அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 07

بسم الله الرحمن الرحيم

50. அல்லாஹ்வின் செயல்களை எம்மால் இத்தனைதான் என்று மட்டிட முடியாது. ஏனெனில், அவன் நாடுபவைகளைச் செய்கிறான்.

அல்லாஹ் சூரதுல் புரூஜின் 16ம் வசனத்தில் கூறும்போது: 'அவன் நாடியதைச் செய்கிறான்' எனக் கூறுகிறான். எனவே, எங்களுக்கு அல்லாஹ்வின் பெயர்களை மற்றும் அவனின் செயல்களை இவ்வளவுதான் என்று மட்டிட முடியாது.

நாம் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளில் 25ஐப் படித்தோம். இன்னும் மேலதிகமாகக் கூறுவதாயின்...

01.   அல்லாஹ்வின் அழகிய ஒவ்வொரு பெயரிலுமிருந்தும் பல செயல் சார்ந்த பண்புகள் எடுக்கப்படுகின்றன. உதாரணமாக: அல்ஹாலிக் படைப்பவன். இப்பெயரில் இருந்து படைத்தல், அறிதல், நுட்பமாகச் செயற்படுதல் இதுபோன்ற செயல் சார்ந்த பண்புகள் எடுக்கப்படுகின்றன.

02.   அதேபோல் படைப்புக்களின் செயல்களில் எதுவெல்லாம் குறையற்ற பூரணமான செயல்களாக இருக்கின்றனவோ அவைகளையும் நாம் ஆதாரத்துடன் அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத்தக்க விதத்தில் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளாக உறுதிப்படுத்துவோம். உதாரணமாக:

01.   அனுப்புதல் (105: 03)

02.   விரிவுபடுத்துதல் (94: 01)

03.   தயார்படுத்துதல் (65: 10)

04.   எழுதுதல் (58: 21)

05.   பலப்படுத்துதல் (58: 22) போன்றவைகளை அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத் தக்கவிதத்தில் அவன் செய்கிறான் என்று நாம் நம்புவோம்.

51. அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்

எங்களைப் பொறுத்தமட்டில் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் இத்தனை தான் என்று மட்டிட முடியாது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை: 'இறைவா! உனக்குரிய அனைத்துப் பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடத்தில் கேட்கிறேன். அப்பெயர்கள் நீ உனக்கே வைத்துக் கொண்ட பெயர்களாக இருந்தாலும் அல்லது நீ அவைகளை உனது வேதத்தில் கூறியதாக இருந்தாலும் அல்லது நீ உனது அடியார்களில் யாருக்காவது கற்றுக் கொடுத்தவையாக இருந்தாலும் அல்லது உனது மறைவான அறிவில் மறைத்து வைத்தவையாக இருந்தாலும் சரியே! அப்படியான அனைத்துப் பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடம் கேட்கிறேன்' என்று பிராத்தித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத் - 4091)

எனவே, இந்த ஹதீஸ் மூலம் படைப்புகள் அறியாத அல்லாஹ்வின் பெயர்கள் பல இருக்கின்றன எனவும் எம்மால் அவைகளை மட்டிட முடியாது எனவும் புரிந்து கொள்ளலாம்.

அப்படியான மட்டிட முடியாத அல்லாஹ்வின் பெயர்களிலிருந்தும் சிலவற்றைப் பற்றிப் பேசக்கூடிய செய்தியான 'நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைவான தொன்னூற்றொன்பது பெயர்கள் உள்ளன. அவைகளை யார் மட்டிடுகிறாரோ அவர் சுவனம் நுழைவார்.' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்) என்பதை ஏற்றுக் கொள்வோம். இன்னும், குர்ஆனிலும் ஸுன்னாவிலும் அல்லாஹ்வின் பெயர்கள் பல இடம்பெற்றுள்ளன. அவைகளை நாம் தொடர்ந்து படிப்போம்.

