இத்தரணியில் சீர்திருத்தவாதிகளாய் வாழ்ந்திடுவோம்! – 02

 بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா ஒவ்வோர் அடியானுக்கும் அவரவருடைய எண்ணத்திற்குத் தக்க விதத்தில் கூலி கொடுக்கின்றான். எவருடைய எண்ணத்தில் சீர்திருத்தம் உள்ளது? மற்றும் எவருடைய எண்ணத்தில் சீர்குலைத்தல் உள்ளது என்பதை அவன் நன்கறிவான்.

அல்லாஹ் கூறுகின்றான்: "மேலும் சீர்திருத்தவாதியில் இருந்து சீர்குலைப்பவனை அல்லாஹ் நன்கறிவான்." (அல்பகரா: 220)

மேலும், அல்லாஹ் குழப்பவாதிகளின் செயல்களை முறியடிப்பான். அவர்களுடைய திட்டங்களை தவிடுபொடியாக்குவான். மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஃபிர்அவ்ன் தொடர்பான வரலாற்றை அல்லாஹுத்தஆலா கூறும் போது:

"(அவ்வாறு) அவர்கள் போட்ட பொழுது மூஸா (அவர்களிடம்) நீங்கள் எதைக் கொண்டு வந்தீர்களோ அது (வெறும்) சூனியமே, நிச்சயமாக அல்லாஹ் இவைகளை அழித்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்வோரின் செயலைச் சீர்படுத்தமாட்டான் என்று கூறினார்." (யூனுஸ்: 81)

நிச்சயமாக பூமியில் குழப்பம் ஏற்படுத்துவது என்பது பல அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. அவற்றில் தலையாய அம்சமாவது மாற்றார் உயிர்கள் மற்றும் உடைமைகள் மீது அடந்தேறுவதும் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குழைப்பதுமாகும்.

இவ்விடயம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். என்றாலும், சில மனிதர்கள் சீர்குழைப்பில் உள்ளடங்காது என்று கருதக்கூடிய பல விடயங்கள் சீர்குழைப்பின் வெளிப்பாடுகளாக உள்ளன என்பதே எதார்த்தம்!

அந்த அடிப்படையில் மனிதர்களுடைய சொத்துக்களைத் தவறான வழியில் புசித்தல், வட்டியை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல், லஞ்சம் கொடுத்தல் வாங்குதல், களவு, கொலை, கொள்ளை, அபகரிப்பு போன்றவற்றின் மூலம் அத்துமீறல், மனிதர்களுக்கு அத்தியவசியப்படும் பொருட்களைப் பதுக்கல், பூமியின் எல்லைகளை மாற்றுதல், பித்அத் போன்ற மார்க்கம் தடுக்கக்கூடிய காரியங்களைப் பரப்புதல் மற்றும் அதற்கு உதவி புரிதல், மானக்கேடான பாவமான காரியங்களை அறிமுகப்படுத்தல், அல்லாஹ்வுடைய மார்க்கத்துடன் போராடுதல், அவனுடைய சட்டதிட்டங்கள், அவனை ஏற்றுக் கொண்டோர் இன்னும் அவன் பால் அழைப்புவிடுப்போர் போன்றவற்றில் பரிகாசமாக நடந்து கொள்ளல், அல்லாஹ் இறக்கிவைக்காதவற்றைக் கொண்டு தீர்ப்பு வழங்குதல், குழப்பம், கிளர்ச்சி, வன்முறை போன்றவற்றைத் தூண்டிவிடுதல், பொதுமக்களின் உடைமைகளுக்குச் சேதம் விளைவித்தல், அவற்றைப் பாழ்படுத்தல், சிகரட், போதைவஸ்துக்கள், ஆபாச சஞ்சிகைகள், திரைப்படங்கள் போன்றவற்றை விநியோகம் செய்தல் ஆகிய பல காரியங்களை எம்சமுகத்திற்கு மத்தியில் பரவிக்காணப்படும் சீர்குழைத்தலுக்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

இவைகள் அனைத்தும் சீர்குழைத்தலின் சில மாதிரிகளாகும். இவற்றில் பல மனிதர்கள் அறியாது வீழ்ந்து கிடக்கிறார்கள்.

இப்படியான நடவடிக்கைகளை விட்டும் இத்தரணியைத் தூய்மைப்படுத்துவது எமது பெரும் பொறுப்பாகும். இப்பணியையே நபிமார்கள், நேர்வழி நடந்த கலீபாக்கள், காலவோட்டத்தில் இவ்வுலகில் தோன்றி மறைந்த அறிஞர் பெருமக்கள் அனைவருமாக மேற்கொண்டுள்ளார்கள்.

