இஸ்லாத்தின் பார்வையில் மோதிரம் – 01

بسم الله الرحمن الرحيم

முன்னுரை

நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும். வணங்கப்படுதவற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இரட்சகன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சான்று பகருகின்றேன்.

இத்தொகுப்பு மோதிரம் அணிவதுடன் சம்பந்தப்பட்ட சில சட்டங்கள் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு தொகுப்பாகும். இதற்கு "இஸ்லாத்தின் பார்வையில் மோதிரம்” என்று பெயரிட்டுள்ளேன். முஸ்லிம்களில் பல ஆண்களும் பெண்களும் மோதிரம் அணியக்கூடியவர்களாக இருப்பதை நாம் காண்கிறோம். அதை அணியக்கூடிய பலருக்கும் அது குறித்த மார்க்க சட்டங்களை அறியாதிருப்பதின் காரணமாகவும் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதற்காகவும் மோதிரம் தொடர்பான சில சட்டதிட்டங்களை இத்தொகுப்பில் உள்ளடக்கியிருக்கின்றேன்.

அல்லாஹ் இதனை அவனது கூலி நாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக ஆக்குவானாக! இன்னும், இதனை வாசிப்பவர்கள் அனைவருக்கும் இதன் மூலம் பிரயோசனமடையச் செய்வானாக!

இத்தொகுப்பில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன:

1. மோதிரம் என்ற சொல்லின் வரைவிலக்கணம்.

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம்.

3. மோதிரம் அணிவது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு.

4. மோதிரம் அணியப்பட வேண்டிய உறுப்பு.

5. மோதிரம் அணிவதற்கு அனுமதிக்கப்பட்ட விரல்கள்.

6. மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள்.

7. மோதிரத்தின் வகைகள்.

8. சந்தேகங்களும் தெளிவுகளும்

மோதிரம் என்ற சொல்லின் வரைவிலக்கணம்

மோதிரம் என்பதற்கு அரபியில் “ஹாதம்” என்ற சொல் உபயோகிக்கப்படுகின்றது. “ஹாதம்” என்றால் விரல்களில் அணியப்படக்கூடிய பெறுமதிமிக்க கல் பதிக்கப்பட்ட வட்டமான ஒரு பொருளாகும். (முஃஜம் அரபி)

விரல்களில் அணியப்படும் ஓர் ஆபரணம் என்றும் இதற்கு வரைவிலக்கணமாகக் கூறலாம். (அர்ராஇத்)

மோதிரத்தில் பெறுமதிமிக்க கல் பதியப்படாமல் இருந்தால் அதற்கு அரபியில் "பத்ஹா” என்று அழைக்கப்படுவதாக இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக அஷ்ஷெய்ஹ் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி ஹபிளஹுல்லாஹ் அவர்கள் தனது "அல்கன்ஸுஸ் ஸமீன்” என்ற பத்வா தொகுப்பில் கூறியிருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம் எவ்வாறான அமைப்பில் இருந்தது, எந்த அமைப்பில் அதை அவர்கள் அணிந்திருந்தார்கள் என்பது பற்றிய ஸஹீஹான ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் குறிப்பிட்டுள்ளோம்.

1.   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்திருந்தது வெள்ளி மோதிரமாகும். அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று பதியப்பட்டிருந்தது.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கையில் அது இருந்தது. பிறகு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கையில் அது இருந்தது. பிறகு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கையில் இருந்தது. பின்பு அது உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து "அரீஸ்” என்ற கிணற்றில் விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்ட இலச்சினை 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று இருந்தது. (புஹாரி, முஸ்லிம்)

2.   மோதிரத்தில் பெறுமதிமிக்க கல் அமைந்த பகுதியை தனது உள்ளங்கை பக்கமாக அவர்கள் அமைத்துக் கொள்வார்கள்.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்தார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதில் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” எனும் இலச்சினையை பொறித்தார்கள். மேலும், "எனது மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருப்பதைப் போன்று வேறு யாரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று கூறினார்கள். அதை அவர்கள் அணியும்போது அதன் பெறுமதிமிக்க கல் உள்ளங்கை பக்கமாக அமையும்படி அணிவார்கள். (முஸ்லிம்)

3.   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம் வெண்மையுடையதாகக் காணப்பட்டது.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரேபியர் அல்லாதவர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது, "அரேபியர் அல்லாதவர்கள் முத்திரை இல்லாத கடிதம் எதையும் ஏற்கமாட்டார்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டது. எனவே, அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்துகொண்டார்கள். அவர்களது கையில் அந்த மோதிரத்தின் வெண்மையை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. (புஹாரி, முஸ்லிம்)

4.   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலக்கரத்தில் மோதிரத்தை அணிந்திருந்தார்கள். அதன் பெறுமதிமிக்க கல் அபீசீனீயா - எத்தியோப்பியா - நாட்டைச் சேர்ந்ததாக இருந்தது.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வலக்கரத்தில் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். அதன் பெறுமதிமிக்க கல் அபீசீனியாவைச் சேர்ந்ததாக இருந்தது. அதன் பெறுமதிமிக்க கல் தமது உள்ளங்கைப் பக்கம் அமையும்படி அணிந்திருப்பார்கள். (முஸ்லிம்)

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்