அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 05

بسم الله الرحمن الرحيم

41. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

16. அழகாக்குதல்

நாங்கள் அழகாக்குதல் அல்லாஹ்வின் பண்புகளில் உள்ள ஒரு பண்பாகும் என்றும் அது அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத் தக்கவிதத்தில் இருக்கும் என்றும் ஈமான் கொண்டுள்ளோம். நாங்கள் இதற்கு ஆதாரமாக ஸூரதுல் முஃமினின் 64ம் வசனமான: 'அவன் உங்களை உருவமைத்து, பின்பு உங்கள் தோற்றங்களையும் அழகாக்கினான்' என்ற வசனத்தையும் இதே போன்ற இன்னும் பல வசனங்களைக் கொண்டும் உறுதிப்படுத்துகின்றோம்.

42. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

17. தடுமாற்றமடைதல்

ஸலபி இமாமான இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 'தடுமாற்றம் என்ற பண்பை பொதுப்படையாக அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவது கூடாது. ஏனெனில், அல்லாஹுத்தஆலா தடுமாற்றத்தை முஃமினின் உயிரைக் கைப்பற்றும் விடயத்தில் தான் கூறியுள்ளான். அது குறித்த ஹதீஸுல் குத்ஸியானது: 'என் முஃமினான அடியானின் உயிரைக் கைப்பற்றும் போது நான் தடுமாற்றமடைவது போன்று எந்த விடயத்திலுல் நான் தடுமாற்றமடைவதில்லை.' (புஹாரி: 6502) இத்தடுமாற்றம் ஆதமின் பிள்ளைகள் தடுமாற்றமடைவது போன்று சந்தேகத்தின் மூலம் ஏற்படுவது கிடையாது. மாறாக, அது அவ்வடியானுடன் உள்ள இரக்கத்தினால் ஏற்படும் தடுமாற்றமாகும்.' (லிகாஉல் பாபில் மப்தூஹ்)

43. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

18. சோர்வடைதல்

அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்  கூறுகிறார்: 'சோர்வடைதல் என்ற பண்பானது, புஹாரி முஸ்லிமில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: 'நிச்சயமாக நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைய மாட்டான்' நாங்கள் இந்த ஹதீஸில் வருவதுபோன்று உறுதிப்படுத்துவோம். மேலும், அது விடயத்தில் நாம் அல்லாஹ் கூறுவது போன்று: 'அவனைப்போன்று எதுவும் இல்லை. அவன் பார்ப்பவனும் கேட்பவனுமாவான்' என்றும் கூறுவோம்.' (அஷ்ஷூரா: 11) (அல்கன்ஸுஸ் ஸமீன்)

44. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

19. வாசனையை நுகர்தல்

அஹ்லுல் ஹதீஸில் உள்ள இமாம் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னி பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் பண்பான 'வாசத்தை நுகர்தல்' என்ற விடயத்தில் கூறும் போது: 'நோன்பாளியின் வாயிலிருந்நு வரும் வாடையை அல்லாஹ் நுகர்வதைப் பொறுத்தமட்டில் அது அல்லாஹ்வின் உயர்ந்த பண்புகளில் உள்ளதாகும். அதை படைப்புகளுடன் ஒப்பிடாமல் ஈமான் கொள்வது கட்டாயமாகும்.' என்று கூறியுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும்போது: 'என் ஆத்மா எவன் கரம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாசம் அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாசத்தைவிட மிக வாசமுடையதாக இருக்கும் என்று கூறினார்கள்.' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

45. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

20. மிகைத்தல்

ஸலபிகளைச் சேர்ந்த அறிஞர் அபூ முஹம்மத் அப்துல் ஹமீத் இப்னு யஹ்யா இப்னு ஸைத் அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் ஸூரது யூசுபின் 21ம் வசனமான: 'அல்லாஹ் தனது காரியத்தில் மிகைப்பவன். எனினும், மக்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்' என்ற வசனத்தில் வரும் 'மிகைப்பவன்' என்பது அல்லாஹ்வின் பெயரில் உள்ளதா? அல்லது அவனின் பண்புகளில் உள்ளதா? எனக் கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலாக: 'அது அல்லாஹ்வின் பண்புகளில் உள்ளதாகும், அவனின் பெயர்களில் உள்ளதல்ல' என்று கூறினார்கள்.

46. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

21. மறந்தது போன்று விட்டுவிடுதல்

நாங்கள் இப்பண்பை அஹ்லுஸ் ஸுன்னாவின் இமாமான அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய விளக்கத்தைப் போன்று விளங்குவோம். அவ்விளக்கமாவது: அல்லாஹ்வின் கூற்றான ஸூரதுல் ஜாஸியாவின் 34ம் வசனத்தில் 'உங்களது இந்நாளில் சந்திப்பை நீங்கள் மறந்தது போல் உங்களை நாம் மறந்துவிடுவோம்' என்றால் இதன் விளக்கம்: 'உங்களது இந்நாளின் சந்திப்பை மறந்து அமலை விட்டது போன்று நாம் உங்களை நரகத்தில் விட்டுவிடுவோம்' என்பதாகும். (அர்ரத்து அலஸ் ஸனாதிகதி வல் ஜஹ்மிய்யா)

47. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

22. சாபமிடுதல்

அஷ்ஷெய்க் கலீல் ஹர்ராஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் வார்த்தையான 'யார் ஒரு முஃமினை வேண்டுமென்று கொலை செய்கிறானோ, அவனின் கூலி நரகமாகும். இன்னும், அல்லாஹ் கோபப்பட்டு அவனை சபிப்பான்' என்ற அந்நிஸா அத்தியாயத்தின் 93ம் வசனத்தைப் பற்றி அவர்கள் கூறும்போது: 'இந்த வசனங்கள் அல்லாஹ்வின் செயல் சார்ந்த சில பண்புகளை உறுதிப்படுத்துவதை பொதிந்துள்ளன. அவை பொருந்திக்கொள்ளல், கோபப்படுதல், சபித்தல், வெறுத்தல் போன்றவையாகும். இப்பண்புகள் அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத் தக்கவிதத்தில் உண்மையானவையாகும். இவைகளிலிருந்து படைப்புகளுக்கு ஒன்றையும் ஒப்பாக்க முடியாது. அதேபோல் இவைகளிலிருந்து படைப்புகள் வேண்டி நிற்பதை வேண்டி நிற்கவும் மாட்டாது' என்று கூறினார்கள். (ஷரஹுல் அகீததில் வாஸிதிய்யா)

48. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

23. கவ்னிய்யா - அமைப்பு ரீதியாக - நாடுதல்

அஹ்லுஸ் ஸுன்னாக்கள் அல்லாஹ்வின் நாட்டத்தை இரு வகையாகப் பிரிப்பார்கள்.

முதலாவது: கவ்னிய்யா - அமைப்பு ரீதியாக - நாடுதல்

இரண்டாவது: ஷரஇய்யா - சட்ட ரீதியாக - நாடுதல்

கவ்னிய்யாவாக அல்லாஹ் நாடுவது என்பது: அல்லாஹ் விரும்புகின்ற விடயமான ஈமான் கொள்ளல், தொழுதல், அவனை திக்ர் செய்தல் போன்ற விடயங்களிலும் நிகழும், அவன் விரும்பாத களவெடுத்தல், பித்அத் செய்தல், மது அருந்துதல் போன்ற விடயங்களிலும் நிகழும். இவ்வகை நாட்டம் கட்டாயம் நிகழ்ந்தே தீரும். ஏனெனில், நல்லவற்றைப் படைத்தவனும் அல்லாஹ் தான் மோசமான கெட்டவைகளைப் படைத்தவனும் அல்லாஹ் தான். உதாரணம் மூலம் கூறுவதென்றால், அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்று அமைந்த அல்லாஹ்வின் நாட்டம் கவ்னிய்யாவாக உள்ளது. இதை நாங்கள் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈமான் கொண்டு முஃமீன்களில் உள்ளவராக மாறினார் என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால், அல்லாஹுத்தஆலா அபூ ஜஹ்ல் ஈமான் கொள்ள வேண்டும் என்பதை கவ்னிய்யனாக நாடவில்லை. இதை நாம் அபூஜஹ்ல் ஈமானை மறுத்து காபிர்களில் உள்ளவனாக மாறிவிட்டான் என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம். இந்த கவ்னிய்யாவான நாட்டம் இருவரில் ஒருவருக்குத்தான் கிடைத்தது.

-      இன்ஷா அல்லாஹ் தொடரும்.

தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்கர்