1. அல்லாஹ் - வணங்கப்படுபவன் (அல்பகரா: 255)

2. அல்இலாஹ் - வணங்கப்படுபவன் (அல்பகரா: 256)

அல்லாஹ் என்ற பெயரைப் பொறுத்தவரையில் ஏனைய அல்லாஹ்வின் பெயர்களால் பின்துயரப்பட்டு வரும் ஒரு பெயராக விளங்குகின்றது. அல்லாஹ் சூரா இப்ராஹீமின் 1, 2 ஆகிய வசனங்களில் அவனின் அழகிய பெயர்கள் சிலவற்றை முதலில் கூறிவிட்டு அவ்வழகிய பெயர்கள் யாரை குறிக்கின்றன என்பதைப் பற்றிக் கூறும் போது 'அல்லாஹ்' என்ற பெயரை சுட்டிக்கட்டி தெளிவுபடுத்துகின்றான். ஆகவே, அல்லாஹ் என்ற பெயரானது ஏனைய அல்லாஹ்வின் பெயர்களைக் கொண்டு துயரப்பட்டு வரும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அதேபோன்று அல்லாஹ் என்ற பெயர் 'வணங்கப்படுபவன்' என்ற கருத்தைத்தரும். மேலும், இப்பெயா் இலாஹ் என்ற சொல்லிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

3. அர்ரஹ்மான் - இவ்வுலகில் முஸ்லிம் காபிர் என்று வேறுபாடு இன்றி இரக்கம் காட்டுவன் (அல்பகரா: 02)

அல்லாஹ்வின் இப்பெயரிலிருந்து பூரணமாக இரக்கம் காட்டுதல் என்ற செயல் சார்ந்த பண்பு எடுக்கப்படும்.

ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில சிறைக்கைதிகள் வந்தார்கள். அப்போது அச்சிறைக்கைதிகளில் உள்ள ஒரு பெண் தன் குழந்தைக்கு மார்பகத்திலிருந்து பால் புகட்ட நாடி நெஞ்சுடன் அணைத்துக் கொண்டு பால் புகட்டினாள். (இச்செயலை அவதானித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: 'இப்பெண் தன் குழந்தையை நெருப்பில் வீசுவதை விரும்புவாளா?' எனக் கேட்டார்கள். அதற்கு அங்கிருந்தவர்கள்: 'இல்லை!' எனக் கூற, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: 'இப்பெண் தன் குழந்தைக்குக் காட்டும் இரக்கத்தைவிட அல்லாஹ் தன் அடியார்களுக்கு இரக்கம் காட்டுகிறான்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

நாம் இச்செய்தி மூலம் அல்லாஹ்வுக்கு இரக்கம் காட்டுதல் என்ற செயல் சார்ந்த பண்பை உறுதிப்படுத்தி, இரக்கம் காட்டக்கூடியவன் என்ற பெயர் அல்லாஹ்வின் பெயர்களில் நின்றும் உள்ளதாகும் என்று நம்புவோம்.

தாய் தனது பிள்ளைக்குக் காட்டும் அன்பைவிடப் பண்மடங்கு இரக்கமுள்ளவனே! எழுப்பப்படும் அந்நாளில் எங்களை இழிவுபடுத்திவிடாதே! எந்தச் செல்வமும் பிள்ளைகளும் பிரயோசனமளிக்காத அந்நாளில் எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!

4. அர்ரஹீம் - மறுமையில் முஃமீன்களுக்கு மாத்திரம் இரக்கம் காட்டுபவன் (அல்பகரா: 02)

அல்லாஹ் சூரா அஹ்ஸாபின் 43ம் வசனத்தில் கூறும்போது: '(அல்லாஹ்வான) அவன் முஃமீன்களுடன் இரக்கமுள்ளவனாக இருக்கிறான்.'

மேலும், இப்பெயரைப் பெறுத்தவரை அல்லாஹ்வின் பெயர்களான அர்ரஹ்மான், அல்பர், அல்கபூர், அல்அஸீஸ், அத்தவ்வாப், அர்ரஊப் போன்றவற்றுடன் இணைந்து வந்துள்ளன. இப்படி இணைந்து வருவது அல்லாஹ்வின் ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாகக் கவனிக்கும் போது அழகையும் பூரணத்துவத்தையும் அறிவிக்கின்றன. இவைகள் அல்லாத வேறு அல்லாஹ்வின் பெயர்களுடன் இணைந்து வரும் போது பூரணத்துவத்திற்கு மேல் பூரணத்துவத்தை அறிவிக்கின்றன.

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்  தனது நூலான 'அல்கவாஇதுல் முஸ்லா' என்ற நூலில் முதலாவது கோட்பாடாகக் கூறும் போது: 'அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்களும் அழகானவை, அழகின் உச்ச நிலையை அடைந்தவை' என்று கூறியுள்ளார்.

-      இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-      தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்கர்