மேலும் இப்பணியைக் கொண்டே அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்தை மேன்மைப்படுத்தியும் உள்ளான். அதுவே நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதுமாகும். இதன் மூலமே சீர்குழைப்புக் கெதிரான போராட்டம் மேற்கொள்ளப்பட்டு சீர்திருத்தத்திற்கான விதைகள் விதைக்கப்படுகின்றன.

"(விசுவாசங் கொண்டோரே!) மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்,)  நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள்." (ஆலு இம்றான்: 110)

சீர்திருத்தப்பணியானது வெற்றிக்குரிய பாதையாகும். மேலும் அது தீங்குகள், குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு இந்த உம்மத்திற்குச் சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்: "இன்னும் (நபியே!) ஊர்களை அவ்வூரார் சீர்திருத்துபவர்களாக இருக்கும் நிலையில் அநியாயமாக உமதிரட்சகன் அழித்துவிடுபவனாக இல்லை." (ஹூத்: 117)

சீர்திருத்தவாதிகளுக்கே இறுதி முடிவு கைகூடும் என்றும் அவர்களே அனைத்து விடயங்களுக்குமான பொறுப்பைக் கையேற்பார்கள் என்றும் அல்லாஹ் அறிவித்துள்ளான்.

"மேலும் நிச்சயமாக நாம் ஜபூர் (எனும்) வேதத்தில் நல்லுபதேசங்களுக்குப் பின்னர் நிச்சயமாகப் பூமியை என்னுடைய நல்லடியார்கள் தாம் அதை வாரிசாக அடைவார்கள் என்று எழுதிவிட்டோம்." (அல்அன்பியா: 105)

மேலும் குழப்பக்காரர்கள், அத்துமீறக்கூடியவர்கள் ஆகியோரின் இறுதி முடிவு தொடர்பாகவும் அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபித்துள்ளான்.

"உமதிரட்சகன் ஆ(து கூட்டத்)தை எவ்வாறு செய்தான் என்பதை நீர் காணவில்லையா? பெரும் பலசாலிகளாக (தூண்களையுடைய) இரமை (அவரின் பிள்ளைகளை.) அக்கூட்டத்தினர் எத்தகையோரென்றால் (உலகத்திலுள்ள) நகரங்களில் அக்கூட்டத்தினரைப் போன்று (பலசாலிகள் எவரும்) படைக்கப்படவில்லை. இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்(து அதில் வசித்து வந்)தவர்களாக ஸமூ(து கூட்டத்)தையும் இன்னும் முளைகளுடைய (பெரும் படைகளையுடைய) ஃபிர்அவ்னையும் (உமதிரட்சன் எவ்வாறு செய்தான் என்பதை நீர் காணவில்லையா?) அவர்கள் எத்தகையோரென்றால் நகரங்களில் அவர்கள் வரம்பு மீறி நடந்தார்கள். பின்னர் அவைகளில் அவர்கள் குழப்பத்தை அதிகப்படுத்தினார்கள். எனவே, உமதிரட்சன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைப் போட்டான்." (அல்பஜ்ர்: 6 – 13)

எனவே, அல்லாஹ்வின் நேசத்திற்குரிய சகோதரர்களே! உண்மையான சீர்திருத்தவாதிகள் எனப்படுவோர் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலவை நாடக்கூடியவர்களாக இருப்பர். மாறாக குழப்பவாதிகள் எனப்படுவோரே இவை இரண்டையும் சீர்குழைக்கும் நோக்கில் திட்டமிட்டு செயற்படுவோராக இருப்பர்.

உண்மையான சீர்திருத்தவாதிகள் வெளிப்பட்டு மாற்றங்களை ஏற்படுத்தினாலேயன்றி மாற்றம் பெறாமல் காணப்படும் எத்தனையோ விடயங்களை எம்சமுகத்தை விட்டும் கலைத்துவிட முடியாது.

எனவே, அனைவரும் இது விடயத்தில் தம்மால் இயன்ற பங்களிப்புக்களை வழங்க வேண்டும். அல்லாஹ் யாருக்கு சக்தியையும் வசதியையும் தந்துள்ளானோ அவர் தனது சக்திக்கு உட்பட்ட விதத்தில் இதனை மேற்கொள்ள வேண்டும். அந்த விதத்தில் எழுத்தாற்றல் வழங்கப்பட்டவர்கள் தனது பேனாக்களினாலும், அழைப்பாளர்கள் மற்றும் கதீப்மார்கள் தங்களது வார்த்தைகளினாலும், ஆசிரியர்கள் தங்களது வழிகாட்டல்கள், ஒழுக்கவியல் நடவடிக்கைகள் மூலமாகவும், தந்தை தனது வீட்டிலும், ஊழியர்கள் தமது காரியாலத்திலும், இமாம்கள் தமது பள்ளிவாசல்களிலும், குடியிருப்பாளர்கள் தத்தமது கிரமங்களிலும் இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

الحمد لله رب العالمين