அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 06

بسم الله الرحمن الرحيم

49. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

24. சட்ட ரீதியாக நாடுதல்

அல்லாஹ்வின் நாட்டத்தில் இரண்டாவது வகை ஷரஇய்யாவாக - மார்க்க சட்ட ரீதியாக - அல்லாஹ் நாடுவதாகும். இந்த நாட்டம் அல்லாஹ் விரும்புகின்ற விடயத்தில் மாத்திரம் தான் நிகழும். இந்த நாட்டம் முஃமின்களின் விடயத்தில் மாத்திரம் நடைபெறும்.

வழிகெட்ட கூட்டம் அல்லாஹ்வின் நாட்டத்திற்குக் கொடுத்த விளக்கமும் ஸலபிகளான நமது விளக்கமும்

1. ஜபரிய்யா

இவ்வழிகெட்ட கூட்டம் அல்லாஹ்வின் நாட்டம் என்பது அல்லாஹ் விரும்பும் விடயங்கள் என்று கூறுகின்றது. அப்படியாயின் நிராகரிப்பு, விபச்சாரம், களவு போன்றவைகள் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டால், அதற்கு அவர்கள் அல்லாஹ் தடுத்த விடயங்களும் அல்லாஹ்வுக்கு விருப்பமானவை என்றும் அகிலத்தில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு விருப்பமானவை என்றும் கூறுகிறார்கள். இது பிழையான பாதிலாகும். இப்படியான கருத்துக்களைக் கூறுவதை விட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!

2. கதரிய்யா

இவ்வழிகெட்ட கூட்டமும் அல்லாஹ்வின் நாட்டம் என்பது அல்லாஹ் விரும்பும் விடயங்களாகும் என்று கூறி இது விடயத்தில் ஜபரிய்யாக்களுக்கு இவர்கள் உடன்படுகிறார்கள். ஆனால், இவர்களிடத்தில் அப்படியாயின் நிராகரிப்பு, விபச்சாரம், களவு போன்றவைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டால், இவ்வழிகெட்ட கூட்டமான கதரிய்யாக்கள் இப்படியான அல்லாஹ்வுக்கு விருப்பமில்லாத செயல்களை அல்லாஹ் படைக்கவில்லை என்றும் இவைகளை மனிதன் தான் படைத்துக் கொள்கிறான் என்றும் கூறுகின்றது. இதுவும் பிழையான பதிலாகும். இப்படியான கருத்துக்களை கூறுவதை விட்டும் எம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக!

இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற்ற ஸலபிகளான எமது விளக்கமாவது: எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வழிகேடர்களின் கூற்றுகளிலிருந்து எம்மைப் பாதுகாக்கும் முகமாக அல்லாஹ்வின் நாட்டத்தை இரு வகைகளாகப் பிரிப்போம்.

முதலாவது: கவ்னிய்யா

இரண்டாவது: ஷரஇய்யா

கவ்னிய்யாவான நாட்டத்தைப் பொறுத்தவரை அது அல்லாஹ் விரும்பும் விடயத்திலும் நிகழும் அல்லாஹ் விரும்பாத விடயத்திலும் நிகழும். இரு நாட்டமும் நிகழ்ந்தே தீரும். இவ்விரண்டை படைத்தவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்றும், அல்லாஹ்வின் ஷரஇய்யாவான நாட்டம் அல்லாஹ் விரும்புகின்ற விடயத்தில் மாத்திரம் தான் நிகழும் என்றும் நம்புவோம். அதேபோல், செயல்களில் நல்லதும் கெட்டதும் அல்லாஹ்வின் படைப்புக்களாகும் என்றும் ஏற்றிருக்கின்றோம்.

மேலும், கவ்னிய்யாவைப் பொறுத்தவரை அதன் மூலம் அல்லாஹ்வின் நாட்டம் நடைபெறும். அது அல்லாஹ்வுக்கு விருப்பமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்நாட்டம் சிலவேளை அல்லாஹ் விரும்பும் விடயத்திலும் நிகழும், அவன் விரும்பாத விடயத்திலும் நிகழும். உதாரணம்: அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ் விரும்பும் நாட்டம். அதன்படி அது நிகழ்ந்தது. அதேபோல், அபூஜஹ்ல் நிராகரிக்க வேண்டும் என்பது அல்லாஹ் விரும்பாத கோபத்துக்குரிய நாட்டம். அதுவும் நிகழ்ந்தது. அல்லாஹ் எம் அனைவரையும் இந்த வெற்றி பெற்ற கூட்டத்தில் வாழ்ந்து அதிலே மரணிக்கவும் செய்வானாக!

50. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

25. அவன் நாடுபவைகளை செய்பவன்

அல்லாஹ் ஸூரதுல் புரூஜ்: 06ம் வசனத்தில் கூறும் போது: 'அவன் நாடியதை செய்பவன்' எனக் கூறுகிறான்.

ஆக, ஸலபிகளான எங்களுக்கு அல்லாஹ்வின் பெயர்கள், அவனின் செயல்கள் இவ்வளவு தான் என வரையறுக்க முடியாது. ஆதலால், அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள் 25ஐ நாம் இங்கு கொண்டுவந்தோம். இன்னும், அதிகரிப்பதாயின் அல்லாஹ்வின் அழகிய ஒவ்வொரு பெயர்களிலிருந்தும் பல செயல் சார்ந்த பண்புகளை எடுக்க முடியும். உதாரணமாக: அல்லாஹ்வின் பெயர்களில் உள்ளது தான் 'அல்ஹாலிக்' என்பது. இப்பெயரிலிருந்து படைத்தல், அறிதல் இது போன்ற செயல் சார்ந்த பண்புகள் எடுக்கப்படும். அதேபோல், படைப்புகளிடம் எதுவெல்லாம் குறையற்ற, பூரணமான செயல்களாக இருக்கிறனவோ அவைகளையும் நாம் ஆதாரம் இருந்தால் ஆதாரத்துடன் அவைகளை அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத் தக்க விதத்தில் உறுதிப்படுத்துவோம். இதனடிப்படையில் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளில் உள்ளவையாக: அனுப்புதல் (105:3), விரிவுபடுத்துதல், தயார்படுத்துதல் (65:10), எழுதுதல் (58:21), பலப்படுத்துதல் (58:22) இது போன்றவைகளை அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத் தக்க விதத்தில் உறுதிப்படுத்துவோம்.

-      இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-      தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்கர்