ஆடை கரண்டையைத் தாண்டலாமா? – 02

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வருமாறு ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

பெருமைக்கோ அல்லது பெருமையின்றியோ ஆடையைத் தொங்கவிடுவதின் சட்டம்  என்ன? ஒரு மனிதன் சிறியவனாக இருக்கும்போது தன் குடும்பத்தின் வற்புறுத்தலால் அல்லது வழமையின்படி அவன் இதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால் அதன் சட்டம் என்ன?

அதற்கவர்கள் பின்வருமாறு பதிலளிக்கின்றார்கள்:

ஆண்களைப் பொருத்தளவில் அதனுடைய சட்டம் ஹராமாகும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆடையில் கரண்டையின் கீழ் இறங்கியது நரகத்திலாகும்.

-     புஹாரீ: 5787

அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மூவர் உள்ளனர்;. மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான், அவர்களைப் பார்க்கமாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு. அவர்கள் யாரெனில் கொடுத்த தர்மத்தை சொல்லிக்காட்டுபவர், கரண்டைக்குக் கீழ் ஆடையணிபவர், பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை விற்பனை செய்பவர்.

இந்த இரண்டு ஹதீஸ்களும், இக்கருத்தையுடைய ஏனைய ஹதீஸ்களும் யார் பெருமைக்காக அல்லது வேறு காரணங்களுக்காக கரண்டையின் கீழ் அணிகிறாரோ யாவரையும் உள்ளடக்கும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொதுப்படையாகவே கூறியுள்ளார்கள், குறிப்பாக்கவில்லை. கரண்டையின் கீழ் அணிவது பெருமைக்காக இருந்தால் பாவம் பெரிதாகவும் தண்டனை கடுமையானதாகவும் இருக்கும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் தன் ஆடையை பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ மறுமையில் அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.

-     புஹாரீ: 3665, முஸ்லிம்: 2085

கரண்டைக்காலின் கீழ் அணிவது தடை என்பது பெருமையின் நாட்டத்தை வைத்தே குறிப்பாக்கப்பட்டுள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. மாற்றமாக பெருமையின் நாட்டம் குறித்த ஆடையை அணியும் போது இல்லாவிடினும் அச்செயற்பாடு பெருமையை அடிப்படையாகக் கொண்டதே என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்தி நிற்கின்றது.

ஆடையைக் கரண்டையின் கீழ் தொங்கவிடுவதை நான் உமக்கு எச்சரிக்கின்றேன். ஏனெனில், அது பெருமையைச் சார்ந்ததாகும்.

 - அபூதாவூத்: 4084, நஸாஈ: 9691-9693

நபியவர்கள் கரண்டைக்காலின் கீழ் அணிவது பூராகவே பெருமையைச் சார்ந்ததாக ஆக்கியுள்ளார்கள். ஏனெனில், பெரும்பாலாக அத்தகைய ஆடைகள் அவ்வாறேயின்றி அணியப்படுவதில்லை. யார் பெருமைக்கு கரண்டையின் கீழ் அணியவில்லையோ அவருடைய செயல் அதற்கு சாதனமாக அமைகிறது. சாதனங்களுக்கு அவைகளின் நோக்கங்களுடைய சட்டம் கொடுக்கப்படும் என்பது அடிப்படை. மேலும், அதிலே வீண்விரயமும் உண்டு. அவருடைய ஆடை நஜீஸிலும் அழுக்குகளிலும் தொடுவதுண்டு. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பின்வருமாறு ஒரு செய்தி வந்துள்ளது: அவர் ஆடை தரையில் தொடும் ஒரு வாலிபனைக் கண்டபோது உன் ஆடையை உயர்த்து, அது உன் இறைவனுக்கு மிகப்பயந்ததாகவும் உன் ஆடைக்கு மிகத் தூய்மையானதாகவும் இருக்கும் என  அவருக்குக் கூறினார்கள்.

-     புஹாரீ: 3700

அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய ஆடை நான் கவனமாக இருந்தாலே தவிர தொங்கிவிடுகின்றது என அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: நீங்கள் அதைப் பெருமைக்காகச் செய்பவராக இல்லை என அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறியதின் நாட்டம் என்னவெனில்: யார் தன் ஆடை தொங்கும்போது அதை அவர் உயர்த்த கவனமெடுக்கின்றாரோ அவர் பெருமைக்காக தன் ஆடையை இழுப்பவர்களில் ஒருவராக கணிக்கப்படமாட்டார் என்பதேயாகும். ஏனெனில், அவர் அதைக் கரண்டைக் காலின் கீழ் தொங்கவிடவில்லை. மாறாக அது அவரையும் மீறி தொங்கிவிடுகின்றது. ஆகவே, அதை அவர் உயர்த்தி அதில் கவனமெடுக்கிறார். இது அனுமதிக்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், யார் அவைகளை வேண்டுமென்றே தொங்கவிடுகின்றாரோ அது கனமான கம்பளியாக அல்லது சிறிய காட்சட்டையாக அல்லது வேட்டியாக அல்லது நீண்ட ஆடையாக இருந்தாலும் தண்டனைக்குள் நுழையக்கூடியவரே. அவர் தன் ஆடையைக் கரண்டையின் கீழ் தொங்கவிடுவதற்கு அனுமதிக்கப்பட்டவரல்ல. ஏனெனில், கரண்டையின் கீழ் அணிவதைத் தடை செய்யும் ஹதீஸ்கள் அவைகளின் மொழி, கருத்து, நாட்டங்களை வைத்து இந்த விடயத்தை பொதிந்துகொள்ளும். ஆகவே, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கரண்டையின் கீழ் ஆடையணிவதில்  எச்சரிக்கையாக இருப்பது கடமையாகும். ஸஹீஹான ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தவும் அல்லாஹ்வின் கோபத்தைவிட்டும், தண்டனையைவிட்டும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவும் இது விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து, ஒருவனுடைய ஆடை கரண்டையின் கீழ் இறங்காமலிருப்பது கடமையாகும்.

- அறபியில்: அஷ்ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்

- தமிழாக்கம்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்