அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 08

بسم الله الرحمن الرحيم

5. அல்மலிக் - ஆட்சியாளன் (அல்ஹஷ்ர்: 23)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். “ஒவ்வோர் இரவும் இரவின் மூன்றில் முதல் பகுதி முடியும் போது அல்லாஹ் உலகின் வானத்திற்கு இறங்கி: நான் தான் அரசன்! நான் தான் அரசன்!” என்று கூறுவான். மேலும், “யார் என்னை அழைக்கிறாரோ அவருக்கு நான் விடையளிப்பேன். யார் என்னிடம் கேட்கிறாரோ அவருக்கு நான் கொடுப்பேன். யார் என்னிடம் பாவமன்னிப்புக் கேட்கிறாரோ அவருக்கு நான் மன்னிப்பு வழங்குவேன்” என்று கூறுவான். இப்படி அவன் வெளிக்கும் வரை இருக்கிறான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)

இச்செய்தி மூலம் அல்லாஹ் அல்மலிக் எனும் ஆட்சியாளனாக இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் தனது அல்கவாஇதுல் முஸ்லா என்ற புத்தகக்தில் இரண்டாவது கோட்பாடாகக் கூறும் போது: “அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் (அவன் ஒருவனுக்கு மாத்திரம் வைக்கப்பட்ட) பெயர்களும் பண்புகளுமாகும். எனவே, அல்லாஹ்வின் 'ஆட்சி செய்பவன்' என்ற பெயர் ஆட்சி செய்தல் என்ற (செயல் சார்ந்த) பண்பை அறிவிக்கின்றது” என்கிறார்.

6. அல்குத்தூஸ் - பரிசுத்தமானவன் (அல்ஹஷ்ர்: 23)

7. அஸ்ஸலாம் - சாந்தியானவன் (அல்ஹஷ்ர்: 23)

அல்லாஹ்வின் பெயர்கள் பற்றி இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் தனது அல்கவாஇதுல் முஸ்லா என்ற புத்தகத்தில் கூறும்போது: “அல்லாஹ்வின் பெயர்கள் படைப்புகளுடன் தொடர்புபடாத பண்புகளை அறிவிக்குமாயின் அப்பெயர்கள் இரண்டு விடயங்களைப் பொதிந்திருக்கும்:

1.    அப்பெயரை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம்.

2.    அப்பெயர் பொதிந்திருக்கும் பண்பை அல்லாஹ்வுக்கு நாம் உறுதிப்படுத்துவோம்.”

உதாரணமாக அல்குத்தூஸ் - பரிசுத்தமானவன், அஸ்ஸலாம் - சாந்தியானவன்

இப்பெயர்களுக்குப் படைப்புடன் எந்தத் தொடர்புமில்லை. பரிசுத்தமாக இருத்தல், சாந்தியாக இருத்தல் என்பது அல்லாஹ்வுடன் மாத்திரம் தொடர்புபட்ட இரு பெயர்களாகும். எனவே, இப்பெயர்களை நாம் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தி அப்பெயர்கள் பொதிந்திருக்கும் பண்புகளான பரிசுத்தமாக இருத்தல், சாந்தியாக இருத்தல் ஆகிய பண்புகளையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம்.

8. அல்முஃமின் - அற்புதங்கள் மூலம் உண்மைப்படுத்துபவன் (அல்ஹஷ்ர்: 23)

9. அல்முஹய்மின் - கண்காணிப்பவன் (அல்ஹஷ்ர்: 23)

10. அல்அஸீஸ் - யாவற்றையும் மிகைப்பவன் (அல்ஹஷ்ர்: 23)

அல்கவாஇதுல் முஸ்லாவில் மூன்றாவது கோட்பாடாக ஷேய்ஹ் அவர்கள் கூறும்போது: “அல்லாஹ்வின் பெயர்கள் படைப்புகளுடன் தொடர்புபட்ட பண்புகளை அறிவிக்குமாயின் அப்பெயர்களில் மூன்று விடயங்கள் பொதிந்து காணப்படும்.

1.    அப்பெயரை நாம் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம்.

2.    அப்பெயர் பொதிந்திருக்கும் செயல் சார்ந்த பண்பையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம்.

3.    அப்பெயர் பொதிந்திருக்கும் சட்டத்தை உறுதிப்படுத்துவோம்.”

