஹு முஸ்லிம் என்ற நூலில் தலைப்பிட்டிருக்கின்றார்கள். இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் “சுண்டு விரலில் மோதிரம் அணிதல்” என்று தலைப்பிட்டுள்ளார்கள்.

மோதிரத்தைச் சுண்டு விரலில் அணிவதே சுன்னாவாகும் என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவளுக்கு அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்து கொள்ளலாம் என்று இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சுண்டு விரலில் மோதிரத்தை அணிவதே மிக ஏற்றமானது என்று கூறியிருக்கின்றார்கள். இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் சுண்டு விரலில் மோதிரத்தை அணிவது மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஷர்ஹுஸ் ஸாதில் மஆத்: 6/109)

எனவே, சுண்டு விரலில் மோதிரம் அணியப்படுவதே மிகச் சிறந்ததும் நபிவழியுமாகும்.

மோதிரம் அணியப்படுவற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடு விரலிலும் சுட்டு விரலிலும் மோதிரம் அணிவதைத் தடை செய்ததாக ஹதீஸ்களில் பதிவாகியுள்ளன.

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டு விரலிலும் நடு விரலிலும் மோதிரம் அணிவதைத் தடை செய்தார்கள்." (முஸ்லிம்)

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு சுட்டு விரலிலும், நடு விரலிலும் மோதிரம் அணியப்படக்கூடாது என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். சில அறிஞர்கள் இவ்விரு விரல்களில் அணிவது வெறுக்கத்தக்கது என்றும் மேலும் சில அறிஞர்கள் ஹராம் என்றும் கூறியுள்ளார்கள்.

இமாம் நவவி, இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்  ஆகிய அறிஞர்கள் இவ்விரு விரல்களிலும் மோதிரம் அணிவது வெறுக்கத்தக்கது என்று கூறியிருக்கின்றார்கள். இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் மற்றும் அஷ்ஷெய்ஹ் யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் ஆகியோர் ஹராம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். நடு விரலிலும் சுட்டு விரலிலும் மோதிரம் அணியப்படுவது ஹராம் என்பதே சரியான கருத்தாகும். ஏனென்றால், மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸில் இடம்பெற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தடை ஹராம் என்பதையே தெரிவிக்கின்றது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

பெண்களும் அவர்களது சுட்டு விரலிலும், நடு விரலிலும் மோதிரம் அணிவது தடை செய்யப்பட்டுள்ளதா?

பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்று இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய கருத்தை நாம் முன்பு குறிப்பிட்டோம். இக்கருத்தை நவீன கால அறிஞர்களில் இப்னு பாஸ், இப்னு உஸைமீன், யஹ்யா அல்ஹஜூரி ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோரும் சரிகண்டுள்ளார்கள்.

சுட்டு விரலிலும் நடு விரலிலும் மோதிரம் அணியத்தடை குறித்து வரக்கூடிய செய்தி ஆண்களுக்குரியதாகும் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அனைத்து விரல்களிலும் அலங்கரித்துக் கொள்ள முடியும் என்று இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த அறிஞர்கள் கூறிய கருத்துக்கு மாற்றமான ஒரு கருத்தை நாம் ஆதாரபூர்வமாகக் காணவில்லை. எனவே, இக்கருத்தை நாம் சரியெனக் கருதுகின்றோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஆழி விரலில் மோதிரம் அணியலாமா?

ஆழி விரல் என்பது சுண்டு விரலை அடுத்து வரக்கூடிய விரலாகும். இதற்கு மோதிர விரல் என்றும் கூறப்படுகின்றது. ஏனென்றால், அதிகமானவர்கள் இவ்விரலிலேயே மோதிரத்தை அணிகின்றார்கள். ஆனாலும், இதற்கு மோதிர விரல் என்று கூறுவது எம்மைப் பொறுத்தளவில் நபிவழிக்கு நெருக்கமான ஒரு கருத்தல்ல என்றே கருதுகின்றோம். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களது சுண்டு விரலிலேயே மோதிரத்தை அணிந்ததாகப் பல செய்திகளில் நாம் அவதானித்தோம். மோதிர விரல் என்று கூறுவதாக இருந்தால் சுண்டு விரலையே மார்க்க அடிப்படையில் நாம் கூற வேண்டும். எனவே, ஆழி விரல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியே இந்த விடயத்தை நாம் உங்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு இவ்விரல்களில் மோதிரம் அணிவதைத் தடை செய்தார்கள்” என்று அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிவிட்டு அவர்களுடைய நடு விரலையும் அதற்கு அடுத்த விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (முஸ்லிம்)

இந்த ஹதீஸில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சுட்டிக்காட்டிய நடு விரலுக்கு அடுத்த விரல் எதுவென்பதில் இரு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் அது ஆழி விரல் என்றும் இன்னும் சிலர் அது சுட்டு விரல் என்றும் கூறியுள்ளனர். அது சுட்டு விரலேயாகும் என்று கூறக்கூடியவர்களுக்கு முன்பு குறிப்பிடப்பட்ட அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் தெளிவான ஆதாரமாக அமைந்திருக்கின்றது. ஏனெனில், அதில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நடு விரலையும் சுட்டு விரலையும் சுட்டிக்காட்டினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.

இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “எவராவது ஆழி விரலில் மோதிரம் அணிந்தால் அது தடுக்கப்பட்டதாக ஆகிவிடாது. ஏனென்றால், அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களது ஹதீஸில் தடுக்கப்பட்ட விரல் நடு விரலும் பெருவிரலுக்குப் பக்கத்தால் அதை அடுத்து வரக்கூடிய அல்முஸப்பிஹா என்று அழைக்கப்படக்கூடிய சுட்டு விரலுமேயாகும்.” (அல்முப்ஹிம்:5/414)

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சுண்டு விரலில் மோதிரம் அணியப்படுவது மிகச் சிறந்தது எனக்கூறிவிட்டு ஆழி விரலிலும் அணிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்கள். (ஷரஹுஸ் ஸாதில் மஆத்: 6/109)

சுண்டு விரலில் மோதிரம் அணிவதே நாம் முன்பு குறிப்பிட்டது போன்று மிகச் சிறந்ததும் நபிவழியுமாகும். ஆழிவிரலில் அணிந்து கொள்வதிலும் தவறில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

-              இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-              அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்