இத்தரணியில் சீர்திருத்தவாதிகளாய் வாழ்ந்திடுவோம்! – 01

بسم الله الرحمن الرحيم

மனிதன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் அவனுக்கு எந்த ஒன்றைக் கொண்டு இணைவைக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ளான். இத்தகைய நோக்கத்தில் படைக்கப்பட்ட மனிதன் பூமியை நல்லவற்றைக் கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்றும் அதில் நல்லவற்றைத் தவிர வேறு எதனையும் பரப்பிவிடக்கூடாது என்றும் வழிகாட்டப்பட்டுள்ளான். அந்த அடிப்படையில் சீர்திருத்தமானது எமது மார்க்கம் எதிர்பார்க்கின்ற ஒரு முக்கிய அம்சமாகத் திகழுகின்றது.

உண்மையில், இப்பணியானது சீர்திருத்திவாதிகளுக்கௌ;ளாம் இமாம்களாகத் திகழுகின்ற நபிமார்கள் மற்றும் ரஸூல்மார்கள் அனைவருமாக மேற்கொண்ட ஒரு பணியாகும். அந்த விதத்தில் ஷுஅய்ப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சமூகத்தாரை நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றார்கள்:

"நான் நாடுவதெல்லாம் என்னுடைய சக்திக்கு உட்பட்ட விதத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதே அன்றி வேறில்லை." (ஹூத்: 88)

மேலும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சகோதரனான ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி:

"என்னுடைய சமூகத்தில் என் பிரதிநிதியாக இருந்து சீர்திருத்தமும் செய்வீராக! மேலும், குழப்பம் விளைவிப்பவர்களின் பாதையைப் பின்பற்றாமல் இருப்பீராக!" (அல்அஃராப்: 142) என்று கட்டளையிட்டார்கள்.

மேலும், அல்லாஹுத்தஆலா பூமியில் குழப்பம் செய்வதைத் தடுத்துள்ளான்.

"பூமியில் அது சீர்திருத்தமானதன் பிறகு குழப்பம் செய்யாதீர்கள்!" (அல்அஃராப்: 56)

இன்னும் அல்லாஹுத்தஆலா குழப்பத்தை விரும்பாதவனாகவும் குழப்பம் செய்பவர்களை நேசிக்காதவனாகவும் இருக்கின்றான். அந்தவிதத்தில் சில நபர்களின் நிலை குறித்து அல்லாஹுத்தஆலா தெளிவுபடுத்தும்போது பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.

"அவர்கள் உங்களில் இருந்து திரும்பிவிட்டால் பூமியான அதில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். மேலும், விவசாயத்தையும் சந்ததியையும் அழித்துவிட எத்தனிக்கிறார்கள். அல்லாஹ்வோ குழப்பக்காரர்களை விரும்பமாட்டான்." (அல்பகரா: 205)

அதேபோன்று அல்லாஹுத்தஆலா உபகாரம் செய்வதைக் கொண்டு ஏவுகின்றான். குழப்பம் செய்வதைவிட்டும் தடுத்துள்ளான்.

"அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்ததைப் போன்று நீயும் உபகாரம் செய்வாயாக! பூமியில் குழப்பம் செய்வதைத் தேடாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பக்காரர்களை விரும்பமாட்டான்." (அல்கஸஸ்: 77)

மேலும் அல்லாஹுத்தஆலா சீர்திருத்தவாதிகளையும் குழப்பவாதிகளையும் அல்குர்ஆனில் வேறுபடுத்திக் காட்டியுள்ளான்.

"அல்லது, விசுவாசம் கொண்டு நல்லமல்களைப் புரிந்தவர்களை பூமியில் குழப்பம் செய்கின்றவர்களைப் போன்று ஆக்கிவிடுவோமா அல்லது, பயபக்தியுடையவர்களைப் பாவிகளைப் போன்று ஆக்கிவிடுவோமா?" (ஸாத்: 28)

நிச்சயமாக மனிதர்களில் குழப்பத்தால் கடுமையானவர்கள் நயவஞ்சகர்கள் ஆவர். அவர்கள் சீர்திருத்தவாதிகளின் ஆடைகளை அணிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். மேலும் அவர்கள் சீர்திருத்தத்தை நாடுவதாகத் தங்களை இனம்காட்ட முயற்சி செய்கிறார்கள். இத்தகைவர்கள் குறித்து அல்லாஹுத்தஆலா கூறும் போது:

"பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்கள் என்று அவர்களிடத்தில் கூறப்பட்டால் நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தவாதிகள் என்று கூறுவார்கள். நிச்சயமாக அவர்கள் குழப்பம் செய்பவர்களே! என்றாலும் இதை அவர்கள் உணரமாட்டார்கள்." (அல்பகரா: 11, 12) என்கிறான்.

மேலும் இதனைவிட மிக மோசமான ஒன்றுதான் அவர்கள் சீர்திருத்தவாதிகளை குழப்பவாதிகள் என்று குற்றம் சுமத்த முனைவதாகும். இத்தகைய போக்கு குழப்பவாதிகளுக்கெல்லாம் இமாமாகத் திகழக்கூடிய பிர்அவ்னின் வழிமுறையாகும். அவனே சீர்திருத்தவாதியாக வந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை குழப்பவாதி என்று சித்தரித்தான். மக்களையும் இம்முடிவிற்கு இணங்கவைக்க முயற்சி செய்தான்.

"மேலும் பிர்அவ்ன் கூறினான். என்னை விட்டுவிடுங்கள்! நான் மூஸாவைக் கொண்றுவிடுவேன். அவர் தனது இரட்சகனை அழைத்துக் கொள்ளட்டும். உங்களுடைய மார்க்கத்தை அவர் மாறிவிடுவார் என்று நான் பயப்படுகின்றேன். அல்லது பூமியில் குழப்பத்தை வெளிப்படுத்திவிடுவார் என்று அஞ்சுகின்றேன்." (ஃகாபிர்: 26)

நிச்சயமாக அல்லாஹ் சீர்திருத்தவாதிகளுடன் இருக்கின்றான். அவனே அவர்களைப் பொறுப்பேற்றும் குழப்பவாதிகளுக்கு எதிராக உதவி புரிந்துகொண்டும் இருக்கின்றான். அதனால் தான் இணைவைப்பாளர்களுக்குக் கூறுமாறு தனது நபியிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு கட்டளையிட்டுள்ளான்.

"வேதத்தை இறக்கிய அல்லாஹ்தான் நிச்சயமாக என்னுடைய பாதுகாவலனாவான். மேலும் அவனே நல்லடியார்களைப் பொறுப்பேற்றுப் பாதுகாக்கின்றான்." (அல்அஃராப்: 196)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.