உதாரணமாக அல்முஹய்மின் - கண்காணிப்பவன் இப்பெயரைப் பொறுத்தவரை இதற்கு படைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது. எனவே, நாம் இப்பெயரை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம். அதேபோன்று, இப்பெயர் பொதிந்திருக்கும் பண்பான கண்காணித்தல் என்ற பண்பையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம். அவ்வாறே, சிறிய பெரிய அற்பமான  இரகசியமான பரகசியமான இப்படி அனைத்தையும் கண்காணிக்கிறான் என்று நாம் கூறுவோம்.

11. அல்ஜப்பார் - அடக்கியாள்பவன் (அல்ஹஷ்ர்: 23)

12. அல்முதகப்பிர் - பெறுமைக்குரியவன் (அல்ஹஷ்ர்: 23)

13. அல்ஹாலிக் - படைப்பவன் (அல்ஹஷ்ர்: 24)

14. அல்பாரி - தோற்றுவிப்பவன் (அல்ஹஷ்ர்: 24)

15. அல்முஸவ்விர் - உருவமமைப்பவன் (அல்ஹஷ்ர்: 24)

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அல்கவாஇதுல் முஸ்லாவில் ஜந்தாவது தியரியாக: “அல்லாஹ்வின் பெயர்கள் விடயத்தில் மார்க்கம் எந்த இடத்தில் நின்றதோ அந்த இடத்தில் நின்றுகொள்ள வேண்டும். அதிலே புத்தியை நுழைக்க எந்த இடமும் கிடையாது” என்று கூறியுள்ளார். அல்லாஹ் ஸூரதுல் அஹ்ராப் :33 இல் சில விடயங்களை ஹராமானவை என்று கூறிக்கொண்டுவந்து நீங்கள் அறியாதவைகளை அல்லாஹ்வின் மீது கூறுவதையும் ஹராமாக்கித் தடுத்துள்ளான்” என்று கூறுகிறான். எனவே, நாம் அல்லாஹ்வின் பெயர்கள் விடயத்தில் இப்படி நடந்து கொள்வோம்.

16. அல்கப்பார் - மிக்க மன்னிப்பவன்  (ஸாத்: 66)

17. அல்கஹ்ஹார் - அடக்கியாளுபவன் (அர்ரஃது: 16)

18. அல்வஹ்ஹாப் - கொடையாளன் (ஸாத்: 09)

19. அர்ரஸ்ஸாக் - வாழ்வாதாரம் அளிப்பவன் (அத்தாரியாத்: 58)

20. அல்பத்தாஹ் - சிறந்த தீர்ப்பாளன் (ஸபஃ: 26)

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: “அல்லாஹ்வே! நான் உனக்குரிய ஒவ்வொரு பெயர்கள் மீலமும் உன்னிடம் கேட்கிறேன். அப்பெயர்கள் நீ உனக்கு வைத்ததாக இருக்கட்டும் அல்லது, உன் வேதத்தில் இறக்கியவையாக இருக்கட்டும். அல்லது, உன் படைப்பில் யாருக்காவது கற்றுக்கொடுத்தவையாக இருக்கட்டும். அல்லது, உன் மறைவான அறிவில் மறைத்து வைத்தவையாக இருக்கட்டும் இப்படியான உன் அனைத்துப் பெயர்களைக் கொண்டும் உன்னிடம் நான் கேட்கிறேன்” என்று பிராத்தித்தார்கள். (அஹ்மத், ஹாகிம்)

எனவே, அல்லாஹ் தனது மறைவான அறிவில் மறைத்து வைத்த பெயர்கள் இவ்வளவுதான் என்று யாருக்கும் கூற முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றான: “நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூற்றில் ஒன்று குறைவான தொண்ணூற்றொன்பது பெயர்கள் உள்ளன. அவைகளை யார் மட்டிடுகிறாரோ அவர் சுவனம் நுழைவார்” என்ற கூற்றைப் பொறுத்தவரை இந்த அளவு தான் என்று வரையறுக்க முடியாது. வரையறுப்பதாக இருந்தால் அல்லாஹ்வுக்கு என்று வராமல் அல்லாஹ்வின் பெயர்கள் 99 என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்க வேண்டும். இப்படிக் கூறாமல் அல்லாஹ்வுக்கு என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே, இந்த ஹதீஸின் விளக்கம் அல்லாஹ்வுக்கு நாம் அறிந்த (அறியாத) பல பெயர்கள் உள்ளன அவைகளில் 99 பெயர்கள் உள்ளன. அவைகளை யார் கண்டறிந்து அதன்படி வாழ்கிறாரோ அவர் சுவனம் நுளைவார்” என்பதாகும். (கவாஇதுல் முஸ்லா எனும் நூலின் ஆறாவது தியரி)

-     தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்கர்